Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

Little Gourd = Little god

நன்றி குங்குமம் தோழி

‘‘‘மங்கை எந்தன்

கோவைக்காய்...

அத்திக்காய்... காய்... காய்...”

எனக் கவிஞர்களும், ‘‘கோவமா இருந்தா கோவப்பழம் மாதிரி சிவந்துடறா என் செல்லம்...” என காதலர்களும் உவமை காட்டும் கோவைக்காயை, Little Gourd என்கின்றனர் மேற்கத்தியர்கள். இதனை ஆசிரியர் வகுப்பில் ‘லிட்டில் காட்’ எனச் சொல்ல, Little God என எழுத்துப் பிழையுடன் எழுதுகிறாள் நான்காம் வகுப்பு டுட்டூ. இது பிழையல்ல, உண்மைதான் என்கிறது இயற்கை 360°..! முழுமையாய் அறிவோமா இச்சிறு கடவுள் பற்றி?

லிட்டில் கார்ட் என்று மட்டுமல்ல... ஐவி கார்ட் (Ivy Gourd), ஸ்கார்லெட் கார்ட் (Scarlet Gourd), தாய் ஸ்பினாச் (Thai Spinach), ராஷ்மெட்டோ (Rashmato) என ஆங்கிலத்திலும், ‘பேபி வாட்டர் மெலன்’ (Baby water melon) அல்லது ‘ஜென்டில்மேன் டோஸ்’ (Gentleman Toes) எனச் செல்லமாகவும் அழைக்கப்படும் கோவைக்காயின் தாவரப்பெயர் Coccinia grandis. இது தோன் றிய இடம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா.

கோவைக்காயா, தொண்டக்காய், டிண்டோரா, குன்றூ, தெண்ட்லி, பிம்பிக்காய், பரேலா என பிற மாநிலங்களில் அழைக்கப்படும் கோவைக்காய்க்கு, பழந்தமிழில் கொவ்வை, விம்பம், தாண்டை, தொவ்வை, விம்பி என்று பெயர்களும் உண்டு.

படரும் தன்மை உடைய கோவைச்செடியின் இலைகள் இதய வடிவத்திலும், காய்கள் முட்டை வடிவத்தில், அடர்பச்சை வண்ணத்தில், வெள்ளைக் கோடுகளுடன் காணப்படும் கோவை பழங்கள், அடர் சிவப்பு நிறத்திலும் காட்சி தரும்.

‘‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்..!” என சிவபெருமானின் வடிவத்தை, திருநாவுக்கரசர் குறிப்பிடப் பயன்படுத்துவதும் கொவ்வை எனும் நம் கோவைப்பழத்துடன்தான்!வேலியோரங்களில் தன்னிச்சையாக புதர் போல வளரும் கோவைச் செடியின் காய், பழம், இலை, வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்றாலும், நாம் அதிகம் பயன்படுத்தும் கோவைக் காய்களின் குணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை, புரதங்கள் கொண்ட கோவைக்காயில் வைட்டமின்கள் B, A, C, E மற்றும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்ஃபரஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட முக்கியச் சத்துகளும், இன்னும் சில இன்றியமையா சத்துகளும் நிறைந்துள்ளன.குறிப்பாக ஆல்ஃபா லைப்போயிக் அமிலம், பீட்டா அமைரின், சைட்டோ-ஸ்டீரால், குக்கூர்பிட்டின், பெக்டின்கள், ஃப்ளேவனாயிட்கள், க்ளைக்கோசயிடுகள் போன்ற தாவரச்சத்துகள் நிறைந்தவை கோவைக்காய்.

சற்றே கசப்புச் சுவை கொண்ட கோவைக்காய்கள், இனிப்பு நோய்க்கு மருந்தாகின்றன என்று கூறும் அறிவியல், ‘Glucose 6 Phosphatase’ என்ற நொதிச் சுரப்பை குறைப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாய் சொல்லப்படுகிறது. இருந்தாலும், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும் போது இதை உண்பதில் கூடுதல் கவனம் தேவை. சர்க்கரை நோய் தவிர, உயர் ரத்த அழுத்தம், இதய அடைப்பு நோய், பக்கவாதம், மூட்டு வலி, சிறுநீரகக் கற்கள், மலச்சிக்கல், கண் நோய்கள், அலர்ஜி போன்றவற்றின் தீவிரத்தைக் குறைக்கவும், மேலும், நார்ச்சத்து நிரம்பிய இந்தக் காய்கள் வயிற்று அழற்சி, செரிமானமின்மை, குடல் மற்றும் கல்லீரல் நோய், எடைக் குறைப்புக்கும் உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் கோவைக்காய், தொற்று நோய்களிலிருந்தும், ஆஸ்துமா, தொடர் இருமல், அலர்ஜி ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிப்பதுடன், சருமத்திற்கும் பொலிவு கூட்டி, எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமை சேர்க்கின்றன.அல்சைமர் நோய், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட மூளைத்தேய்வு நோய்களிலும், குடல் சார்ந்த புற்றுநோய்களிலும் அறிகுறிகளை கட்டுக் குள் வைத்திருக்கும் அருமருந்தாக கோவைக்காய் விளங்குகின்றது.

கோவை இலைகள் கீரையாகப் பயன்படுத்தப்படுவதுடன், குழந்தை முதல் பெரியவர்கள் வரை சரும நோய்களுக்கு பச்சிலையாகவும், சருமத்தில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தோல் அலர்ஜிக்கு, கோவை இலைகள் பயன்படுகின்றன என்றாலும், ஒருசிலருக்கு ஒவ்வாமையும் இதில் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு இயல்பாக நிகழும் Bed wetting என்கிற தன்னிச்சையான சிறுநீர்க் கழிதல் நிகழ்வுக்கு, ஆயுர்வேத மருத்துவத்தில் கோவைச் செடியின் வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய இந்திய மற்றும் சீன மருத்துவ முறைகளில், தொழுநோய், Gonorrhea, Syphilis உள்ளிட்ட பால்வினை நோய்கள், மஞ்சள் காமாலை, சரவாங்கி, மூச்சிரைப்பு ஆகியவற்றிலும் கோவைப்பழம் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.

கோவைக்காய்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தெற்காசிய மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் கோவைக்காய்கள், தொண்டக்காய் வெப்புடூ எனும் வறுவலாகவும், குழம்பு, பொரியல், கூட்டு, சட்னி மற்றும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.மேற்குவங்க மக்களின் மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றான ‘Kundru Posto’, கசகசா மற்றும் கோவைக்காய் சேர்த்த, சுவையானதொரு கறியாகும். தாய்லாந்து உணவுகளில், டாம் லூங் சூப் என்பது கோவை இலைகள் கொண்டு தயாரிக்கும் பிரபலமான உணவாகும்.

பண்டைய இந்திய மற்றும் சீன மருத்துவ முறைகளில், தொழுநோய், Gonorrhea, Syphilis உள்ளிட்ட பால்வினை நோய்கள், மஞ்சள் காமாலை, சரவாங்கி, மூச்சிரைப்பு ஆகியவற்றிலும் கோவைப்பழம் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.

வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த இந்த எளிய காய் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து நாடுகளின் வேலிகளிலும், சாலையோரங்களிலும் காணப்படும். அதேசமயம், ஹவாய் மற்றும் மெரைனா பசிபிக் தீவுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கும் களைகள் என ஒதுக்கப்படுகின்றன.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நம்மிடையே உள்ள கோவைக்காயை, சாரக மற்றும் சுஷ்ருத சம்ஹிதைகளும், சித்த, ஆயுர்வேத முறைகளும் அவற்றின் பல்வேறு மருத்துவ குணங்களுக்காக கொண்டாடுகின்றன.

அதீத பலன்களை இனிய வரமாக அளிக்கும் இந்தக் கசப்பான காயின் மற்றொரு பெயரான Little Gourd என்பதற்கு பதிலாக, Little God, அதாவது, சிறு கடவுள் என்று குழந்தை டுட்டூ எழுதியதில் தவறேதும் இல்லை தானே.?!

(இயற்கைப் பயணம் நீளும்...)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன்