Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி

நன்றி குங்குமம் தோழி

நமது உடலைப் பற்றி பேசும்போது, முதுகுத்தண்டு பற்றி தனியாகப் பேசாமல் இருக்க முடியாது. நிமிர்ந்து நிற்பது, நடப்பது, வளைவது, திரும்புவது என நமது அன்றாட இயக்கங்களின் மைய ஆதாரம் இந்த முதுகுத்தண்டு. அதைவிட முக்கியம் நமது மூளை மற்றும் உடலுக்கு இடையே தகவல்களை கொண்டு செல்கிற Spinal cord எனப்படுகிற தண்டுவடத்தையும் முதுகுத்தண்டே பாதுகாக்கிறது.

Spine, Vertebral Column, Spinal Cord மூன்றும் ஒன்றா?

Spine அல்லது backbone என்று நாம் பொதுவாகச் சொல்வது Vertebral column முதுகெலும்புத் தொடரை குறிக்கிறது. இதில் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள முதுகெலும்புகள், அவற்றுக்கு இடையிலுள்ள Intervertebral discs, மூட்டுகள், தசைகள், தசைநார்கள் போன்றவை இணைந்தே செயல்படுகின்றன.பொதுவாக முதுகுத்தண்டு 33 Vertebral கொண்டது. கழுத்தில் 7 Cervical, மார்புப் பகுதியில் 12 Thoracic, கீழ் முதுகில் 5 lumbar, 5 இணைந்த Sacral vertebral மற்றும் 4 இணைந்த Coccygeal vertebral கொண்டது.இதன் நடுவே பாதுகாப்பாகச் செல்லும் Spinal cord தண்டுவடம் நமது Central Nervous Systemன் (CNS) ஒரு முக்கிய பகுதி.

CNS என்பது மூளை + தண்டுவடம். மூளையிலிருந்து உடலுக்கு கட்டளைகளையும், உடலிலிருந்து மூளைக்கு உணர்வுத் தகவல்களையும் எடுத்துச் செல்லும் தகவல் பாதை.இதில் முதுகுத்தண்டின் ஆரோக்கியம் என்பது “முதுகுவலி” வராமல் இருப்பது மட்டுமல்ல... இயக்கம், உணர்வு, உடல் சமநிலை மற்றும் நரம்பு செயல்பாடுகளுடன் தொடர்புடையது. நம்முடைய முதுகுத்தண்டைத் தாங்குவது எலும்புகள் மட்டுமல்ல...முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள தசைகள் இதற்கு ஒரு பாதுகாப்பு கவசமாய் செயல்படுகின்றன. இதில் வயிற்றுத் தசைகள், முதுகுத்தசைகள், இடுப்பு மற்றும் புட்டப் பகுதி தசைகள் எனப் பல தசைகள் ஒன்றோடொன்று இணைந்து முதுகுத்தண்டை நிலையாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே, சரியான உடல் நிலை (Posture) என்பது நமக்கு மிகவும் முக்கியம்.

தொடர்ந்து குனிந்தபடியே அமர்வது, கைப்பேசியை பார்ப்பதற்காகவே தலையை முன்னால் நீட்டுவது, நீண்ட நேரம் ஒரே நிலையில் இருத்தல் போன்ற பழக்கங்கள், தேவையற்ற அழுத்தத்தை தசைகளில் ஏற்படுத்தலாம். இதில் முதுகுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி, தசை இறுக்கப் பிரச்னைகள் உருவாகலாம். தவறான உடல் நிலை என்பது நீண்ட காலம் தொடரும் போது, முதுகுத்தண்டில் உள்ள பல பகுதிகளில் அழுத்தம் அதிகரித்து சில Spinal disorders ஏற்படலாம். அல்லது Cervical spine பகுதியில் Cervical Spondylosis, Cervical Disc Degeneration, Disc Bulge, Disc Herniation மற்றும் Cervical Radiculopathy போன்ற பிரச்னைகள் தோன்றலாம்.

Thoracic spine பகுதியில்Thoracic Kyphosis, Disc Degeneration மற்றும் Thoracic Disc Herniation ஏற்படலாம்.Lumbar spine பகுதியில் Lumbar Spondylosis, Degenerative Disc Disease, Disc Bulge, Disc Herniation, Sciatica, Lumbar Radiculopathy மற்றும் Spinal Stenosis போன்றவை காணப்படலாம்.Sacral spine பகுதியில் Sacroiliac Joint Dysfunction மற்றும் தொடர்புடைய கீழ்முதுகுவலி ஏற்படலாம். Coccygeal region பகுதியில் Coccydynia அல்லது Tailbone pain ஏற்படலாம். தவறான உடல் நிலை (Posture) மட்டுமின்றி மரபியல், வயது, காயம், தசை வலிமைக் குறைவு, அதிக உடல் உழைப்பு போன்ற பல்வேறு காரணங்களாலும் மேற்கண்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படலாம்.

Twisting யோகாவில் திருப்புதல் என்பது முதுகுத்தண்டை ஒரு பக்கமாகச் சுழற்றும் இயக்கம். நாம் நிற்கலாம், உட்காரலாம், படுக்கலாம். ஆசனத்தின் வடிவம் மாறலாம். ஆனால், அதில் நடைபெறும் அடிப்படை இயக்கம் ஒன்றுதான். அது திருப்புதல். உதாரணத்திற்கு, அர்த்த மத்ஸ்யேந்திராசனம், வக்ராசனம், பரிவ்ருத்த திரிகோணாசனம், பரிவ்ருத்த பார்ஸ்வகோணாசனம், ஜடர பரிவர்த்தனாசனம் ஆசனங்களில் திருப்புதல் இயக்கத்தை காணலாம்.

முதுகுப் பக்கமாய் படுத்து செய்யும் திருப்புதல் ஆசனங்களில், இரு முழங்கால்களையும் ஒரு பக்கமாகக் கொண்டு சென்று, உடலின் மேல் பகுதியை எதிர்திசையில் வைத்திருப்பது போன்ற இயக்கங்கள் இடம்பெறும். தண்டுவடத்தை திருப்பும் போது உடலுக்குள் நடப்பது என்ன?

முதுகுத்தண்டை திருப்பும்போது அதைச் சுற்றியுள்ள முதுகுத் தசைகள், வயிற்றுத் தசைகள், இடுப்புப் பகுதி தசைகளும் இணைந்தே செயல்படுகின்றன. இதனால் உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கத்திறன் பராமரிக்கப்படும். உள் உறுப்புகளை மென்மையாய் சுருக்கி, பின்னர் விடுவிக்கும் தன்மை கொண்ட இந்தத் திருப்புதல் ஆசனங்களால், அந்தப் பகுதிகளில் ரத்த ஓட்டத்தையும் இயல்பான இயக்கத்தையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் உள் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு வலு கிடைக்கின்றது.

முதுகில் படுத்துச் செய்கிற திருப்புதலில் முதுகுப் பகுதி, தரையின் மீது ஆதரவாய் இருப்பதால் இயக்கத்தை மெதுவாகவும், கட்டுப்பாட்டுடனும் செய்ய முடியும். அதேபோல், வயிற்றுப் பகுதியில் படுத்துச் செய்யும் திருப்புதலில், வயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கு வேறுபட்ட அழுத்தமும் இயக்கமும் கிடைக்கின்றது. மாதவிடாய் நிற்கும் முன் ஏற்படும் பெரிமெனோபாஸ் நேரத்தில், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அப்போது தசை வலிமை, எலும்பின் ஆரோக்கியம், உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை ஆகியவற்றில் கவனம் வைத்தல் அவசியம்.

தொடர்ந்து யோகப் பயிற்சி செய்து வரும் பெண்களிடம், குறிப்பாக திருப்புதல் ஆசனங்களை முறையாகப் பயிற்சி செய்பவர்களிடம், உடல் நெகிழ்வுத்தன்மை, இடுப்புப் பகுதி இயக்கம், சுறுசுறுப்பு ஆகியவற்றில் நல்ல மாற்றங்களை யோகா ஆசிரியராக கண்கூடாக கவனித்து வருகிறேன்.பெரிமெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் சில உடல் உபாதைகளால், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காதவாறு, உடல் இலகுவாய் இருப்பதையும் காண முடிகிறது. தொடர்ந்து செய்யப்படும் சரியான யோகப் பயிற்சி, பெண்களின் உடல் மற்றும் மனநலனுக்கு நல் ஆதரவாகவும் இருக்கின்றது.

(நலம் யோகம் தொடரும்...)

படங்களில் காட்டப்பட்டுள்ள ஆசனங்களை ஆரம்ப நிலையில் இருந்து மெதுவாகப் பயிற்சி செய்யவும்!

* தலையை ஒரு பக்கமாகத் திருப்பும்போது, இடுப்பு மற்றும் முழங்கால்களை எதிர் திசையில் திருப்புதல் வேண்டும்.

* இதே இயக்கத்தை இடது மற்றும் வலது என மாற்றி மாற்றி செய்தல் வேண்டும்.

* ஒவ்வொரு பயிற்சியையும் 5 முதல் 10 முறை, உடல் திறனுக்கு ஏற்ப, மெதுவாகவும் நிதானமாகவும் செய்யவும்.

* தொடர்ந்து முறையாய் செய்வதன் மூலமாக, முதுகுத்தண்டின் நெகிழ்வுத் தன்மையையும், உடலின் இயக்கத் திறனையும் சிறப்பாக மேம்படுத்த முடியும்.

தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்