Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முழங்கால் வலிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

முழங்கால் வலி வயதானவர்கள் பலரின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கிவிடும் தன்மையுடையது. ஆரம்பத்தில், படிக்கட்டுகளில் ஏறும்போது மட்டும் அசௌகரியமாக இருப்பது போல் தொடங்கும். போகப் போக, கொஞ்ச தூரம் நடப்பது கூட கடினமாகிவிடும். இதனால் சிலர் காலையோ மாலையோ தாங்கள் செய்து வந்த நடைப்பயிற்சியை நிறுத்திவிடுகிறார்கள். தொலைதூர பயணங்களை தவிர்க்கிறார்கள்.

பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு தயங்குகிறார்கள். கடைசியில் முழங்கால் வலி வயது முதுமையின் மாற்ற முடியாத அங்கம் என்று அதோடு வாழ முற்படுகிறார்கள். ஆனால், தொடர்ச்சியான முழங்கால் வலியை எந்த வயதினரும் எப்போதும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போது நவீன மருத்துவத்தில் ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை நல்ல தீர்வாக உள்ளது என்கிறார் மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பியல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் முகுந்த் கிருஷ்ணமூர்த்தி. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை குறித்து அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டவை.

முழங்கால் வலி ஏன் வருகிறது?

கடுமையான முழங்கால் வலிக்கு பொதுவான காரணங்களில் ஒன்று ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (Osteoarthritis). இது மூட்டுத் தேய்மானத்தினால் ஏற்படும் பாதிப்பு. பாதுகாப்பான குருத்தெலும்பு சிறுகச் சிறுகத் தேயும்போது, எலும்புகள் ஒன்றோடொன்று உரசத் தொடங்குகின்றன. இது வலி, விறைப்புத்தன்மை மற்றும் அன்றாட இயக்கங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னைக்கு மருந்துகள், பிசியோதெரபி, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் பிற அறுவைசிகிச்சை அல்லாத மருத்துவங்கள் ஆகியவற்றால் முழுமையான தீர்வு கிடைக்காத போது, முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?

“ரோபோடிக்” என்ற வார்த்தையைக் கேட்டதும், ஒரு இயந்திரமே முழு அறுவை சிகிச்சையையும் செய்கிறது என்று பலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை. ரோபோட்டின் உதவியோடு அறுவை சிகிச்சை நிபுணரே முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை செய்கிறார். அறுவை சிகிச்சையின் போது அவருக்கு ரோபோட் துல்லியமான தகவல்களை உடனுக்குடன் தருகிறது.

இதன் மூலம் நிபுணரால் முழங்காலின் நிலையை சரியாக மதிப்பீடு செய்யவும், நோயாளியின் தனிப்பட்ட உடற்கூறியலுக்கு ஏற்ப எலும்பைத் தயார்படுத்தவும், செயற்கை மூட்டை துல்லியமாகப் பொருத்தவும் முடிகிறது. இவ்வாறாக ரோபோடிக் அமைப்பு என்பது அறுவை சிகிச்சை நிபுணரின் முடிவுக்கு உட்பட்டு அவருக்கு ஒரு கூடுதலான துணைக் கருவியாக மட்டுமே செயல்படுகிறது.

துல்லியம் ஏன் முக்கியம்?

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது பாதிக்கப்பட்ட மூட்டை அகற்றிவிட்டு புதிய செயற்கை மூட்டைப் பொருத்துவது மட்டுமே அல்ல. புதிய மூட்டானது அதைச் சுற்றியுள்ள எலும்புகள், தசைநார்கள் மற்றும் தசைகளுடன் சரியாக இணைந்து செயல்பட வேண்டும்.

சீரமைப்பு அல்லது செயற்கை மூட்டு பொருத்தப்படும் அமைப்பில் சிறிய வேறுபாடுகள் ஏற்பட்டால் கூட அது முழங்காலின் இயக்கம் மற்றும் உணர்வை பாதிக்கலாம். ரோபோடிக் தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையின் போதே நிபுணருக்குத் துல்லியமான அளவீடுகளை எடுக்கவும், தேவையான நுட்பமான மாற்றங்களைச் செய்யவும் உதவுகிறது. தவறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதனால் நோயாளிக்கு சீரான மற்றும் நிலையான புதிய முழங்கால் கிடைக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு அன்றாட இயக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் அவரால் மீண்டும் சுகமாக நடக்க, படிக்கட்டுகளைப் பயன்படுத்த, பயணம் செய்ய அல்லது நாற்காலியில் இருந்து சிரமம் இல்லாமல் எழ முடிகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

ரோபோடிக் அறுவைசிகிச்சை அனைவருக்கும் ஏற்றதா?

கண்டிப்பாக இல்லை. ரோபோடிக் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதற்காக அதை அனைவருக்கும் பயன்படுத்த முடியாது. ஒருவருக்கு இருக்கும் மூட்டுத் தேய்மானம் மற்றும் வலியின் தீவிரத்தன்மை, நடமாடும் திறன், வயது, ஒட்டுமொத்த ஆரோக்கியம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் ரோபோடிக் அறுவை சிகிச்சை அவருக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை மருத்துவர்கள் நிர்மாணிக்கிறார்கள்.

அதனால் ரோபோடிக் அறுவை சிகிச்சையை முடிவு செய்வதற்கு முன் விரிவான ஆலோசனையும் மருத்துவ மதிப்பீடும் மிகவும் முக்கியம். ரோபோடிக் உதவி என்பது துல்லியத்தைக் கூட்டும் ஒரு கருவியாகும்; ஆனால் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவம் எப்போதும் போலவே முக்கியமானது.அதே போல் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மீட்புப் பயணம் முடிந்துவிடுவதில்லை. புதிய முழங்கால் முழு பலத்தையும் இயக்கத்தையும் பெற பிசியோதெரபி, வழக்கமான உடற்பயிற்சிகள், சரியான ஊட்டச்சத்து, அன்றாட வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவை அவசியம்.

சுறுசுறுப்பான வாழக்கையை நோக்கிய பயணம்

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய மிகப்பெரிய தவறான எண்ணங்களில் ஒன்று, இது சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும் என்பதே. ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. கடுமையான முழங்கால் வாதம் வாழ்க்கையை முடக்கும்போது, நோயாளிகளுக்கு மீண்டும் இயக்கம் மற்றும் சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவுவதே ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் நோக்கம்.

முழங்கால் வலி காரணமாக நீங்கள் ஒரு காலத்தில் ரசித்துச் செய்த நடவடிக்கைகளைத் தவிர்க்கிறீர்கள் என்றால், அதை வயது முதிர்வு என்று சாதாரணமாக ஏற்றுக்கொள்வதை விட, மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மேலும் துல்லியமாக்கும் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் இலக்கு: சிகிச்சைக்கு பிறகு ஒரு நபர் தன்னம்பிக்கையுடன் நடக்க, தன் முழங்கால்களைப் பற்றிய கவலைகள் இல்லாமல் மீண்டும் சுதந்திரமாக வாழ உதவ வேண்டும் என்பதே.

தொகுப்பு:- முகுந்த் கிருஷ்ணமூர்த்தி