நன்றி குங்குமம் டாக்டர்
பருவ வயதில் மகளுக்கு மாதவிடாய் சீரின்றி வருகிறதா? முகப்பரு, அதிக முடி வளர்ச்சி, எடை மாற்றம் தென்படுகிறதா? இது பி.சி.ஓ.எஸ் ஆக இருக்கலாம். தேவையற்ற பதற்றத்தையும் குறைசொல்வதையும் விட்டுத் தள்ளுங்கள்… உங்களின் புரிதலும் ஆதரவுமே அவளுக்குத் தேவை என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவரான க.தென்றல். இதுகுறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்டவை:
பருவ வயதுப் பெண்களிடையே பி.சி.ஓ.எஸ் மிகவும் பரவலானது. ஏறத்தாழ ஐந்து பேரில் ஒருவர் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இந்தச் சூழலில் பெற்றோரின் அணுகுமுறையே மகளின் தன்னம்பிக்கையைத் தீர்மானிக்கிறது.
பருவ வயது என்பதே உடலிலும் மனதிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழும் காலம். அதனுடன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic Ovary Syndrome, சுருக்கமாக பி.சி.ஓ.எஸ் | இப்போது பி.எம்.ஒ.எஸ்) என்கிற நிலை சேரும்போது, மாதவிடாய் சீர்குலைவு, முகப்பரு, முகத்திலும் உடலிலும் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடையில் மாற்றம் போன்றவை மகளின் தோற்றம் குறித்த கவலையை மேலும் கூட்டிவிடும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், பருவ வயதுப் பெண்களில் ஏறத்தாழ 5 பேரில் ஒருவருக்கு இந்த நிலை இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்படும் பரிசோதனை அளவுகோல்களைப் பொறுத்து இது 11 முதல் 18 சதவிகிதம் வரை வேறுபடுகிறது. எனவே, இது அரிதான ஒன்றல்ல. உங்கள் மகளின் வயதை ஒத்த பல பெண்களும் இதே மாற்றங்களைக் கடந்துகொண்டிருக்கிறார்கள்.
ஊகங்கள் வேண்டாம், புரிதல் வேண்டும்
மகளின் மாதவிடாய், சருமம், எடை அல்லது முடி வளர்ச்சியில் மாற்றத்தைக் கண்டதும் பெற்றோருக்குக் கவலை வருவது இயல்பே. ஆனால், அந்த மாற்றங்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவதோ, தோற்றம் குறித்துக் கருத்துச் சொல்வதோ, மகளைத் தன் உடல் குறித்து மேலும் உணர்வுபூர்வமாக்கிவிடும். பி.சி.ஓ.எஸ் என்பது ஹார்மோன் சார்ந்த சிக்கலான நிலை. அதன் அறிகுறிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பெரிதும் மாறுபடும்.
எல்லாப் பெண்களுக்கும் எடை கூடுவதோ அதிக முடி வளர்ச்சியோ இருக்காது. சிலருக்கு மாதவிடாய் சீர்குலைவு மட்டுமே இருக்கும். பருவம் அடைந்த முதல் சில ஆண்டுகளில் மாதவிடாய் சீரின்றி வருவது இயல்பே என்பதால், இளம் பெண்களுக்கு நோய் கண்டறிதலும் கவனமாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மாற்றத்தையும் பி.சி.ஓ.எஸ் என்றோ, வாழ்க்கை முறையின் விளைவு என்றோ முடிவுக்கு வந்துவிடாதீர்கள். மாறாக, மகள் தயக்கமின்றித் தன் கவலைகளைப் பகிரும் வகையில், குற்றம் சாட்டாத ஒரு சூழலை உருவாக்குங்கள்.
எடையை மட்டும் மையப்படுத்த வேண்டாம்
வாழ்க்கைமுறை மேலாண்மை பராமரிப்பில் முக்கியம்தான். ஆனால், எடை குறித்த பேச்சுகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். உடல் அளவு, உணவுக் கட்டுப்பாடு, தோற்றம் குறித்து அடிக்கடிச் சொல்லும் கருத்துகள், மகளுக்கு உணவோடும் தன் உடலோடும் உள்ள உறவைப் பாதித்துவிடும். எடை குறைப்பை வலியுறுத்துவதற்குப் பதிலாக, குடும்பமே ஒன்றாக ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ளலாம்.
சரியான நேரத்தில் சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம், திரைக்கருவிகளிலிருந்து (டிவி, மொபைல்) சிறிது விலகி இருத்தல் ஆகியவற்றை அன்றாட வாழ்வின் பகுதியாக்குங்கள். நமது இலக்கு தோற்றம் அல்ல, ஆரோக்கியமும் சுறுசுறுப்பும். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) மற்றும் வளர்சிதை மாற்றச் சிக்கல்கள் வரும் வாய்ப்பு சற்று அதிகம் என்பதால்தான் இவை முக்கியம். இருப்பினும், எடை மட்டுமே ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில்லை. இயல்பான எடையுடன் இருக்கும் பல பெண்களுக்கும் இந்த நிலை உண்டு.
கருவுறுதல் குறித்துப் பயமூட்ட வேண்டாம்
பி.சி.ஓ.எஸ் என்ற சொல், பலருக்கும் எதிர்காலக் கருவுறுதல் குறித்த கவலையை உடனே எழுப்பிவிடும். இது, தன் உடலைப் புரிந்துகொள்ள முயலும் பருவ வயதுப் பெண்ணுக்கு அறியாமலேயே பயத்தை உண்டாக்கும். இந்நிலை கருமுட்டை வெளியேற்றத்தைப் (Ovulation) பாதிக்கலாம் என்றாலும், இந்நிலை இருப்பதால் எதிர்காலத்தில் கண்டிப்பாகக் கருத்தரிப்பதில் சிக்கல் வரும் என்று அர்த்தமில்லை. தகுந்த மருத்துவப் பராமரிப்பு, வாழ்க்கைமுறை ஆதரவு, தேவைப்பட்டால் பிற்காலச் சிகிச்சை ஆகியவற்றுடன் பி.சி.ஓ.எஸ் உள்ள பல பெண்கள் கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வயதில், எதிர்காலச் சாத்தியங்களைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, மகள் தன் உடலைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவுவதே பயனுள்ளது.
மன உணர்வுகளைக் கவனியுங்கள்
மகள் உடல்ரீதியாக நலமாகத் தோன்றினாலும், மனதளவில் தவித்துக் கொண்டிருக்கலாம். முகப்பரு, முடி வளர்ச்சி, எடை, மாதவிடாய் குறித்த கவலைகள் அவளது தன்னம்பிக்கையைப் பாதித்து, சில வேளைகளில் நண்பர்கள் மற்றும் சுப நிகழ்வுகளிலிருந்து விலகிச் செல்லவும் வைக்கலாம். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களில் ஏறத்தாழ பாதி பேர் மனச்சோர்வு அல்லது பதற்றத்தை உணர்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, மகளின் மனநிலை, நடத்தை, பழக்கவழக்கத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். அவளது கவலைகளைப் புறந்தள்ளாமல் ஆறுதல் அளியுங்கள். சிக்கல்கள் நீடித்தால், மருத்துவப் பராமரிப்புடன் மனநல ஆதரவையும் நாடலாம். மகள் படிப்படியாகத் தன் ஆரோக்கியப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவராக மாற வேண்டும். பி.சி.ஓ.எஸ் அவளது ஆரோக்கியப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அது அவள் யார் என்பதை ஒருபோதும் தீர்மானிக்கக் கூடாது.
PCOS இப்போது PMOS
‘பாலிசிஸ்டிக்’ என்கிற பெயர் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. உண்மையில், சினைப்பையில் நீர்க்கட்டிகள் (Cysts) இருந்தால்தான் பி.சி.ஓ.எஸ் என்பதில்லை. இளம் பெண்களுக்கு ஸ்கேன் (Ultrasound) மட்டுமே வைத்து இந்நிலையைக் கண்டறிவதில்லை. மாதவிடாய் சீர்குலைவு, ஹார்மோன் அறிகுறிகள் உள்பட பல அம்சங்களைக் கவனித்தே மருத்துவர் முடிவுசெய்கிறார்.
இந்நிலை இப்போது ‘பாலிஎண்டோகிரைன் மெட்டபாலிக் ஓவேரியன் சிண்ட்ரோம்’ (PMOS) என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது சினைப்பையை மட்டுமல்ல, ஹார்மோன், வளர்சிதை மாற்றம், சருமம், மனநலம் ஆகியவற்றையும் இணைக்கிறது. எனவே, தற்போது பிஎம்ஓஎஸ் என்று அழைக்கப்படுகிறது.
தொகுப்பு: மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் க.தென்றல்

