Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதுமை போற்றுதும்!

நன்றி குங்குமம் டாக்டர்

முதுமை நோய்களின் வேட்டை நிலம். தன் காலம் முழுதும் குடும்பத்தின் நலனுக்காக உழைத்து, களைத்து அக்காடவென உட்காரும் வயதில் வரிசையாய் நோய்கள் வந்து உடலையும் மனதையும் வாட்டும். அந்த நேரத்தில் உறவுகள் ஆறுதலாய் இருக்க வேண்டியது அவசியம். உடல் வயோதிகத்தால் சற்று மெலிகிறது. நலிவுறுகிறது. சிலருக்கு உடற் பருமனால் நடமாட இயலாமல் அவதி உண்டாகிறது. தூக்கம் வர மறுக்கிறது. நடை சற்று தளர்கிறது. கண் பார்வை மங்குகிறது. காது கேட்கும் திறன் குறைவதை அறிய முடிகிறது.

நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு பல வருடங்களாக அடைக்கலம் கொடுத்த உடலுக்கு அவை என்னென்ன தீங்கு செய்ய முடியுமோ அத்தனையும் செய்து உடலை அவற்றுக்கு இரையாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன.மூட்டுகள் தேய்மானம் அடைந்து வலி கொடுக்கின்றன. எலும்புகளில் பழைய வலு இல்லை. நூறு கிலோவை அலாக்காக தூக்கிய தோள்களில் பத்து கிலோவை தூக்க முடியாத அளவு எலும்பின் உயிர்ச்சத்து குறைந்திருக்கிறது.

சில நேரங்களில் தலை சுற்றல் வருகிறது. கால்கள் இடறி கீழே விழுந்தால் எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக்கி விடுகிறது. சிலருக்கு பக்க வாதம். சிலருக்கு பார்கின்சன். இன்னும் சிலருக்கு அல்சீமர் எனும் மறதி வியாதி. யாரும் தங்களை கண்டுகொள்வதில்லை என்ற மன ஏக்கம். அனைத்தும் இருந்தாலும் ஏதோ ஒன்று இல்லை- ஆம், நிம்மதி இல்லை என்ற எண்ணம், மன அழுத்தம் சாதாரண சீசனில் சளி கூட வந்தால் எளிதில் போக மாட்டேன் என்கிறது. நுரையீரலில் கூடு கட்டி நியூமோனியாவை வர வைத்து ஐசியூ வரை எட்டிப்பார்க்க வைத்து விடுகிறது.

மாடிப்படி ஏறி இறங்கினால் மூச்சு இளைக்கிறது. நாள்தோறும் காலையில் மலம் சரியாக இறங்க மாட்டேன் என்கிறது. சிறுநீர் அடிக்கடி வெளியேறுகிறது. இப்படியாக பல பல பிரச்னைகளை முதியோர்களிடம் இருந்து நாள்தோறும் சந்தித்து வருவதால் நிச்சயம் முதியோர்கள் நலன் குறித்தும் அவர்கள் எவ்வாறு தங்களின் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் அறிய இந்த கட்டுரை உதவும் என்றே நம்புகிறேன்.

முதியோர்கள் தங்கள் நலனை மேம்படுத்திக் கொள்ள சில டிப்ஸ்

1.தங்களுக்கு இருக்கும் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு இதய நோய் சிறுநீரக நோய் போன்றவற்றிற்கு தகுதியான மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை மட்டும் சரியாக உட்கொண்டு அவரை பிரதி மாதம் சந்தித்து மேற்சொன்ன நோய்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

2.மருத்துவர் பரிந்துரையின்றி தேவையற்ற மருந்துகளை சுயமாக மருந்து கடைகளிலோ மருத்துவர் அல்லாதவரிடம் இருந்தோ வாங்கி போடக்கூடாது. பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தான செயலாகவும் அமைந்து விடும்.

3.காபி டீயில் இனிப்பு கலக்காமல் பருகுவதை பழக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.

4.தினமும் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை காலாற நடக்கலாம்.

5.கண் பார்வை பிரச்னை இருப்பதை உணர்ந்தால் கண் மருத்துவரை சந்தித்து கண் புரை / க்ளாகோமா போன்ற பிரச்னைகள் இருந்தால் அறுவைசிகிச்சை மூலமாகவும் சொட்டு மருந்துகள் மூலமும் சரி செய்து கொள்ள வேண்டும். கிட்டப்பார்வை மங்குகிறதென்றால் அதற்குரிய கண்ணாடியை படிக்கும் போது அணிந்து கொள்ள வேண்டும்.

6.அன்றாட செய்தித்தாள்கள், நாவல்கள், புத்தகங்கள் போன்றவற்றை படிப்பதை ஒரு வழக்கமாக மாற்றி விட வேண்டும். புத்தகங்கள் படிப்பதால் அறிவையும் வளர்த்துக்கொண்டு மூளையையும் தொய்வின்றி பராமரிக்கலாம்.

7.பேரன் பேத்திகளுக்கு நன்னெறிக் கதைகளைக் கூறி வளர்ப்பது அவர்களுடன் செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பது , அவர்களுக்கு வினா விடை நிகழ்வு நடத்தி பாராட்டுவது சிறந்தது.இதனால் மனமும் லேசாகும். உங்களுக்கு இடையேயான உறவு இன்னும் இணக்கமாகும்.

8.செவித்திறன் குறைவதாக இருந்தால் அதற்குரிய மருத்துவரை அணுகி செவித்திறன் கூட்டும் கருவிகளை பொருத்திக் கொள்ள வேண்டும். எப்படி பார்வை முக்கியமோ அதே போல நல்ல செவித்திறன் இருந்தால் மட்டுமே நமது தன்னம்பிக்கை குறையாமல் இருக்கும்.

9.மன அமைதி தரும் விசயங்கள் அது இசையாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, சோசியல் மீடியாவாக இருந்தாலும் சரி அவற்றில் ஈடுபட்டு மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இருக்கும் தனித்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த இளமைக் காலத்தில் நேரம் இருந்திருக்காது. அதை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம்.

10.உடற்பருமன் பிரச்னை இருப்பின் அதற்குரிய உணவு முறையை கடைபிடித்து எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்பது இதய நோய், மூட்டுத்தேய்மானம் போன்ற பல பிரச்னைகளை வரவழைக்கும்.

11.பற்களின் நலனில் ஈடுபாடு கொண்டு பல் மருத்துவரை வருடம் ஒருமுறையேனும் சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது. பற்கள் விழுந்துவிட்டாலும் செயற்கை பற்களைப் பொருத்திக் கொள்வது நல்லது. பலரும் பல் இல்லை என்ற காரணத்தால் புரதச்சத்து மிக்க உணவுகளை புறக்கணிக்கும் சூழல் உருவாகிறது.

12.உடல் எடை திடீரென மெலிதல், மலம் கழித்தலில் பிரச்னை, சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல், பல வருடங்களுக்கு முன்பு நின்ற மாதவிடாய் மீண்டும் ஆரம்பிப்பது, ஆறாத புண்கள் போன்ற அறிகுறிகள் புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். எனவே உடனடியாக அதற்கு முக்கியத்துவம் தந்து சிகிச்சை பெற வேண்டும்.

முதியோர்கள் தங்களது உடல் நலனைப் பேணுவதற்கு சத்துள்ள உணவுமுறையைக் கடைபிடிப்பது அவசியம். தங்களது உணவில் புரதச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் உடல் வலிமையைக் கூட்டி இளமையுடன் வாழ உதவி செய்கின்றன.

முதியவர்களுக்கான எளிதான ஒருநாளைய உணவு அட்டவணை எப்படி இருக்கலாம் என்பதை வடிவமைத்திருக்கிறேன். உங்களுக்கு உகந்ததாக இருப்பின் கடைபிடிக்கலாம். உணவுக்குப்பிறகு இதமான இசை அல்லது பேரன் பேத்திகளுடன் சிறு விளையாட்டு உரையாடல் அல்லது இணையருடன் சிறு உரையாடல் என்று முற்றத்தில் அமர்ந்து சற்று காற்று வாங்கிவிட்டு அமைதியான மனநிலையில் உறங்கச் செல்ல வேண்டும்.

இவையன்றி தங்களுக்கு இருக்கும் மருத்துவம் சார்ந்த பிரச்னைகளுக்கு முறையாக பிரதிமாதம் மருத்துவரை விசிட் செய்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும்.வீட்டின் தரையை ஈரமில்லாமல் பராமரிக்க வேண்டும். குறிப்பாக குளியலறை, கழிப்பறை போன்றவற்றில் ஈரத்தை உறிஞ்சும் சாக்குகளை பயன்படுத்தி ஈரமில்லாமல் வழுக்காமல் தரையை பராமரிப்பது இடறி கீழே விழுவதை தடுக்கும்.

முதியோர்கள் இருக்கும் வீடுகளில் கழிப்பறைகளில் சுவற்றில் பிடிமானத்திற்கு கைப்பிடிகள் பொருத்துவது சிறந்தது. முதுமையில் சிலர் தனிமையை விரும்புவார்கள். சிலர் தனிமையை வெறுப்பார்கள். அவரவர்க்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்குரிய ஸ்பேஸ் வழங்கப்பட வேண்டும். பொதுவாக முதுமையில் அனைவரும் தங்களது பிள்ளைகள் அனுசரணையுடன் பேசுவதையும் தங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதையும் விரும்புவார்கள். எனவே அவர்களை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்தாத வண்ணம் அவர்களது மனம் குளிரும் வண்ணம் பக்குவமாக இளையோர் நடந்து கொள்ள வேண்டும்.

உறக்கமின்மை, அதீத பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பதை உணர்ந்தால் தயங்காமல் மன நல மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்துதல் கவுன்சிலிங் எடுத்தால் உடனே பிரச்னை சரியாகும். முதுமை என்பது அனைவரும் நிச்சயம் அடையவேண்டிய வாழ்வின் முக்கியமான கட்டம். முதியவர்களின் நலனைப் பேணுவதில் அவர்களும் அவர் தம் குடும்பத்தாரும் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும் என்றுரைத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா