Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமையலறை சாதனங்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

கவனம் ப்ளீஸ்!

நமது ஆரோக்கியத்தின் அடிப்படையே சமையலறையில்தான் இருக்கிறது. எனவே, சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். ஆகவே, நமது ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்றால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் மற்றும் சில சமையல் சாதனங்களை அவ்வப்போது மாற்றியமக்க வேண்டியது இன்றியமையாததாகும். அந்தவகையில், சமையல் அறையில் அவ்வப்போது மாற்ற வேண்டிய உணவுப்பொருட்கள் மற்றும் சமையல் சாதனங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

உணவு பொருட்கள்

சமைக்கும் உணவுகளுக்கு கூடுதல் சுவையைக் கொடுப்பது மசாலாக்கள். கரம்மசாலா, மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மசாலாபொடி போன்றவற்றைப் பயன்படுத்திய பின் அவற்றை அப்படியே திறந்து வைப்பதன் மூலம் இதன் ஆற்றலை இழக்கத் தொடங்கும். மேலும் சுவையும் குறைந்துவிடும்.

எனவே நாம் தினசரி பயன்படுத்தும் மசாலாப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அப்படியே கூடுதலாக அரைத்து வைத்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அதே நேரத்தில் முழு மசாலாப் பொருட்களை இரண்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். எப்போதும் புத்துணர்ச்சியைப் பராமரிக்க நேரடி வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து காற்று புகாத கொள்கலன்களில் சேகரித்து வைக்கவும்.

நான் ஸ்டிக் பாத்திரங்கள்

சமைப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் எளிதாகவும், எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்தும் வகையிலும் உள்ளதால் நான் ஸ்டிக் பாத்திரங்களை பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால், இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் கீறல் விழுந்தாலோ. சிறு சேதம் ஏற்பட்டாலோ உடனடியாக மாற்றி விட வேண்டும். அப்படி எதுவுமே ஆகவில்லை என்றாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நான் ஸ்டிக் பாத்திரங்களை மாற்றிவிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

ஸ்பாஞ்ச், ஸ்கிரப்புகள்

பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகள் மற்றும் ஸ்கிராப்புகளில் உணவுத் துகள்கள் சேர்வதால் நாளடைவில் அவற்றில் பாக்டீரியாக்கள் அதிக அளவில் தேங்கி இருக்கும். அதைப் போக்க, ஸ்பாஞ்சு ஸ்கிரப்புகளை சுடுதண்ணீரில் ஊற வைத்துப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது தற்காலிக தீர்வுதான். வாரத்துக்கு ஒருமுறை, பாத்திரங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஸ்பாஞ்சு, ஸ்கிரப் போன்றவற்றை மாற்றிவிடுவதே சிறந்தது.

கரித்துணி

சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க மிகவும் பேருதவியாக இருப்பது கரித்துணி எனப்படும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் துண்டுகள்தான். உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, ஒவ்வொரு நாளும் அல்லது குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் உங்கள் சமையலறை துண்டுகளை மாற்ற வேண்டும். அல்லது, கிருமிகளைத் தடுக்க உங்கள் அழுக்கு சமையலறை துண்டுகளை வெதுவெதுப்பான நீரில் தினமும் அலசிப் பயன்படுத்த வேண்டும்.

காய்கறி வெட்டும் பலகை

காய்கறி வெட்டும் பலகையை தினந்தோறும் பயன்படுத்துவதால், அதில் காய்கறித் துகள்கள். நீர்க் கசிவுகளால், கண்ணுக்குத் தெரியாத சிறிய துளைகளில் சேர்ந்து பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. காய்கறி வெட்டும் பலகையை சிலர் தேங்காய் எண்ணெய் தேய்த்துச் சுத்தம் செய்து பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்தாலும் அவ்வளவு பலன் அளிக்காது. ஆகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, காய்கறி வெட்டும் பலகையை மாற்றிவிடுவது சாலச் சிறந்தது.

சமையலறை மிதியடிகள்

சமையலறையில் தரை ஈரத்தைத் துடைக்கவும் கீழே சிந்தும் பொருட்களை விரைவாக சுத்தப்படுத்தவும் மிதியடிகளை பயன்படுத்துவோம். இதனால் மிதியடிகளை துவைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்தினாலும் அதில் பாக்டீரியா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மிதியடிகள் புதியது போல காட்சி தந்தாலும் ஆண்டுதோறும் அவற்றை மாற்றி விட வேண்டும்.

மாப்

நாம் அவ்வப்போது வீடு துடைக்கப் பயன்படுத்தும் மாப்புகளை பலர் வீடு துடைத்த பின் சுத்தம் செய்து வெயிலில் காய வைக்காமல், வீட்டினுள்ளேயே வைத்து விடுகின்றனர். இதனால், அதில் கிருமிகள் தங்கிவிடுகிறது. இதை நாம் திரும்ப திரும்ப பயன்படுத்தும்போது, நமது வீட்டினுள்ளும். கண்ணுக்கு தெரியாத கிருமிகள் தங்க வாய்ப்பு அதிகம். எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது வீடு துடைக்கப் பயன்படுத்தும் மாப்புகளை மாற்றிவிட வேண்டும்.

கேஸ் பர்னர்

உணவு சமைக்க பயன்படுத்தப்படும் அடுப்பில் உள்ள பர்னரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். காரணம், அதிக பயன்பாடு காரணமாக தேய்ந்து போன பர்னரின் வழியாக எரிவாயு வெளியேறி சமைக்க அதிகநேரம் எடுத்துக் கொள்ளலாம். கியாஸ் வீணாகலாம். மேற்கூறிய சமையலறைப் பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றும்போது, பாதுகாப்பும் ஆரோக்கியமும் காக்கப்படும். புதிய பொருட்களின் வரவு, சமையலறையைப் பயன்படுத்துவோரின் மனதில் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.

கொள்கலன்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், அலுமினிய பாத்திரங்கள், ஸ்டீல் பாத்திரங்களில் விரிசல், நிறமாற்றம் அல்லது துர்நாற்றம் இருந்தால் அதை அகற்றிவிட்டு வேறு புதிய பாத்திரங்களை மாற்ற வேண்டும்.

மரக்கரண்டிகள்

தினசரி பயன்படுத்தும் மரக்கரண்டி கள் ஓரங்களில் பிளவுபட்டாலோ அல்லது கறைகள் படிந்து நிறம் மாற்றம் அடைந்தாலோ அதனை அகற்றிவிட்டு புதிய கரண்டிகளை மாற்ற வேண்டும். பாத்திரம் துடைக்கும் துணிகள் (Dishcloths): சுகாதாரம் கருதி தொடர்ந்து மாற்ற வேண்டும்.மிக்சர்/கிரைண்டர் பிளேடுகள்: அரைக்கும் வேகம் குறைந்தால் பிளேடுகளை மாற்ற வேண்டும். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமையலுக்கு, இத்தகைய சாதனங்களை முறையாக பராமரித்து, பழுதடைந்தவற்றை உடனுக்குடன் மாற்றுவதால் நமது ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ரிஷி