நன்றி குங்குமம் டாக்டர்
டயாலிசிஸ்: சிறுநீரகத்தின் மாற்றாக உயிரைக் காக்கும் உன்னத சிகிச்சை!
பொதுவாக, சிறுநீரகம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிறுநீரை வெளியேற்றுவது மட்டும்தான். ஆனால், மருத்துவ ரீதியாக அதன் பணிகள் அதையும் தாண்டிய விஸ்வரூபம் கொண்டவை. பல்வேறு காரணங்களால் இந்தச் சிறுநீரகங்கள் தங்களின் பணியைச் செய்யத் தவறும்போது, அந்தப் பணியைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தன் தோள்மீது சுமந்து உயிரைக் காக்கும் ஒரு உன்னத மருத்துவக் கொடையே டயாலிசிஸ் ஆகும். டயாலிசிஸ் சிகிச்சையின் நுணுக்கங்களை இந்த விரிவான
கட்டுரையில் காண்போம்.
1. சிறுநீரகங்களின் அசாத்திய உடலியங்கியல்
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 முதல் 12 லட்சம் நுண் வடிகட்டிகள் உள்ளன. இவற்றுக்கு நெஃப்ரான்கள் என்று பெயர். இந்த நெஃப்ரான்கள்தான் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் உண்மையான ஹீரோக்கள். வயது முதிர்வு அல்லது நோய் காரணமாக இந்த நெஃப்ரான்கள் அழியும்போது, சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறையத் தொடங்குகிறது.
2. சிறுநீரகம் செய்யும் பன்முகப் பணிகள்
சிறுநீரகம் என்பது வெறும் வடிகட்டி மட்டுமல்ல, அது ஒரு சிறந்த நாளமில்லாச் சுரப்பியாகவும், ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டாளராகவும் செயல்படுகிறது.
கழிவு நீக்கம்: புரத வளர்சிதை மாற்றத்தின் இறுதி நச்சுக் கழிவுகளான யூரியா, கிரியாட்டினின் மற்றும் யூரிக் அமிலம் ஆகியவற்றை ரத்தத்திலிருந்து பிரித்து வெளியேற்றுகிறது.
நீர் மற்றும் உப்புகளின் சமநிலை: உடலில் நீர்ச்சத்து அதிகமாகும்போது அதிக சிறுநீரையும், நீர்ச்சத்து குறையும்போது அடர்த்தியான குறைந்த சிறுநீரையும் வெளியேற்றி உடலின் நீரின் அளவைச் சமமாக வைக்கிறது. மேலும் சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம் போன்ற தாது உப்புகளின் அளவை சீராகப் பராமரிக்கிறது.
அமில-கார சமநிலை: நமது ரத்தத்தின் காரத்தன்மை pH 7.4 என்ற அளவில் இருக்க வேண்டும். இதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் மரணம் நிகழலாம். சிறுநீரகங்கள் ஹைட்ரஜன் மற்றும் பைகார்பனேட் அயனிகளின் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்த pH அளவைக் காக்கின்றன.
ரத்த அழுத்தக் கட்டுப்பாடு: ரத்த ஓட்டம் குறையும்போது சிறுநீரகம் ரெனின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இது ரெனின்-ஆஞ்சியோடென்சின்-ஆல்டோஸ்டிரோன் மண்டலத்தை இயக்கி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் எலும்பு ஆரோக்கியம்: எலும்பு மஜ்ஜையில் ரத்தச் சிவப்பணுக்கள் உருவாவதைத் தூண்டும் எரித்ரோபொயிடின் என்ற அத்தியாவசிய ஹார்மோனைச் சிறுநீரகங்களே சுரக்கின்றன. மேலும் நாம் உண்ணும் வைட்டமின் D-ஐ செயல்படும் வைட்டமின் D-ஆக மாற்றி குடலில் இருந்து கால்சியம் உறிஞ்சப்பட உதவுகிறது.
3. சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் காரணங்கள்
பல்வேறு காரணங்களால் நெஃப்ரான்கள் பாதிக்கப்பட்டு, சிறுநீரகங்கள் தங்களின் இயல்பான பணிகளில் 85 சதவீதத்திற்கு மேல் செய்ய முடியாமல் போகும் நிலையைச் சிறுநீரகச் செயலிழப்பு என்கிறோம். இதில் இருவகை உண்டு:
அக்யூட் கிட்னி இன்ஜுரி
இது திடீரென சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ ஏற்படும் தற்காலிகச் செயலிழப்பு ஆகும். கடுமையான நீர்ச்சத்து இழப்பு, பாம்புக்கடி நச்சு, கடுமையான கிருமித்தொற்று போன்ற காரணங்களால் இது நேரலாம். இந்த நிலையில் சரியான நேரத்தில் டயாலிசிஸ் அளித்தால், சிறுநீரகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
குரோனிக் கிட்னி டிசீஸ்
இது மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் மெதுவாக ஏற்படும் நிரந்தரச் செயலிழப்பு ஆகும். இதற்கு முக்கிய காரணங்கள் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மருத்துவர் ஆலோசனையின்றி வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி வாங்கி உட்கொள்ளுதல், நெஃப்ரைடிஸ் எனப்படும் அழற்சி நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்களால் ஏற்படும் நீண்ட நாள் அடைப்புகள் ஆகும். இதன் இறுதி நிலையை அடைந்த நோயாளிகளுக்கு ஆயுள் முழுக்க டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே வாழ்வாதாரமாகும்.
4. டயாலிசிஸ் என்றால் என்ன? அதன் இயங்குமுறை
சிறுநீரகம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பழுதடையும் போது, ரத்தத்தில் நச்சுக்கள் தேங்காமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பமே டயாலிசிஸ் ஆகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு செயற்கைச் சிறுநீரகம்.
உடலியங்கியல் தத்துவம்
டயாலிசிஸ் என்பது இரண்டு முக்கிய இயற்பியல் தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. முதலாவது டிஃப்யூஷன் எனப்படும் பரவல் முறை. இதில் அடர்த்தி அதிகமான இடத்திலிருந்து அதாவது ரத்தத்திலிருந்து, அடர்த்தி குறைவான இடத்திற்கு அதாவது டயாலிசிஸ் திரவத்திற்கு நச்சு மூலக்கூறுகள் ஒரு சவ்வின் வழியாகப் பரவுகின்றன. இரண்டாவது அல்ட்ராஃபில்ட்ரேஷன் எனப்படும் நுண்வடிகட்டல் முறை. இது அழுத்த வேறுபாட்டின் மூலம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை உறிஞ்சி வெளியேற்றுகிறது.
5. டயாலிசிஸின் வகைகள் மற்றும் ஆழமான மருத்துவ விளக்கம்
மருத்துவ உலகில் பிரதானமாக இரண்டு வகையான டயாலிசிஸ் முறைகள் புழக்கத்தில் உள்ளன. நோயாளியின் உடல்நிலை, வயது, வசதி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இது தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வகை 1: ஹீமோடயாலிசிஸ் (ரத்த டயாலிசிஸ்)
இதுதான் உலகளவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறை. இதில் நோயாளியின் ரத்தம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, இயந்திரத்தின் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும்.
இயங்கும் முறை
இந்தச் சிகிச்சைக்காக நோயாளியின் கையில் உள்ள ஒரு தமனியையும் சிரையையும் இணைத்து ஃபிஸ்டுலா என்ற சிறு அறுவைசிகிச்சை அமைப்பு முன்கூட்டியே உருவாக்கப்படும். இதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு, டயாலிசிஸ் ஊசிகளைப் பொருத்த ஏதுவாகிறது. ஃபிஸ்டுலா இல்லாத அவசரக் காலங்களில் கழுத்துப் பகுதியில் தற்காலிகக் குழாய்கள் பொருத்தப்படும்.
ஃபிஸ்டுலா வழியாக ரத்தம் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் டயலைசர் என்ற உருளை வடிவப் பகுதிக்குச் செல்லும். இந்த டயலைசருக்குள் ஆயிரக்கணக்கான நுண்துளைக் குழாய்கள் இருக்கும். இதன் ஒரு பகுதியில் ரத்தமும், மறுபகுதியில் டயாலிசிஸ் திரவமும் எதிரெதிர் திசையில் பாயும். அப்போது ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினின் போன்ற கழிவுகள் திரவத்திற்குள் பாய்ந்து வெளியேறும். சுத்தமான ரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். பொதுவாக வாரத்திற்கு 3 முறைகள் மருத்துவமனைக்கு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் 4 மணி நேரம் இந்தச் சிகிச்சை நீடிக்கும்.
வகை 2: பெரிட்டோனியல் டயாலிசிஸ் (வயிற்று டயாலிசிஸ்)
இந்த முறையில் எந்தவொரு வெளிப்புற இயந்திரமும் ரத்தத்தை நேரடியாகச் சுத்திகரிப்பதில்லை. மாறாக, நோயாளியின் வயிற்றுப் பகுதியில் உள்ள இயற்கைச் சவ்வான பெரிட்டோனியம் வடிகட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இயங்கும் முறை
வயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் மென்மையான குழாய் நிரந்தரமாகப் பொருத்தப்படும். இதன் வழியாக ஒரு சிறப்பு டயாலிசிஸ் திரவம் வயிற்றுக்குள்ளே செலுத்தப்படும். வயிற்று சவ்வைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்களில் உள்ள நச்சுகளும், கழிவுகளும் இந்தத் திரவத்தால் உறிஞ்சப்படும். சுமார் 4 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த அழுக்குத் திரவம் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு, புதிய திரவம் நிரப்பப்படும். இந்தச் சிகிச்சையை நோயாளிகள் தங்களின் வீட்டிலேயே, தூங்கும் போது கூடச் செய்து கொள்ளலாம். அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதால் வேலைக்குச் செல்பவர்களுக்கும் முதியவர்களுக்கும் இது உகந்தது.
6. டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாய அறிகுறிகள்
சிறுநீரகத் திறன் குறையும் போது உடலில் நச்சுகள் தேங்குவதை யுரேமியா என்போம். கீழ்க்காணும் அறிகுறிகள் தீவிரமடையும் போது மருத்துவர்கள் உடனடியாக டயாலிசிஸ் செய்யப் பரிந்துரைப்பார்கள்:
அனசார்கா மற்றும் ஒலிகுரியா: கால்கள், முகம் மற்றும் கைகளில் கடுமையான நீர்வீக்கம் ஏற்படுதல். குடித்த நீரின் அளவிற்கு ஏற்பச் சிறுநீர் பிரியாமல், அதன் அளவு மிகக் கடுமையாகக் குறைந்து போதல்.
நுரையீரல் நீர்வீக்கம்: உடலில் சேரும் அதிகப்படியான நீர் நுரையீரலில் தேங்குவதால், படுக்கும் போது கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும். நோயாளி அமர்ந்துகொண்டே இரவைக் கழிக்க வேண்டியிருக்கும்.
யுரேமிக் கேஸ்ட்ரிடிஸ்: ரத்தத்தில் நச்சு கூடுவதால் தொடர் வாந்தி, குமட்டல் மற்றும் கடுமையான பசியின்மை ஏற்படும்.
தீவிர சோர்வு மற்றும் ரத்த சோகை: எரித்ரோபொயிடின் குறைபாட்டால் ரத்த அணுக்கள் குறைந்து, உடல் எப்போதும் சோர்ந்து காணப்படும்.
யுரேமிக் ப்ரூரிட்டஸ் மற்றும் என்செஃபலோபதி: தோலில் நச்சுகள் படிவதால் தாங்க முடியாத அரிப்பும், மூளையைப் பாதிக்கும் போது மறதி, மனக்குழப்பம், தசைத்துடிப்பு மற்றும் இறுதியில் மயக்க நிலையும் ஏற்படலாம்.
- தொடரும்
தொகுப்பு: பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்
