Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குறைமாத குழந்தைகளுக்கான கங்காரு கேர்

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் பிறப்பு என்பது அற்புதமான நிகழ்வு. ஆனால், அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதுவே, குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடுகிறது. அப்படியொரு சவால்தான் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள், சிகிச்சைமுறைகள், குறைமாத குழந்தைகளுக்கு வழங்கும் கங்காரு கேர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை

நிறைமாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு வழக்கமான பராமரிப்பு முறைகள் மேற்கொண்டால் போதுமானது. ஆனால், 37 வாரங்களுக்கு குறைவாக ஒரு குழந்தை பிறக்கும்போது, அவர்களை நாம் குறைமாதக் குழந்தைகள் (preterm babies) என்கிறோம்.

கர்ப்பகால அளவின் அடிப்படையில் குறைமாத பிரசவம் ஏற்படுகிறது. அதாவது, 28 வாரங்களுக்கும் குறைவானகர் ப்பகாலத்தில் பிறக்கும் குழந்தை அதி மிகவும் குறைப்பிரசவம் என்கிறோம்.

28 முதல் 32 வாரங்களில் பிறக்கும் குழந்தை மிகவும் குறைபிரசவம்.

32 முதல் 34 வாரங்களில் பிறக்கும் குழந்தை மிதமான குறைப்பிரசவம்.

34 முதல் 37 வாரங்களில் பிறக்கும் குழந்தை தாமதமான குறைப்பிரசவம் என்று மருத்துவ உலகில் குறிப்பிடுகிறோம்.

பிரசவம் எவ்வளவு காலம் முன்கூட்டி நிகழ்கிறதோ, அதைப் பொறுத்து குழந்தைக்கு ஏற்படும் உடல் நல அபாயங்கள் அவ்வளவு தீவிரமாக இருக்கும். குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு அவர்களின் உறுப்புகள் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது. அவர்கள் வெளி உலக சூழலை சமாளிக்கும் திறனையும் பெற்றிருப்பதில்லை. அதனால் அவர்கள் பிறந்தவுடன் மூச்சுத்திணறல், உடல் வெப்பம் குறைதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், நோய்த்தொற்று, மூளைக்குள் ரத்த கசிவு, குடலில் ஏற்படும் அழற்சி, பாலூட்டுதலில் சிரமம், பால் செரிமானத்தில் தாமதம், பிறந்தவுடன் குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டபின் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டில் பெற்றோர் தங்களுடைய குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

குறைமாதக் குழந்தைக்கு பசியின் அறிகுறிகளை சரியாக வெளிப்படுத்த தெரியாது. மேலும், அவர்களின் வயிற்றின் அளவும் சிறியதாக இருக்கும். அதனால், 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் புகட்ட வேண்டும்.

குழந்தையால் நேரடியாக தாயிடம் பால் அருந்த முடியவில்லை என்றால், தாய்ப்பாலை பிழிந்து எடுத்து சங்கின்(பாலாடை) மூலம் குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தைக்கு சரியான அளவு பால் கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் எடை சீராக கூடும். அதனால் அவர்களின் உடல் எடையை மருத்துவரின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும்.

வெப்பநிலை பராமரிப்பு

குறைமாதக் குழந்தையால் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள இயலாது. அதனால், அவர்களை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். குழந்தை இருக்கும் அறையின் வெப்பநிலை 22 - 26 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்துக் கொள்வது அவசியம்.

குழந்தை 2 முதல் 2.5 கிலோ எடை அடையும் வரை குழந்தையை குளிப்பாட்டக் கூடாது. மிதமான சுடுநீரில் துணியை நனைத்து துடைத்துவிட வேண்டும். அதுவரை, குழந்தையை கங்காரு மதர் கேர் (KMC) எனப்படும் முறையை பின் பற்றி உடல் வெப்பம் குறையாமல் பாதுகாக்கலாம்.

குழந்தையை தாயின் நெஞ்சுப் பகுதியில் தோளோடு தோள் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

கை மற்றும் கால்களுக்கு உறையிட வேண்டும். தலைக்கு தொப்பி அல்லது குல்லா போட்டு வைக்க வேண்டும். உடலை தாயின் ஆடையால் போர்த்தி விட வேண்டும்.

குழந்தையின் முகம் ஒரு பக்கமாக திருப்பி இருக்க வேண்டும். அப்படி முகம் திரும்பிய நிலையில் குழந்தையின் மூக்கு அடைப்பது தவிர்க்கப்பட்டு மூச்சுவிட ஏதுவாக இருக்கும். இதனால் தாயின் உடல் வெப்பம் குழந்தைக்கு கிடைக்கும் சீரான உடல் வெப்பம் குழந்தைக்கு தாயின் மூலம் பராமரிக்கப்படுகிறது. மேலும், கங்காரு மதர் கேர் கொடுப்பதால் குழந்தையின் உடல் எடை கூடுவதற்கு ஏதுவாக இருக்கிறது.

தாயுடன் பிணைப்பு ஏற்படுகிறது

தாய்க்கு தாய்ப்பால் சுரக்க ஏதுவாக இருக்கிறது. தாயின் பதட்டத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.  ஒரு நாளில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் கங்காரு மதர் கேர் கொடுக்க வேண்டும்.

கங்காரு மதர் கேர் குழந்தை 2.5 கிலோ அடையும் வரை கொடுக்க வேண்டும்.

குழந்தையின் தந்தையும் கங்காரு மதர் கேர் கொடுக்கலாம். இது தந்தைக்கும் குழந்தைக்குமான பிணைப்பை அதிகரிக்கிறது. மேலும், தாயின் ஓய்வு நேரத்திலும் குழந்தைக்கு தொடர்ந்து கங்காரு மதர் கேர் கிடைக்க உதவியாக இருக்கிறது. இதனால், குழந்தையின் உடல் முன்னேற்றம் சிறப்பாக அமைகிறது.

தந்தைக்கு பதிலாக குழந்தையின் நெருங்கிய உறவினரான பாட்டியும் கங்காரு மதர் கேர் கொடுக்கலாம்.

குறைமாதக் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், குழந்தையை தொடுவதற்கு முன் கைகளை கழுவுவதால் கிருமித் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பெற்றோர் மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ளும் நெருக்கமான உறவினரை தவிர மற்றவர்கள் குழந்தையை கையாள்வதை தவிர்ப்பது நல்லது. நோய் தொற்று இருப்பவர்கள் குழந்தையை கையாள்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தையை மருத்துவர் குறிப்பிடும் தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று குழந்தை உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி மைல்கற்கள் அடைந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரையில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகளை தவறாமல் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் உறுதுணையாக இருப்பதால் தாய் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறைமாதக் குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள் தாமதமாக தோன்றினாலும் அவர்களின் வயதை கருவுற்ற காலத்திலிருந்து கணக்கிடும்போது அந்த வயதுக்குரிய வளர்ச்சி மைல்கற்களை அவர்கள் சரியான சமயத்தில் அடைகிறார்கள். அதிலும் தாமதம் இருப்பின் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். மேலும், அவர்களின் வளர்ச்சி மைல்கற்கள் தாமதமாகாமல் தவிர்க்கலாம்.

சிறிய குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும் போது பெரியவர்கள் போல் காய்ச்சல் அறிகுறி இருப்பதில்லை. குழந்தை வழக்கத்தை விட சோர்வாக இருப்பது, சரியாகப் பால் குடிக்காமல் இருப்பது, சுவாசிப்பதில் சிரமம் அல்லது வழக்கத்தைவிட வேகமாக சுவாசிப்பது, வயிறு வீங்குவது, தோல் நீலநிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இத்தகைய அறிகுறிகள், ஏற்பட்டால் நோய் தொற்று ஏற்பட்டிருப்பதை பெற்றோர் உணர்ந்து, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.குறைமாத குழந்தைக்கு கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை ஆகியவற்றை மருத்துவ ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். சரியான பராமரிப்பும், அன்பான அரவணைப்பும் குறைமாத குழந்தைகள் தாங்கள் முன்கூட்டியே உலகிற்கு வந்ததால் ஏற்படும் போராட்டங்களை வென்றிட வழிவகுக்கும்.

தொகுப்பு:- ஸ்ரீதேவி