Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டயஸ்டாசிஸ் ரெக்டி அழகியல் பிரச்னையா ?

நன்றி குங்குமம் தோழி

பிரசவத்திற்குப் பிறகும் வயிறு குறையவில்லையா? வயிற்றுத் தசைகள் தளர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? முதுகுவலி தொடர்ந்து தொந்தரவு செய்கிறதா? எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் வயிறு குறையவில்லையா? இவை டயஸ்டாசிஸ் ரெக்டியின் (Diastasis Recti) அறிகுறிகளாக இருக்கலாம்!மையத் தசை பலவீனம், முதுகுவலி, வயிற்றுப் புடைப்பு ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கும் இந்த நிலையை சரியான மறுவாழ்வு சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

டயஸ்டாசிஸ் ரெக்டி...

கர்ப்ப காலத்தில் வளர்ந்து வரும் குழந்தையின் அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் வயிற்றுத் தசைகள் இயற்கையாக விரிவடைகின்றன. இந்த செயல்முறையில், வயிற்றின் முன்பகுதியில் இருக்கும் இரண்டு நேரான வயிற்றுத் தசைகளுக்கு இடையிலான இணைப்புத் திசு நீண்டு, தசைகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்லலாம். இந்த நிலையே டயஸ்டாசிஸ் ரெக்டி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் சுமார் 30% முதல் 45% வரை இந்தப் பிரச்னை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் அழகியல் பிரச்னையா?

டயஸ்டாசிஸ் ரெக்டி என்பது உடலின் ‘கோர்’ அமைப்பை பாதிக்கும் ஒரு செயல்பாட்டு பிரச்னை. இதனால்...

*முதுகுவலி

*உடல் சமநிலை குறைபாடு

*வயிற்றுத் தசை பலவீனம்

*இடுப்புத் தளத் தசை செயலிழப்பு

*சிறுநீர் கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

டயஸ்டாசிஸ் ரெக்டியால் ஹெர்னியா பாதிப்பு ஏற்படுமா?

கர்ப்பம், அதிக எடை தூக்குதல், நீண்டகால இருமல், மலச்சிக்கலால் முக்குதல் போன்ற காரணங்களால் வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது, பலவீனமான பகுதியில் ஒரு சிறிய துளை உருவாகலாம். அந்த துளை வழியாக கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி வெளியே தள்ளப்படும்போது ஹெர்னியா ஏற்படுகிறது. டயஸ்டாசிஸ் ரெக்டி மற்றும் ஹெர்னியா இரண்டும் வேறுபட்ட நிலைகள் என்றாலும் இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹெர்னியா ஏற்படும் அபாயம் உள்ளது.

டயஸ்டாசிஸ் ரெக்டி சுய பரிசோதனை!

வீட்டிலேயே எளிய சோதனை செய்யலாம்.

* நேராக மல்லாந்து படுத்துக்கொள்ளுங்கள்.

* முழங்கால்களை மடக்கி, பாதங்களை தரையில் வைக்கவும்.

* ஒரு கையை வயிற்றின் நடுப்பகுதியில் (தொப்புளின் மேல் மற்றும் கீழ்) வைக்கவும்.

* தலையையும் தோள்பட்டையையும் சிறிது உயர்த்தவும்.

* வயிற்றின் நடுவில் விரல்களை மெதுவாக அழுத்தவும்.

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விரல் அகல இடைவெளியை கவனிக்கவும்.

இந்த சுய பரிசோதனை ஒரு ஆரம்பக் கணிப்பு மட்டுமே. இடைவெளியின்

அகலம் மட்டுமல்ல, வயிற்றுத் தசைகளின் வலிமை மற்றும் இணைப்புத் திசுவின் தரமும் முக்கியமானவை. மருத்துவரின் ஆலோசனை பெற்றால் அதற்கான

பயிற்சிகளை பரிந்துரைக்கலாம்.

தீர்வு என்ன?

சரியான இயன்முறை சிகிச்சையால் முன்னேற்றம் பெறலாம்.

* சரியான மூச்சுப் பயிற்சி.

* ஆழ்ந்த கோர் தசை உடற்பயிற்சி.

* இடுப்புத் தளத் தசை உடற்பயிற்சிகள்.

* செயல்பாட்டு வலிமைப் பயிற்சிகள்.

ஐந்து பாதுகாப்பான உடற் பயிற்சிகள்...

1. டயஃப்ரமாட்டிக் சுவாசப் பயிற்சி (Diaphragmatic Breathing)

மல்லாந்து படுத்து, முழங்கால்களை மடக்கி, மூக்கின் வழியாக ஆழமாக மூச்சை இழுக்கவும். வயிறு விரிவடைவதை உணரவும். மூச்சை வெளியிடும் போது வயிற்றை மெதுவாக உள்ளே இழுத்து pelvic floor தசைகளை இறுக்கவும். 10-15 முறை செய்யவும்.

2. ஹீல் ஸ்லைட்ஸ் (Heel Slides)

மல்லாந்து படுத்து, முழங்கால்களை மடக்கி, ஒரு காலை மெதுவாக நேராக நீட்டி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும். மாற்றி மாற்றி இரு கால்களிலும் செய்யவும். 10-15 முறை செய்யவும்.

3. பெல்விக் பிரிட்ஜ் (Pelvic Bridge)

மல்லாந்து படுத்து, முழங்கால்களை மடக்கி, வயிறு தசைகளை இறுக்கி இடுப்பை மேலே உயர்த்தவும். 3-5 விநாடிகள் தாங்கி மெதுவாக கீழே இறக்கவும். 10-12 முறை செய்யவும்.

4. சைடு லையிங் கிளாம்ஷெல் (Side-Lying Clamshell)

ஒரு பக்கமாக படுத்து, தலைக்கு கீழே கைகளை வைத்துக் கொள்ளவும். இடுப்பு மற்றும் முழங்கால்களை மடக்கவும். இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று தொடும் நிலையில் வைத்திருக்கவும். வயிற்றுத் தசைகளை மெதுவாக இறுக்கி, மூச்சை வெளியிடும் போது மேலிருக்கும் முழங்காலை மெதுவாக மேலே திறக்கவும். இடுப்பு நேராக இருக்க வேண்டும். மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும். ஒவ்வொரு பக்கத்திலும் 10-15 முறை செய்யவும்.

5.பேர்ட்-டாக் பயிற்சி (Bird Dog Exercise)

கை மற்றும் முழங்கால்களை தரையில் ஊன்றி நிற்கவும். தோள்களுக்கு நேராக கைகளும், இடுப்பிற்கு நேராக முழங்கால்களும் இருக்க வேண்டும். வயிற்றுத் தசைகளை மெதுவாக இறுக்கி, முதுகை நேராக வைத்துக் கொள்ளவும். மூச்சை வெளியிடும் போது வலது கையையும் இடது காலையும் ஒரே நேரத்தில் நேராக நீட்டவும். மூச்சை இழுத்துக் கொண்டு மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும். பிறகு இடது கை மற்றும் வலது காலை நீட்டி அதேபோல் செய்யவும். 8-10 முறை செய்யவும். டயஸ்டாசிஸ் ரெக்டி பிரசவத்திற்குப் பிந்தைய மாற்றமாக இருந்தாலும், அதை புறக்கணிக்காமல் சரியான உடற்பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுடன் அணுகினால், ஆரோக்கியமான வாழ்க்கையை மீண்டும் பெற முடியும்.

தொகுப்பு: டாக்டர் சுபலட்சுமி