Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எல்லாருக்கும் இதய ஸ்கேன் அவசியமா!

நன்றி குங்குமம் டாக்டர்

இந்தியாவில் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று பல பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதய நோய் குறித்து உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறீர்களா? அப்படியென்றால் கீழ்கண்டவற்றில் எது இதய நோயின் அறிகுறி என்று நினைக்கிறீர்கள்?

*கடுமையான நெஞ்சுவலி,

*மூச்சுத்திணறல்

*திடீர் அசௌகரியம்

*மேற்கூறிய மூன்றும்

*அறிகுறிகள் இல்லாமலும் வரலாம்.

இந்த ஐந்து பதில்களில் முதலாவதாக இருக்கும் நான்கு பதில்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்திருந்தாலோ அல்லது முதல் நான்கு பதில்களையும் தேர்வு செய்திருந்தாலோ மட்டும் நீங்கள் சரி என்று நினைப்பது தவறு என்கிறார் கதிரியக்க நிபுணர் மருத்துவர் பிரசன்னா விக்னேஷ். மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவைஉண்மையில் மேற்கூறிய நான்கு பிரச்னைகள் இதய நோயினால் வெளிப்படும் அறிகுறிகள் என நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் யதார்த்தம் முற்றிலும் மாறுபட்டது.

இதயம் தொடர்பான நோய்கள் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல், நமக்கே தெரியாமல் மிக அமைதியாக உருவாகலாம். இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் மாற்றங்கள் நிகழும்போது இத்தகைய நிலை ஏற்படக்கூடும். அறிகுறிகளை மட்டுமே நம்பியிராமல், மருத்துவ இமேஜிங் (Medical Imaging) தொழில்நுட்பம் மூலம் மருத்துவர்கள் இந்நிலையை பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பாகவே துல்லியமாகக் கண்டறிய முடியும்.

நம்முடைய இதயம் எந்தப் பிரச்னையுடனும் இல்லை என்று தோன்றினாலும் பாதிப்புகள் இருக்க முடியுமா?

ஒருவர் தான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணரலாம். ஆனாலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், புகைபிடித்தல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்த வரலாறு போன்ற ஆபத்துக் காரணிகள் அவருக்குள் இருக்கலாம். இக்காரணிகள் கரோனரி தமனிகளில் (Coronary arteries) படிப்படியாகக் கொழுப்புப் படிமங்கள் (Plaque) சேர வழிவகுக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதனைக் கண்டறிய ‘கரோனரி கால்சியம் ஸ்கோர்’ (Coronary Calcium Score) என்ற சிறப்பு சி.டி. ஸ்கேன் பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். இது ரத்தக் குழாய்களில் கால்சியம் படிமங்களைக் கண்டறிந்து, அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) பாதிப்பைக் குறிக்கிறது. இதன் மூலம் ஒருவரின் இதயப் பாதிப்பு அபாயத்தைப் புரிந்து கொண்டு, கூடுதலாக மருத்துவ மதிப்பீடு ஏதேனும் செய்ய வேண்டியிருக்கிறதா அல்லது அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாமா என்று தீர்மானிக்க உதவுகிறது.

அதேநேரம், கால்சியம் ஸ்கோர் மட்டுமே, நம்முடைய கேள்விக்கான, சந்தேகத்திற்கான முழுமையான விடையைத் தந்துவிடாது. இது உறைந்த கால்சியத்தை (calcified plaque) மட்டுமே காட்டும்; மற்ற வகை படிமங்களையோ அல்லது ரத்தக் குழாயில் படிந்து ரத்த ஓட்டப் பகுதியின் அளவு சுருங்குவதன் துல்லியமான அளவையோ காட்டாது. எனவே ஒருவரின் வயது, அறிகுறிகள் மற்றும் மருத்துவப் பின்னணியோடு இணைத்தே முடிவுகள் மதிப்பிடப்படுகின்றன.

ரத்தக் குழாய்களின் நிலையை மிகத் துல்லியமாக அறிவது முக்கியம்

ஆழமான பல்வேறு தகவல்களைப் பெற உதவும் பரிசோதனை தேவைப்படும்போது, ‘கரோனரி சி.டி. ஆஞ்சியோகிராபி’ (coronary CT angiography (CCTA)) முறை மூலம் இதயத் தமனிகளின் முப்பரிமாண (3D) படங்கள் எடுக்கப்படுகின்றன. இது ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புப் படிவுகள், அடைப்புகள் மற்றும் சுருக்கங்களைத் தெளிவாகக் காட்ட உதவுகிறது.

இந்த மாதிரியான நேரங்களில் இதர இமேஜிங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எக்கோகார்டியோகிராபி (Echocardiography) பரிசோதனையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அல்ட்ராசவுண்ட் மூலம் இதயம் அசையும் படங்களை உருவாக்குகிறது. இதன் மூலம், இதயத் தசைகள் மற்றும் வால்வுகளின் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. தேவைப்படும் சூழலில் ‘ஸ்ட்ரெஸ் இமேஜிங்’ (Stress Imaging) பரிசோதனைகள் அல்லது இதர பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

நம் அனைவருக்கும் ஸ்கேன் தேவையா?

நாம் அனைவருமே முன்னெச்சரிக்கையாக இருக்க இதய ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற பொதுவான தவறான கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் அவசியமற்றது. நமக்கு உண்டாகும் அறிகுறிகள், வயது மற்றும் ஆபத்துக் காரணிகளைப் பொறுத்தே பரிசோதனை முறை தீர்மானிக்கப்படுகிறது. அறிகுறிகள் இல்லாத, குறைந்த ஆபத்துள்ள நபர்களுக்கு ஸ்கேன் தேவையில்லை. குறிப்பிட்ட ஆபத்துக் காரணிகள் உள்ளவர்களுக்கு மற்றும் இதய நாளங்களில் நடுத்தர அளவிலோ அல்லது அதிகளவிலோ பிரச்னை உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் இமேஜிங் பரிசோதனைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே, இமேஜிங் தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பு என்பது வெறும் ஒரு படத்தை உருவாக்குவதில் மட்டும் இல்லை; சரியான நேரத்தில் சரியான தகவலைக் கண்டறிந்து, அதற்கேற்றபடி மருத்துவர்கள் அடுத்தகட்ட மருத்துவ முடிவை மேற்கொள்வதற்குப் பயன்படுத்துவதில்தான் அதன் உண்மையான மதிப்பு உள்ளது.

அறிகுறிகளுக்கு அப்பால் சிந்திப்போம்

நமக்கோ அல்லது குடும்ப உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அவசர நிலை ஏற்படுவதற்கு முன்பே இதய ஆரோக்கியத்தைப் பேண வேண்டும். அந்தவகையில் நாம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய இரண்டு முறைகள் என்னென்ன?

நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்கள்

ரத்தஅழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். சரியான உடல் எடையைப் பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது, சரிவிகித உணவை உட்கொள்வது மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது போன்றவை நோய்த் தடுப்புக்கு முதன்மையானவை.

மருத்துவ இமேஜிங்

மருத்துவத் தேவையின் அடிப்படையில் செய்யப்படும் இமேஜிங் பரிசோதனைகள் கூடுதல் தகவல்களைத் தருகின்றன. அறிகுறிகள் மூலம் வெளிப்படையாகத் தெரியாத நுட்பமான மாற்றங்களை மருத்துவர்கள் முன்கூட்டியே கண்டறிய இது உதவுகிறது.இந்த உலக இதய நாளில் நாம் பெற வேண்டிய செய்தி மிக எளிதானது: உங்கள் இதயம் எச்சரிக்கை தரும் வரை காத்திருக்காதீர்கள். உங்கள் உடலின் அபாய நிலைகளைப் புரிந்து கொண்டு, தகுந்த பரிசோதனைகள் தேவையா என்பதை மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

ஏனெனில், சில நேரங்களில் இதயத்தில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்களை நம்மால் நேரடியாக உணர முடிவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது குறித்த விழிப்புணர்வை உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவே நாம் நேசிப்பவர்களை ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

தொகுப்பு: கதிரியக்க மருத்துவர் பிரசன்னா விக்னேஷ்