Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஒருங்கிணைந்த முதியோர் சிகிச்சையே தேவை!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி, மருத்துவத் துறையை வடிவமைத்து, மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களை நாம் நன்றியோடு நினைவுகூர்கிறோம். இந்த மருத்துவர்கள் தினத்தில், உயிர்காக்கும் அறுவைசிகிச்சைகளைச் செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிக்கலான நோய்களைக் குணப்படுத்தும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் பலவீனமாக இருக்கும் தருணங்களில் அவர்களுக்குத் துணையாக நிற்கும் பொது மருத்துவர்கள் என அனைவரையும் நாம் கொண்டாடுகிறோம்.

குறிப்பாக முதியோர் பராமரிப்பு என்று வரும்போது, மருத்துவத் துறை மென்மேலும் அதிநவீனமாகவும், குறிப்பிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றதாகவும் வளர்ந்து வரும் இந்நாளில், இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இந்தியா இன்று மக்கள்தொகையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. இந்தியாவின் மாதிரிப் பதிவு முறையின் (Sample Registration System) படி, 1970-ல் மக்களின் சராசரி ஆயுட்காலம் 49 ஆண்டுகளாக இருந்தது, இன்று ஆயுட்காலம் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (United Nations Population Fund) கணக்குப்படி, இந்தியாவில் தற்போது 15 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் வாழ்கின்றனர்; இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டிற்குள் 30 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், நோயாளிகள் இப்போது தங்களது முக்கிய உடல்நலப் பிரச்சனை ஒவ்வொன்றுக்கும் அதற்கான சிறப்பு மருத்துவர்களைத் தனித்தனியாக பார்த்து ஆலோசனைப் பெற முடிகிறது. உதாரணத்திற்கு, இத்தகைய நவீன மருத்துவ முன்னேற்றங்கள் சிகிச்சைக்கான நற்பலன்களை கணிசமாக அதிகரித்துள்ளதோடு, குறிப்பாக முதியவர்களின் ஆயுட்காலத்தையும் வெகுவாக நீட்டித்துள்ளன.

இருப்பினும், வயது முதிர்வு என்பது உடலின் ஏதோ ஒரு பகுதியை மட்டும் தனிப்பட்ட முறையில் பாதிப்பதில்லை. ஆனால் மிக அரிதாகவே தனித்தனி உடலுறுப்புகளில் முதுமையின் பாதிப்பு உண்டாகிறது.வயது முதிர்ந்த ஒருவர், பெரும்பாலும் ஒரே நேரத்தில் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். சர்க்கரை நோய் சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதிக்கலாம். உடலில் உறுப்புகளின் இயக்கம் குறைவதால் கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். தூக்கமின்மை அவர்களின் குழப்பத்தையோ அல்லது பதற்றத்தையோ மேலும் அதிகரிக்கலாம்.

முதியவர்களின் ஆரோக்கியத்தில் இதய நோய், ஊட்டச்சத்து குறைவு, அறிவாற்றல், மனநலம் மற்றும் மருந்து மேலாண்மை ஆகியவை ஒன்றோடொன்று ஆழமாகப் பிணைந்துள்ளன. தற்போதைய ஆய்வுகளின்படி, இந்திய முதியவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், பல சந்தர்ப்பங்களில், இப்பிரச்சனைகளுக்கு வெவ்வேறு மருத்துவமனைகள், துறைகள் மற்றும் கிளினிக்குகளில்தான் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் விளைவாக, முதியவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வெவ்வேறு சிறப்பு மருத்துவர்களைச் சந்திப்பதற்காக, தங்களின் மருத்துவ அறிக்கைகள், மருந்துச் சீட்டுகள், ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் மற்றும் மருத்துவக் கோப்புகளைச் சுமந்துகொண்டு ஒரு மருத்துவ அறையிலிருந்து மற்றொரு அறைக்குத் தொடர்ந்து அலைய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் நிபுணத்துவப் பிரிவில் சிறந்த சிகிச்சையை வழங்கினாலும், ஒட்டுமொத்த மருத்துவப் பயணம் என்பது முதியவர்களுக்குத் துண்டு துண்டானதாகவும், மீண்டும் மீண்டும் மேற்கொள்ளக்கூடியதாகவும் மற்றும் உடல் ரீதியாக மிகுந்த சோர்வளிப்பதாகவும் மாறிவிடுகிறது.

முதியோர் மருத்துவப் பராமரிப்பில் இன்று இருக்கும் மிகப்பெரிய குறைபாடுகளில் இதுவும் ஒன்றாகும்.மருத்துவ ஆவணங்களும் டிஜிட்டல் அறிக்கைகளும் தகவல்களை எளிதாகப் பெற உதவினாலும், அவை எப்போதுமே ஒரு நோயாளியின் முழுமையான நிலையை வெளிப்படுத்துவதில்லை. பரிசோதனை அறிக்கைகள் நோயறிதலையும் பரிசோதனை முடிவுகளையும் மட்டுமே காட்டக்கூடும்;

ஆனால், முதியவர்களிடையே படிப்படியாக அதிகரிக்கும் உடல் நலக்குறைவு, பழக்க வழக்கங்களில் உண்டாகும் மாற்றங்கள், நடப்பதில் உள்ள சிரமங்கள், பசியின்மை, மனநலம் சார்ந்த பிரச்சினைகள், உடல் பலவீனம், தூக்கக் குறைபாடுகள் அல்லது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான சவால்களைப் பிரதிபலிக்க அவை தவறிவிடுகின்றன.இங்குதான், ஒருங்கிணைந்த முதியோர் மருத்துவமனைகளும் (integrated geriatric hospitals), முதியோர்களுக்கான பிரத்தியேகப் பராமரிப்பு மையங்களும் (senior care centres) மிகவும் அவசியமானவையாக மாறுகின்றன.

முதியோர் மருத்துவமனைகளில், முதியோர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தனித்தனியாகச் செயல்படாமல், ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் இயங்குகிறார்கள். கார்டியாலஜிஸ்டுகள், நியூராலஜிஸ்டுகள், பிசியோதெரபிஸ்டுகள், ஊட்டச்சத்து நிபுணர்கள், முதியோர் நல மருத்துவர்கள் (geriatricians), மனநல மருத்துவர்கள், மறுவாழ்வு நிபுணர்கள் மற்றும் செவிலியர் குழுக்கள் ஆகியோர் நோயாளியின் ஒட்டுமொத்த நிலையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவகையில் இணைந்து செயல்படுகிறார்கள். இது முதியவர்களுக்கான சிகிச்சையை ஒருங்கிணைந்ததாகவும், கூட்டு முயற்சியாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும் மாற்ற உதவுகிறது.

இந்தியாவில் முதியோர் நல மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையைக் கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய ஒருங்கிணைந்த முதியோர் மருத்துவ அமைப்புகளின் தேவை இன்னும் அவசியமாகிறது. இந்தியாவில் 15 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் இருந்தபோதிலும், தற்போது 1,000-க்கும் குறைவான, பயிற்சி பெற்ற முதியோர் நல மருத்துவர்களே (geriatricians) உள்ளனர். இது, வலுவான முதியோர் மருத்துவ உள்கட்டமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு முறைகளின் அவசரத் தேவையை உணர்த்துகிறது.இந்த அணுகுமுறையின் பலன் என்பது வெறும் செளகரியம் மட்டுமல்ல, முதியவர்களுக்குத் தேவையான தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த கவனிப்பும் உள்ளடங்கியதாக இருக்கும்.

உதாரணமாக, ஒரு முதியவருக்கு உடல் பலவீனம் அல்லது அடிக்கடி கீழே விழும் பிரச்சனை ஏற்பட்டால், அது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாக மட்டும் இருக்காது. அது அவர்கள் உட்கொள்ளும் பல்வேறு மருந்துகளின் பக்கவிளைவுகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, நரம்பியல் குறைபாடுகள், குறைந்த நடமாட்டம், மனநலம் அல்லது இதயப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஒரு ஒருங்கிணைந்த முதியோர் மருத்துவப் பரமாரிப்பில், நிபுணர்கள் இப்பிரச்சனைகளைத் தனித்தனியாகப் பார்க்காமல், ஒன்றோடொன்று தொடர்புடைய இந்தத் தன்மைகளை ஒன்றாக ஆராய்ந்து சிறந்த முடிவை எடுக்க முடிகிறது.

வயதானவர்களிடம் பொதுவாகக் காணப்படும் ‘பாலிஃபார்மசி’ (polypharmacy - ஒரே நேரத்தில் பல மருந்துகளை உட்கொள்ளுதல்) முறையைக் கையாள்வதில் இது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருங்கிணைந்த கண்காணிப்பு இல்லாதபோது, வெவ்வேறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சில நேரங்களில் குழப்பம், பக்கவிளைவுகள், பலவீனம், மயங்கி விழுதல் அல்லது உயிருக்கே ஆபத்தான மருந்து எதிர்வினைகளுக்கு (drug interactions) வழிவகுக்கலாம். ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு இத்தகைய ஆபத்துகளைக் குறைப்பதோடு, நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான சிகிச்சை முறைகளையும் எளிமையாக்குகிறது.

மருத்துவ ஒருங்கிணைப்புக்கு அப்பால், பிரத்தியேக முதியோர் நல நிறுவனங்கள் முதுமையின் யதார்த்தமான தேவைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. பொதுவான பெரியவர்களுக்கான சிகிச்சைக்காகக் கட்டப்படும் சாதாரண மருத்துவமனைகளைப் போல் இல்லாமல், பல முதியோர் நல மையங்கள் முதியவர்களுக்கு உகந்த உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.

இதில் ஆர்த்தோபெடிக் படுக்கைகள், வழுக்காத தரைகள் (anti-slip flooring), வீல்சேர் எளிதாகச் செல்லும் பாதைகள், நோயாளிகளைத் தூக்கும் லிஃப்ட் வசதிகள், படுக்கைப் புண்களைத் தடுக்கும் மெத்தைகள், நடமாட்டத்திற்கு உதவும் தொழில்நுட்பங்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பையும் சௌகரியத்தையும் மேம்படுத்தும் மறுவாழ்வு சார்ந்த சூழல் போன்ற அம்சங்களும் அடங்கும்.

பல முதியோர் பராமரிப்பு மையங்கள் வயது முதிர்ந்த நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் உதவிப் பராமரிப்பு உபகரணங்களையும் ஒருங்கிணைத்துள்ளன. இதில் நடைப் பயிற்சி அளிக்கும் கருவிகள், பிசியோதெரபி உபகரணங்கள், அறிவாற்றலை மேம்படுத்தும் சிகிச்சை முறைகள் மற்றும் நடமாட உதவும் தொழில்நுட்பம் (gait training systems, physiotherapy support devices, cognitive therapy tools, and mobility-assistance technology) ஆகியவை அடங்கும். இத்தகைய உள்கட்டமைப்புகள், முதியோர் மருத்துவம் என்பது வெறும் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல, அவர்களின் கண்ணியம், நடமாடும் திறன், சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க உதவுகின்றன என்பதை உணர்த்துகின்றன.

மருத்துவச் சிகிச்சைகளுக்கு அப்பால், ஒருங்கிணைந்த முதியோர் மருத்துவமனைகள் வழக்கமான மருத்துவ அமைப்புகளிலும், நடைமுறைகளிலும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில், மறுவாழ்வு (rehabilitation), நடமாடும் திறனை மீட்டெடுக்க கொடுக்கப்படும் உதவி, அறிவாற்றல் அடிப்படையிலான ஆரோக்கியம், மனநலம், ஊட்டச்சத்து, மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் மீண்டு வருதல் மற்றும் நீண்ட கால உதவிப் பராமரிப்பு போன்ற துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

குடும்பங்களைப் பொறுத்தவரை, இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவர்களின் மன அழுத்தத்தையும் அலைச்சலையும் வெகுவாகக் குறைக்கும். வயது முதிர்ந்த பெற்றோரை கவனித்துக் கொள்ளும்போது, பல மருத்துவமனைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பயணங்கள், வேறு வேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள், மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது பெரும்பாலும் சுமையாக மாறிவிடுகிறது. பிரத்தியேக முதியோர் பராமரிப்புச் சேவைகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்போது, அது சிறந்த தகவல்தொடர்பையும், தெளிவையும், முதியவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் மிகவும் நிம்மதியான மருத்துவ அனுபவத்தையும் வழங்குகிறது.

இந்தியாவின் முதியோர் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் இந்நேரத்தில், மருத்துவ அமைப்புகள் இனி தனித்தனி சிகிச்சை முறைகளில் இருந்து மாறி, முதியோர்களுக்கான சிகிச்சைகளை ஒருங்கிணைத்த, நோயாளிகளை மையமாகக் கொண்ட முதியோர் பராமரிப்புச் சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கு காரணம், முதியோர் மருத்துவப் பராமரிப்பு என்பது நோய்களைத் தனித்தனியாகக் குணப்படுத்துவது மட்டுமல்ல. வயது முதிர்வு என்பது ஒரு மனிதனை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்வதாகும்.

இதனால் ஒருங்கிணைந்த முதியோர் மருத்துவமனைகள் என்பது முதியோர் பராமரிப்பை மிகவும் ஒருங்கிணைத்ததாகவும், கருணைமிக்கதாகவும் மற்றும் முழுமையானதாகவும் மாற்றுவதை நோக்கிய முன்னேற்றத்தில் அடுத்தக்கட்டமாக அமைந்திருக்கிறது.

தொகுப்பு: ஜே. கிருஷ்ணா காவ்யா, நிறுவனர் அதுல்யா சீனியர் கேர்