Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹனிரோஸ் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

இளம் வயதிலேயே திரை துறையில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை ஹனி ரோஸ். குறிப்பாக தனது சொந்த தேசமான கேரளாவின் மலையாள சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். பாய் பிரெண்ட் என்கிற மலையாள படத்தில் அறிமுகமான ஹனி ரோஸ், முதல் கனவே என்கிற தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதையெடுத்து ஜீவாவுடன் சிங்கம்புலி படத்தில் நடித்திருந்தார். மலையாளம், தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் ஹனி ரோஸ் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்து பேமஸ் ஆனதை விட இவரை பேமஸ் ஆக்கியது இவரது கவர்ச்சிதான். சமீபகாலமாக இவர் அதிகளவில் கடை திறப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அங்கு கவர்ச்சியான உடையணிந்து வரும் ஹனி ரோஸை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே வருவதால், அவருக்கு சினிமாவை விட இதன்மூலம் அதிகளவு பாப்புலாரிட்டி கிடைத்துள்ளது. ஹனி ரோஸ் தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:

வொர்க்கவுட்ஸ்: நான் தினசரி இரவில் ஏதேனும் ஒரு திரைப்படத்தை பார்க்கும் பழக்கம் வைத்திருக்கிறேன். இது எனது கெரியருக்கு பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, இரவில் நேரம் கழித்து தூங்குவதால் காலையில் கண்விழிக்க 10.30 மணி போல் ஆகிவிடும். அதன் பிறகு ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே நாடகத்தில் நடிக்க தொடங்கிவிட்டேன். இதனால் அப்போதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கம் வந்துவிட்டது.

எனது தினசரி வொர்க்கவுட் பயிற்சிகள் என்னவென்றால், முதலில் யோகாவுடன் எனது வொர்க்கவுட்ஸ் தொடங்கும். யோகா மனதிற்கு அமைதி தருவதோடு, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே, உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேனோ அதே அளவு என்னுடைய யோகா பயிற்சிக்கும் இடம் உண்டு. பின்னர், நடைபயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரை மணி நேரம். பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் - அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற்பயிற்சிகளாகும். பின்னர், கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒருமணி நேரம் டான்ஸ் பயிற்சிகள் செய்வேன். இவைதான் எனது வொர்க்கவுட் ரகசியங்கள்.

டயட்: உடல் பிட்டாக இருக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அப்படியே ஆசைப்பட்டு பிடித்த உணவுகளை சாப்பிட்டுவிட்டாலும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளை செய்து சமன் செய்துவிடுவேன். பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக் கொள்வேன். காலை உணவாக ஜூஸ் வகைகள், சாலட் வகைகள் கட்டாயம் இருக்கும். இது தவிர அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடுவேன். அதில் கேரளாவின் பிரத்யேக உணவுகளான மீன் மொய்லி, மீன் பொளிச்சும் ரொம்ப பிடிக்கும். அதுபோன்று ஹைதராபாத்தின் மண்டி பிரியாணி பார்த்துவிட்டால் என் டயட் உறுதியெல்லாம் சற்று தளர்த்திவிடுவேன். இப்படி பிடித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டுவிட்டால், மறுநாள் உடற்பயிற்சிகளை கூடுதலாக செய்துவிடுவேன்.

பியூட்டி: நாம் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினாலே நமது சருமம் பொலிவாக இருக்கும். அந்தவகையில், எனது உணவு பழக்கமே எனது சரும பொலிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பொதுவாக எனக்கு கவர்ச்சியாக உடை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும். இதுவே தற்போது எனது அடையாளமாக மாறிவிட்டது. இதன்காரணமாகவே, இடுப்பு பகுதியை பெரிதாக்க நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.

ஆனால், அப்படி எந்த செயற்கையான அறுவை சிகிச்சை செய்தும் நான் எனது அழகை தக்க வைத்துக் கொள்ளவில்லை. இது கடவுள் தந்த அழகு, இதற்காக நான் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. என் உடலை அழகாக பராமரிக்க சில ப்ரோட்டீன் பவுடர் மில்க் ஷேக்குகள் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் அவ்வளவுதான்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்