Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தைராய்டு பிரச்னைக்கு ஹோமியோபதி தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய வாழ்க்கைமுறை மாற்றத்தால் பலரும் பலவித உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். அந்தவகையில், தைராய்டு பிரச்னையும் ஒன்று. தைராய்டு பிரச்னைக்கு மாற்று மருத்துவமான ஹோமியோபதி சிகிச்சை நல்ல தீர்வாக இருக்கும் என்கிறார் ஹோமியோபதி மருத்துவரான நிலா. இவர், தைராய்டு வர காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறை என்ன? தீர்வு என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று ஒரே ஒரு காரணத்தைச் சொல்லிவிட முடியாது. இதற்கு, பரம்பரையும் ஒரு முக்கியமான காரணம். தவிர, இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மனஅழுத்தம், போதிய தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் Hashimoto’s போன்ற உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த பாதிப்புகளும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

தைராய்டு நோய்க்கு ஹோமியோபதி சிகிச்சை எந்த வகையில் உதவக்கூடும்?

ஹோமியோபதியில், நோயாளியின் தனிப்பட்ட அறிகுறிகள் மற்றும் உடல்நிலையை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதே இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

ஏற்கனவே தைராய்டு ஹார்மோன் மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் ஹோமியோபதி சிகிச்சைக்கு மாறலாமா?

உடனடியாக மாறக்கூடாது. ஏற்கனவே எடுத்துவரும் அலோபதி மாத்திரைகளை நிறுத்துவது ஆபத்தானது. ஹோமியோபதியை இணைச் சிகிச்சையாக ஆரம்பிக்கலாம்.

சிகிச்சை தொடரும்போது செய்யப்படும் ரத்தப் பரிசோதனைகள், அறிகுறிகள் மற்றும் மருத்துவரின் மதிப்பீட்டின் அடிப்படையில், மருந்துகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதைச் சம்பந்தப்பட்ட மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே செய்ய வேண்டும்.

ஹைப்போதைராய்டிசம் மற்றும் ஹைப்பர்தைராய்டிசத்தின் அறிகுறிகளை எவ்வாறு வேறுபடுத்துவது?

ஹைப்போதைராய்டிசம் (சுரப்பு குறைதல்): உடல் சோர்வு, திடீர் எடைக் கூடுதல், அதிகக் குளிர் தாங்காமை, மலச்சிக்கல், முடி உதிர்தல், மனச்சோர்வு மற்றும் பெண்களிடம் ஒழுங்கற்ற

மாதவிடாய்.ஹைப்பர்தைராய்டிசம் (சுரப்பு அதிகரித்தல்): உடல் எடை குறைதல், நெஞ்சடைப்பு, அதிக வேர்வை, கை நடுக்கம், வெப்பத்தைத் தாங்க முடியாமை மற்றும் தூக்கமின்மை.

உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைதல் தைராய்டுடன் தொடர்புடையதா?

ஆம், நிச்சயமாகத் தொடர்புடையது. ஆனால், எடை மாறுபாடு அடைந்த எல்லோருக்கும் தைராய்டு இருக்க வேண்டும் என்பதில்லை. தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. சுரப்பு குறையும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாகி எடை கூடுகிறது; சுரப்பு அதிகரிக்கும்போது வளர்சிதை மாற்றம் வேகமெடுத்து எடை குறைகிறது.

பெண்களுக்கு தைராய்டு பிரச்னை அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் என்ன?

ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு மிக அதிகம். பெண்களின் உடலில் பூப்படைதல், கர்ப்ப காலம், பிரசவத்திற்குப் பிந்தைய காலம் மற்றும் மெனோபாஸ் எனப் பல கட்டங்களில் ஹார்மோன்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலும், பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த ஆட்டோ இம்யூன் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவேதான், பெண்களுக்கு அதிகளவில் தைராய்டு பிரச்னை காணப்படுகிறது.

தைராய்டைக் கண்டறிய TSH, T3, T4 பரிசோதனைகள் எப்போது செய்ய வேண்டும்?

காரணமில்லாத உடல் சோர்வு, திடீர் எடை மாற்றம், கழுத்து வீக்கம், ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது குடும்பத்தில் தைராய்டு வரலாறு இருக்கும் போது இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.இந்தப் பரிசோதனைகள் எப்போது செய்ய வேண்டும் என்பது நோயாளியின் அறிகுறிகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பொறுத்தது. ஏற்கனவே சிகிச்சை எடுப்பவர்கள், மருத்துவர் கூறும் கால இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை செய்து வருவது முக்கியம்.

தைராய்டு நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை எவ்வாறு திட்டமிடப்படுகிறது?

நோயாளியின் அறிகுறிகள், வாழ்க்கை முறை மற்றும் ஒட்டுமொத்த உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் தனிப்பட்ட முறையில் சிகிச்சை திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு தைராய்டு நோயாளிக்கும் ஒரே சிகிச்சைமுறை இருக்காது. நோயின் வகை, வயது, கர்ப்பம் மற்ற நோய்கள், பரிசோதனை முடிவுகள் இவற்றைப் பொறுத்தே மருத்துவ முடிவுகள்

மாறுபடும்.

ஹோமியோபதி மருந்துகள் தைராய்டு ஹார்மோன் அளவை இயல்புநிலைக்கு கொண்டு வருமா?

நோயின் தன்மை மற்றும் அது எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இது அமையும். ஆரம்பக்கட்ட தைராய்டு கோளாறுகள் அல்லது செயல்பாட்டுத் தடைகள் உள்ள சில நோயாளிகளில் அறிகுறிகளில் முன்னேற்றம் காணப்படலாம். அது நோயின் வகை, காரணம் மற்றும் ஒவ்வொரு நபரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். நீண்டகாலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஓர் ஆதரவு சிகிச்சையாகப் பயன்படுகிறது.

ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது தைராய்டு மாத்திரையை தானாக நிறுத்தலாமா?

கண்டிப்பாகக் கூடாது. நோயாளிகள் தாங்களாகவே தைராய்டு மாத்திரையின் அளவைக் குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ கூடாது. எந்தவொரு மாற்றமும் முறையான ரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும். நோயாளியின் பாதுகாப்புதான் எப்போதும் முதல் முன்னுரிமை.

முடி உதிர்தல், சோர்வு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தைராய்டால் ஏற்படுமா?

ஏற்படலாம். ஆனால், இந்த அறிகுறிகள் வந்தவுடனே ‘இது தைராய்டுதான்’ என்று நாம் முடிவெடுக்கக் கூடாது. ரத்த சோகை, வைட்டமின் டி அல்லது பி12 குறைபாடு, மனஅழுத்தம், PCOS போன்ற பல காரணங்களாலும் இந்த அறிகுறிகள் வரலாம். அதனால் சரியான பரிசோதனை செய்து காரணத்தைக் கண்டறிவதே பாதுகாப்பானது.

தைராய்டு நோயில் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைக் தவிர்க்க வேண்டும். முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளைப் பச்சையாக உண்ணாமல், நன்றாக வேகவைத்து மிதமான அளவில் உண்ணலாம்.உடற்பயிற்சி: தினமும் 30-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது தசை வலிமைப் பயிற்சிகள் (Resistance training) செய்வது நல்லது.

தூக்கம் & மனஅழுத்தம்: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான சீரான தூக்கம் ஹார்மோன் சமநிலைக்கு மிக அவசியம்.

தைராய்டு பிரச்னை கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறை பாதிக்குமா?

கட்டுப்படுத்தப்படாத தைராய்டு பிரச்னை கருமுட்டை உருவாக்கத்தைப் பாதித்து, மாதவிடாயைச் சீரற்றதாக்கி, கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம். அதேபோல கர்ப்ப காலத்தில் தைராய்டு சீராக இல்லாவிட்டால் கருச்சிதைவு அல்லது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு வரக்கூடும். ஆனால், சரியான பரிசோதனை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு மூலம் தைராய்டைக் கட்டுக்குள் வைத்தால் ஆரோக்கியமாகப் பிரசவிக்க முடியும்.

தைராய்டு கட்டி அல்லது கழுத்தில் வீக்கம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

தைராய்டு வீக்கம் அல்லது கட்டி இருந்தால் முதலில் அதன் காரணத்தை Ultrasound Scan மற்றும் தேவையான பரிசோதனைகள் மூலம் கண்டறிவது அவசியம். அதன்பிறகே சிகிச்சைத் திட்டம் குறித்து முடிவு செய்ய வேண்டும்.கழுத்தில் திடீரெனப் பெரிய வீக்கம், விழுங்குவதில் சிரமம், மூச்சுத்திணறல் அல்லது குரலில் மாற்றம் இருந்தால் உடனடியாக நாளமில்லா சுரப்பி நிபுணரை (Endocrinologist) அல்லது அறுவை சிகிச்சை நிபுணரை அணுக வேண்டும்.

தைராய்டு பிரச்னையை முழுமையாக குணப்படுத்த முடியுமா?

மருத்துவ ரீதியாக ‘முழுமையான குணம்’ என்பதை விட ‘சீரான கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை’ என்பதே சரியானது. ஹைப்போ தைராடிசம் போன்ற நிலைகளில், தேவையான மருத்துவச் சிகிச்சை, சரியான வாழ்க்கைமுறை மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் பலர் இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது. தைராய்டு நோயுடன் வாழ்வது என்பது நோயால் கட்டுப்படுத்தப்படுவது அல்ல; நோயைப் புரிந்துகொண்டு அதைச் சரியாக நிர்வகிப்பதுதான் முக்கியம்.

சிகிச்சை பலனளிக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

2 வழிகளில் தெரிந்துகொள்ளலாம்:

1. அறிகுறிகள் குறைதல்: உடலின் சோர்வு குறைந்து புத்துணர்ச்சி வருவது, சீரான தூக்கம், செரிமானம் மற்றும் மாதவிடாய் சுழற்சி சீராவது.

2. ஆய்வக அறிக்கை: குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனைகளில் TSH மற்றும் Free T4 அளவுகள் சீராக இருப்பது. போன்றவற்றை வைத்து தெரிந்து

கொள்ளலாம்.

ஹோமியோபதி மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

தகுதியான மருத்துவரின் ஆலோசனையின்படி, தரமான மருந்துகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த மருத்துவ முறையிலும் சுய மருத்துவம் தவிர்க்கப்பட வேண்டும். சிகிச்சை காலத்தில் புதிய அறிகுறிகள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவை ஹோமியோபதி என்றில்லை எந்த மருத்துவத்துக்கும் பக்கவிளைவுகளை தவிர்க்க முடியும்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்