நன்றி குங்குமம் டாக்டர்
மூக்கிரட்டை
சாரணத்தி என்றழைக்கப்படும் மூக்கிரட்டை அரிய நன்மைகள் உடைய மூலிகையாகும். மூக்கிரட்டை இலை புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. தொற்று வியாதிகளின் பாதிப்பை சரிசெய்யும்.மூக்கிரட்டை செடி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுவதும் வெளியேற்றி உடல் நலம் காக்கிறது.
இரைப்பு நோய், ரத்தசோகையை போக்கும். மூளைக்கு ஆற்றல் அளித்து உடலுக்கு சுறுசுறுப்பையும் மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.வெள்ளெழுத்து குறைபாடுகள், கண் பார்வை கோளாறு நீக்கும்.
மூக்கிரட்டை சுவாச கோளாறுகளை சரி செய்கிறது. சளித்தொல்லையை நீக்கும். உடலில் ஏற்படும் அரிப்பு, ஒவ்வாமையைப் போக்கும்.சிறுநீரக பாதிப்புகளை குணப்படுத்தும் மலக்குடலை சுத்தம் செய்யும், மாலைக் கண் நோயை நீக்கும்.மூக்கிரட்டை கீரையை சமைத்து சாப்பிட்டுவர இதயநோய், ஆஸ்துமா, சளித் தொல்லை, மஞ்சள் காமாலை, மூலக்கோளாறு உள்ளிட்ட நோய்கள் யாவும் தீரும். சருமம் புதுப்பொலிவு பெறும். உடல் எடை குறைந்து அழகு மிளிறும்.
மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையை வளர்ந்து வரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக அமைந்துள்ளது.
நுரையீரலைத் தாக்கும் காசநோய் போன்ற கிருமிகளால் ஏற்படும் வறட்சி இருமலை போக்கிட மணத்தக்காளி சிறந்தது.சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. மணத்தக்காளி, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும் தன்மை உடையது.
ஆண்களில் சிலருக்கு ஏற்படும் மலட்டுத் தன்மைக்கு சிறந்த நிவாரணியாக மணத்தக்காளி பயன்படுகிறது. வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது மணத்தக்காளி கீரை.
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இவை கூறப்படுகிறது.மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமான மருந்தாக கரிசலாங்கண்ணிக் கீரை பயன்படுகிறது.கல்லீரல் செயல்பாட்டின் குறைவால் ஏற்படும் ரத்த சோகைக்கு கரிசலாங்கண்ணி சாற்றை 100 மி.லி. அளவு தினந்தோறும் அருந்தி வந்தால் சில தினங்களில் ரத்த சோகை நீங்கிவிடும். ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை வெட்டை நோய் ஏற்பட்டால் இந்நோய்க்கு கரிசலாங்கண்ணிதான் முதன்மையான மருந்தாகும்.கரிசலாங்கண்ணிச் சூரணம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். இரும்புச் சத்து கிடைக்கும்.கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது இக்கீரை, நாளமில்லா சுரப்பிகளை தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்கிறது. உடலை பொன் போல மாற்றுகிறது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகிறது. சளி, இருமல் நோய்களைப் போக்குகிறது.
ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடல் எடை குறையும். தொந்தி குறையும்.கண், முகம் வெளுத்தல், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை, கால், பாதம் வீக்கம் யாவும் குணமாகும்.கரிசலாங்கண்ணி கீரை தங்கச்சத்து, இரும்புச்சத்து உள்ள கீரை, இளநரை போக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.கரிசலாங்கண்ணித் தைலம் செய்து தலையில் தேய்த்துவர இளநரை நீங்கி கருகரு கூந்தல், முடி வளர்ச்சி ஏற்படும்.
கரிசலாங்கண்ணி அதிக குளிர்ச்சி என்பதால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்துவதை தவிக்க வேண்டும். உடல் கசடை நீக்கி தேக ஆரோக்கியத்தை இக்கீரை தருகிறது. தோல் பிணியை போக்குகிறது.புற்றுநோய் கிருமிகள் வளர விடாமல் தடுக்கிறது.தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. பார்வை நரம்புகளை பலப்படுத்தி கண் வறட்சியைப் போக்குகிறது.
தும்பை
தும்பை எனும் கவிழ்தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாதநோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும்.அதிகாலையில் தும்பை பூவைப் பசும்பாலில் அரைத்து உள்ளுக்குத்தர நாள்பட்ட விக்கல் நீங்கும்.நாட்டுச் சர்க்கரையுடன் தும்பைச் செடி சூரணத்தை கலந்து சாப்பிட்டுவர ரத்த சோகை குணமாகும்.புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை தும்பைக்கு உண்டு.
சங்குப்பூ
உடலில் பல நாட்கள் இருந்து கொண்டே நமக்கே அறியாமல் பலவித கெடுதிகளை செய்யும் ஒரு கொடிய நோய்தான் புற்றுநோய். இந்தப் புற்றுநோயை போக்கும் தன்மை சங்குப் பூவிற்கு உண்டு.
சங்குப்பூவில் உள்ள ஃபளேவனாய்ட் புற்றுநோய் செல்களை உடலில் உருவாக்காமல் தடுக்கின்றது. மேலும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் நலனை மேம்படுத்துகிறது.
சங்குப்பூ இலை அரைத்து தடவி வர யானைக்கால் நோய் குணமாகும்.
தொகுப்பு:- ஜெகாதா


