நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக மனித இதயம் இடதுபுறம் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், ஒருசிலருக்கு பிறப்பிலேயே இதயம் வலதுபுறம் அமைந்திருக்கும் அதிசயமும் நிகழ்கிறது. அந்தவகையில், சீர்காழியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு, இதயம் வலது புறம் அமைந்திருக்கிறது. இதயம் வலது புறம் அமைந்திருப்பதன் காரணம் என்ன.. இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன.. போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இவர்.
வலது பக்கம் இதயம் இருப்பது என்பது சிலருக்கு பிறப்பிலேயே ஏற்படும் ஒரு பிரச்னையாகும். மருத்துவர்கள் இந்த பிரச்னையை ‘டெக்ஸ்ட்ரோ கார்டியா’ மற்றும் சைடஸ் இன்வெர்சஸ் என்று பிரிக்கின்றனர்.
இதில், இதயம் மட்டும் வலது புறமாக, ஒரு கண்ணாடி பிம்பம் (Mirror Position) போலத் திரும்பி இருந்தால் அது ‘டெக்ஸ்ட்ரோ கார்டியா’ (Dextrocardia) என்று சொல்கிறார்கள். இதுவே, இதயத்தோடு சேர்த்து உடலின் அனைத்து உள் உறுப்புகளும் இடதுபுறத்திற்குப் பதிலாக வலதுபுறமாகவும், வலதுபுறத்திற்குப் பதிலாக இடதுபுறமாகவும் மாறி இருந்தால் அது ‘சைடஸ் இன்வெர்சஸ்’ என்று சொல்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு ‘கார்டஜனர் சிண்ட்ரோம்’ (Kartagener Syndrome) எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சளித்தொந்தரவுகள் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது.
சவால்களும் பாதிப்புகளும்
சுவாசப் பிரச்சனைகள்: பொதுவாக இதயம் வலது புறம் இருப்பதனால், நான் சந்திக்கும் பிரச்னை என்றால் அது பிறந்தது முதலே தீராத சளித் தொந்தரவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது. கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சிரைக்க தொடங்கிவிடும். இதுவே, ஒரு சிலருக்கு மூச்சுக்குழாய் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதனால், எப்போது வேண்டுமானாலும் எனக்கு எதுவும் நேரலாம் என்ற பயம் இருந்துகொண்டே இருக்கிறது.
அடுத்ததாக கருவுறுதலில் சிக்கல் இருக்கிறது. இதனால்தான் பிரச்னை என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. நானும் பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. அதன்பின்னர்தான் தெரிய வந்தது. இப்பாதிப்பு உள்ளவர்களில் சுமார் 90% பேருக்குக் கருவுறுதலில் சிக்கல்கள் இருக்கின்றது என்று.
அதன்பின்னர், எனக்கு என்னைப் போன்று வலது புறம் இதயம் இருப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, அவர்கள் மேற்கொள்ளும் மருத்துவ நடவடிக்கைகள் என்ன போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இதனால், இந்திய மருத்துவக் கவுன்சில் (IMC) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற அமைப்புகளிடம் இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை கேட்டேன். ஆனால், அவர்களிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை.
அதனால், நானே வாட்ஸப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களின் மூலம் தகவலை சேகரித்தேன். அதில், இந்தியளவில் இப்பாதிப்பு உள்ள 37 பேர் என்னுடைய பக்கத்தில் இணைந்தனர். தற்போது இவர்களை வைத்து ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். அதில் கேரளா, கோவா, மகாராஷ்டிரா, ஆந்திரா எனப் பல மாநிலங்களில் உள்ளவர்களும் இருக்கின்றனர்.
தேவைப்படும் மாற்றங்கள்
கல்வி முறையிலான மாற்றம்: பள்ளிப் பாடப்புத்தகங்களில் இதயம் இடதுபுறம் மட்டுமே இருக்கும் என்று கற்பிக்கப்படுவதற்குப் பதிலாக, வலதுபுறமும் இருக்க வாய்ப்புள்ளது என்ற புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவ அடையாள அட்டை: பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளது போல, அவசர காலங்களில் மருத்துவர்கள் எளிதில் அடையாளம் காண இவர்களுக்கு எனப் பிரத்யேக அடையாள அட்டைகளோ அல்லது பதக்கங்களோ வழங்கப்பட வேண்டும்.
அரசு கணக்கெடுப்பு: அரசு மாவட்ட வாரியாக முகாம்களை நடத்தி, இப்பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
சாதாரண மனிதர்களைப் போலவே நாங்களும் அன்றாட வேலைகளைச் செய்ய முடிந்தாலும், கடினமான வேலைகளைச் செய்யும்போது மூச்சுத் திணறல் போன்ற சிரமங்களை எதிர்கொள்கிறோம். எனவே, இத்தகைய அரிய வகை உடல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடமும், மருத்துவர்களிடமும் அதிகரிப்பது எங்களின் பாதுகாப்பான வாழ்விற்கு மிக அவசியமாகும் வலது பக்கம் இதயம் இருந்தால் என்ன நிகழும்?
இதயம் வலதுபுறம் அமைந்திருப்பவர்களுக்கு என்ன மாதிரியான விழிப்புணர்வு தேவை, அவர்கள் தங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மூத்த ஆலோசகர், தலையீட்டு இதயவியல் இதய நல மருத்துவர் பாபு ஏழுமலை. மார்பின் இடது பக்கத்தில் இதயம் இருப்பது நமக்கு பொதுவாக தெரிந்த ஒரு விஷயமே. ஆனால், சிலருக்குப் பிறவியிலேயே இதயம் மார்பின் வலது பக்கத்தில் அமைந்திருக்கும்; அதன் நுனிப்பகுதியும் வலதுபுறம் சாய்ந்திருக்கும்.
மிகவும் அரிதான இந்த நிலையை ‘டெக்ஸ்ட்ரோகார்டியா’ என்று மருத்துவ உலகு அழைக்கிறது. இது கேட்பதற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், வலது பக்கத்தில் இதயம் அமைந்திருக்கும் நபர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. பலருக்கு, குறிப்பாக வேறு எந்தப் பாதிப்பும் இன்றி ‘டெக்ஸ்ட்ரோகார்டியா’ மட்டும் இருப்பவர்களுக்கு, இதயத்தின் செயல்பாடு முற்றிலும் இயல்பானதாகவே இருக்கும்; அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படாது.
சில நேரங்களில், இந்த டெக்ஸ்ட்ரோகார்டியா நிலை, இதயம் சார்ந்த வேறு சில கட்டமைப்பு குறைபாடுகளுடனோ அல்லது மற்ற உறுப்புகளின் இடமாற்றத்துடனோ சேர்ந்து காணப்படலாம். எனவே, இதயம் எந்தப் பக்கத்தில் அமைந்துள்ளது என்பது இங்கு முக்கியமல்ல; அதன் கட்டமைப்பும் செயல்பாடுகளும் இயல்பாக உள்ளதா என்பதே மிக முக்கியமான கேள்வியாகும்.
டெக்ஸ்ட்ரோகார்டியா என்பது பிறவியிலேயே ஒரு நபரிடம் காணப்படும் ஒரு பிறழ்வு நிலையாகும். கர்ப்ப காலத்தில் குழந்தையின் மற்ற உறுப்புகள் வளர்ச்சியடையும் போதே இதுவும் நிகழ்கிறது. இது தானாகவோ அல்லது இயல்புக்கு நேர்மாறாக உறுப்புகள் இடம்மாறியிருத்தல் (‘சைட்டஸ் இன்வெர்சஸ்’) போன்ற நிலைகளுடன் சேர்ந்தோ ஏற்படலாம்.
இந்த சைட்டஸ் இன்வெர்சஸ் நிலையில், உடலின் உள்ளுறுப்புகள் வழக்கமான இடத்திற்குப் பதிலாக, கண்ணாடியில் தெரிவது போன்று நேரெதிர் திசையில் அமைந்திருக்கும். சிலருக்கு இது ‘ஹெட்டிரோடாக்ஸி சிண்ட்ரோம்’ எனப்படும் குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்நேர்வில் மார்பிலும், வயிற்றிலும் உள்ள உறுப்புகள் வழக்கமான அமைப்பு முறையில் இல்லாமல் மையப் பகுதியிலோ அல்லது எதிர்புறத்திலோ அமைந்திருக்கும்; மேலும் இதனுடன் இதய குறைபாடுகளும் இருக்கக்கூடும்.
ஏற்கனவே பிறவி இதயக் குறைபாடு உள்ள ஒருவருக்கு காரணத்தைக் குறிப்பிட முடியாத நெஞ்சுவலி, கடுமையான மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதயம் அல்லது நுரையீரல் பாதிப்போடு தொடர்புடையதாக கீழ்க்கண்ட சில அறிகுறிகள் இருக்கக்கூடும். குறைந்த உடல் உழைப்பிலேயே / செயல்பாட்டிலேயே சோர்வடைதல், நெஞ்சு படபடப்பு மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு, அடிக்கடி ஏற்படும் சைனஸ் தொற்றுகள், கழுத்தில் புடைத்துத் தெரியும் ரத்த நாளங்கள், வயிறு, கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம், உடலில் நீர் கோர்ப்பதால் உடல் எடை திடீரென அதிகரித்தல, இவற்றுடன் பசியின்மை, குறைந்த ரத்தஅழுத்தம், கடுமையான உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவையும் பொதுவான அறிகுறிகளாகும். பெரும்பாலான நேரங்களில், இந்த எச்சரிக்கை அறிகுறிகள் காலப்போக்கில் மேலும் தீவிரமாகி மோசமடைய வாய்ப்புள்ளது.
ஏற்படக்கூடிய சில சிக்கல்கள், இதயம் மாறி அமைந்திருப்பதன் காரணமாக ஏற்படுபவை அல்ல; மாறாக இதயத்தில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. டெக்ஸ்ட்ரோகார்டியா உள்ள சிலருக்கு இதய அறைகள், வால்வுகள் அல்லது முக்கிய ரத்த நாளங்களில் குறைபாடுகள் இருக்கலாம். இந்தக் குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து, ரத்தஓட்டத்தின் சீரான செயல்பாடும், உடலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவும் பாதிக்கப்படலாம்.
‘டெக்ஸ்ட்ரோ கார்டியா’வுடன் வாழ்வது
இந்த நிலை பயமுறுத்துவது போல தோன்றினாலும், பீதியடைய வேண்டியதில்லை. இதயம் எந்தப் பக்கத்தில் அமைந்திருக்கிறது என்பதை விட, அது எவ்வளவு நன்றாகச் செயல்படுகிறது என்பதே உண்மையில் முக்கியமானது. ‘டெக்ஸ்ட்ரோகார்டியா’ நிலை மட்டுமே உள்ள பலர், அதற்காக எந்த சிகிச்சையும் இன்றி முழுமையான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
எனவே சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய இதயத்தின் கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டறிவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
பின்னர், முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், இவர்களின் உடலே நிலையை எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதும் எந்தவொரு பிரச்னையையும் ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். இதன் மூலம் நோயாளிகள் தங்கள் இதய ஆரோக்கியத்தைச் சிறப்பாக பேணிக் காத்து, அச்சமின்றி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
சில முக்கிய சிக்கல்கள்
அரித்மியா: கட்டமைப்பு குறைபாடுகள் இதயத்தின் மின் அமைப்பில் குறுக்கிடும்போது, இதயத்துடிப்பு சீரற்றதாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக வேகமாகவோ, மெதுவாகவோ மாறக்கூடும்.
இதயச் செயலிழப்பு: சில நேரங்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு குறைபாடுகள் இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தை அளித்து, ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு உந்தித்தள்ளும் திறனைப் பாதிக்கின்றன.
குறைந்த ஆக்சிஜன் அளவு: சில பிறவிக் குறைபாடுகளால் ரத்தத்தில் ஆக்சிஜன் முறையாக கலப்பதில் தடங்கல் ஏற்படலாம். இதனால் நோயாளியின் தோல் அல்லது உதடுகள் நீல நிறமாக மாறக்கூடும்.
நுரையீரலில் உயர் ரத்தஅழுத்தம்: பிறவி இதயநோய் உள்ள சிலருக்கு, நுரையீரலுக்கு ரத்தத்தை வழங்கும் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கலாம்.
பக்கவாதம் மற்றும் ரத்தக் கட்டிகள்: சில வகையான பிறவி இதயக் குறைபாடுகள், ரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இவை ரத்த ஓட்டத்தின் மூலம் மூளைக்குச் சென்று பக்கவாதத்தை விளைவிக்கலாம்.
இதய உட்சவ்வு அழற்சி (எண்டோகார்டிடிஸ்): இதயத்தின் சில கட்டமைப்பு குறைபாடுகள் இதயத்தின் உட்புற உறை அல்லது வால்வுகளில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
தொகுப்பு - ஸ்ரீ தேவி குமரேசன்


