Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவுத்திரம் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

ஆசனவாய்ப் பகுதியில் எந்தப் பிரச்சனை வந்தாலும் எல்லோரும் மூலம் என்றுதான் நினைப்பர். ஆனால், பவுத்திரம் மற்றும் ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) போன்றவையும் முக்கியமானவை. பவுத்திரம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது. சிகிச்சை முறைகள் என்ன? என்பதை பற்றி விரிவாகக் காண்போம்.

பவுத்திரம் என்றால் என்ன?

ஆசனவாய்ப் பகுதியில் ஆசனவாய் சுரப்பிகள் (Anal Glands) உள்ளன. பல காரணங்களால் இதில் நோய்தொற்று ஏற்பட்டால் சீழ்க்கட்டி ஏற்படும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்யாவிட்டால், சீழ்க்கட்டியானது ஆசன- வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பரவி சீழ் வடியும். இதனையே பவுத்திரம் என்கிறோம். இதனை எளிதாக ஆசனவாய்க்கும், ஆசன வாயின் வெளியே உள்ள தோலுக்கும் இடையே உள்ள துளை என்றும் புரிந்து கொள்ளலாம். பவுத்திரம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லாகும். சமஸ்கிரதத்தில் பவத் என்றால் துளை என்று பொருள். புரையோடி சீழ் உண்டாகி துளை உண்டாவதால் தான் இதனை பவுத்திரம் (Fistula In ano) என்கிறோம்.

காரணங்கள்

*நோய்த்தொற்று

*மலச்சிக்கல்

*ஆசனவாய் பகுதியில் சீழ்க்கட்டி

*குடல்பகுதி காசநோய்

*குடல் புண்

*மலக்குடல் புற்றுநோய்

போன்றவை முக்கியமான காரணங்களாகும்.

பவுத்திரம் எவ்வாறு உண்டாகிறது?

ஆசனவாய்ப் பகுதியில் மேற்கூறிய ஏதேனும் ஒரு காரணத்தினால் சீழ்க்கட்டி உருவாகி, உடைந்து ஆறியபிறகும் காயமானது ஆசனவாய் சுரப்பியுடன் தொடர்பு கொண்டிருக்கும்போது நோய்த் தொற்றுகள் சுரப்பியை பாதித்து உட்புறமாகவே சீழ்க்கட்டியை உண்டாக்கியிருக்கும். இதனால் வெளிப்புறத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாவிட்டாலும் உட்புறமாக புரையோடி சீழ் கசிந்து கொண்டிருக்கும். இந்த இடத்தில் இருந்து சீழ் ஒழுகிக்கொண்டே இருப்பதால் புண் ஆறாமல் பரவிக் கொண்டே இருக்கும். பின்னர் இது ஆசனவாய்க்கு வெளியே தோல் பகுதியில் பரவி சீழ் வடியும். ஒரு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துளைகள் ஏற்படும். இவ்வாறு பவுத்திரம் உண்டாகிறது.

சில சமயங்களில் பவுத்திரம் தானாக ஆறி மூடினாலும் சில மாதங்கள் கழித்து மீண்டும் சீழ்ப்பிடித்துத் திரும்ப உண்டாகி மறுபடியும் சீழானது பவுத்திர துளை வழியாக வெளிவரும். பொதுவாக இந்த மாதிரியான சமயங்களில் வலி இருக்காது. ஆனால், புரை மூடிக்கொண்டால், சீழ் வலியைத் தோற்றுவிக்கும். ஒரு சிலருக்கு காய்ச்சல் கூட வரும்.

அறிகுறிகள்

1.ஆசனவாய் பகுதியில் தொடர்ந்து சீழ்வடிதல்

2.வலி

3.ஆசனவாய் பகுதியில் புண்

4.வீக்கத்துடன் கூடிய வலி மற்றும்

5.சில சமயங்களில் காய்ச்சல் ஏற்படும்.

மேற்கண்டவை பவுத்திரத்திற்கான முக்கியமான அறிகுறிகள் ஆகும்.

எவ்வாறு நாம் அறிந்துகொள்வது?

பாதிக்கப்பட்ட ஆசனவாய்ப் பகுதியில் சீழ்க்கட்டி இருந்தால் வலிக்கும். வீக்கம், புண் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதி சிவந்து தடித்திருக்கும். பவுத்திரம் பெரியதாக இருந்தால் அதன் முனையில் திறப்பு ஏற்பட்டிருக்கும். இதனை பல பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். பவுத்திரம் ஆசனவாயில் எவ்வளவு தூரம் எவ்வளவு ஆழமாக பரவியுள்ளது மற்றும் எந்த கோணத்தில் எந்த இடத்தில் பரவியுள்ளது என்பதை கண்டறிவோம்.

பவுத்திரத்தை கீழ்க்கண்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்

1.விரல் பரிசோதனை: ஆசனவாயின் உள்பகுதியில் ஆள்காட்டி விரலை மருத்துவராகிய நாங்கள் உள்செலுத்தி அதன் தன்மையை கண்டறிவோம்.

2.Anoscope / protoscope கருவியை ஆசனவாயின் உட்பகுதியில் செலுத்தி அதன் தன்மையை கண்டுபிடிக்கலாம்.

3.Fistulogram / CT Scan - மூலமும் பவுத்திரத்தின் தன்மையை கண்டுபிடிக்கலாம்.

4.MRI Fistulo Gram - பவுத்திரத்தை இந்த பரிசோதனை மூலம், மிகத் தெளி-வாக ஆசனவாயில் எந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரம், எந்த கோணத்தில் எவ்வளவு நீளத்திற்கு எப்படி பரவியுள்ளது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளலாம். கீழ்நிலை பவுத்திரமா, மேல்நிலை பவுத்திரமா என்பதை கண்டறியலாம்.

இது மிக முக்கியமாக பரிசோதனை ஆகும். பெரும்பாலும் அறுவை சிகிச்சை இந்தப் பரிசோதனையைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது.

பவுத்திரம் வகைகள்

*கீழ் நிலை பவுத்திரம்

*மேல் நிலை பவுத்திரம்

*Horseshoe பவுத்திரம்

சிகிச்சை முறை

கீழ்நிலை பவுத்திரத்திற்கு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்தே சரிசெய்து விடலாம். ஆனால் மேல்நிலைப் பவுத்திரத்திற்கு பல சமயங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை தேவைப்படும். நாம் இதனைப் பற்றிக் கீழே தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அறுவைசிகிச்சை சாதாரண முறையிலும், லேசர் முறையிலும் செய்யலாம்.

அறுவைசிகிச்சை

பவுத்திரத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். அதில் உண்மை இல்லை. பவுத்திரத்தை மருந்தால் குணப்படுத்தி விடுகிறோம் என்பார்கள். ஆனால், குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.இதில் பலமுறைகள் உள்ளன. பவுத்திரத்தின் தன்மையைப் பொறுத்து (நீளம், உயரம், ஒன்றுக்கு மேற்பட்ட துளைகள்) அறுவைசிகிச்சை மாறுபடும்.

அறுவைசிகிச்சை முறைகள்

சீழ்கட்டி அகற்றுதல்: இந்த முறையில் ஆசனவாய்ப் பகுதியில் உள்ள கட்டியில் இருந்து சீழை முற்றிலுமாக அகற்றிவிட்டு, பிறகு சிலவாரங்கள் கழித்து பவுத்திரத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும். சில சமயங்களில் சீழ் கட்டி, பவுத்திரம் இரண்டையும் ஒரே அறுவைசிகிச்சையிலும் சரிசெய்து விடலாம்.

Fistulotomy: இந்த வகை அறுவை சிகிச்சையில் பவுத்திரமும் முழுவதுமாக திறக்கப்பட்டு சரிசெய்யப்படுகிறது.

Fistulectomy: பெரும்பாலும் பவுத்திரத்திற்கு இந்த முறையில் தான் அறுவைசிகிச்சை செய்கிறோம். இதில் பவுத்திரம் முழுவதுமாக அகற்றப்படுகிறது. இதனால் மீண்டும் பவுத்திரம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

Seton’s Knot: இந்த வகை அறுவை சிகிச்சையில் பவுத்திரம் மிக நீளமாக இருக்கும் போது, கீழ்ப்பகுதியில் உள்ள பவுத்திரம் அகற்றப்பட்டு (Stage I Fistulectomy) மேற்பகுதியில் உள்ள பவுத்திரத்திற்கு நூலைக் (Seton) கட்டி வைக்க வேண்டும். பிறகு 6 வாரம் முதல் 3 மாதம் கழித்து Seton Knot-ஐ அடையாளமாகக் கொண்டு மீதியுள்ள பவுத்திரம் முழுவதுமாக அகற்றப்படும் (Stage II Fistuletomy) பொதுவாக இந்த முறை மேல்நிலைப் பவுத்திரத்திற்கு சிறந்த அறுவை சிகிச்சையாகும்.

VAAFT: இது புதிய முறை அறுவைசிகிச்சையாகும்.இந்த முறையில் வீடியோ கருவி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Fistula Plug: இந்த முறையில் பவுத்திரத்திற்கு உள் Fistula plug பொருத்தி பவுத்திரத்தை குணப்படுத்தலாம்.

தொகுப்பு: சரஸ்