நன்றி குங்குமம் தோழி
செல்போன் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. விளைவு 100ல் 60 சதவிகித குழந்தைகள் கண் பார்வை பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் சிறுவயதிலேயே கண்ணாடி அணிகிறார்கள். ‘‘சிறு வயதில் பெரும்பாலான குழந்தைகள் மயோப்பியா என்ற பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, தூரத்தில் இருப்பது தெளிவாக தெரியாது. இந்தப் பிரச்னை ஆறு முதல் 16 வயது குழந்தைகளுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்’’ என்கிறார் கண் மருத்துவர் ஷிபு வர்கே.
‘‘ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். முன்பு 20 சதவிகித குழந்தைகள் பார்வைத்திறன் பாதிப்பினால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று 60 சதவிகித குழந்தைகளுக்கு மயோப்பியா பிரச்னை உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் ஸ்கிரீன் நேரம். கோவிட் காலத்திற்குப் பிறகு குழந்தைகள் செல்போன் பார்க்கும் நேரம் அதிகரித்துவிட்டது. இதுவே குழந்தைகளின் பார்வைத்திறன் குறைபாடு ஏற்பட முக்கிய காரணம் என்று சர்வதேச அளவில் மருத்துவ துறையில் கணித்துள்ளனர். மேலும், இன்று குழந்தைகள் வெளியே விளையாட விரும்புவதில்ைல. சூரிய வெளிச்சம் அவர்கள் மேல் படுவதில்லை. அவர்களின் உலகமே செல்போன் என்றாகிவிட்டது. அதுவே மயோப்பியா என்ற கண் பார்வைக் குறைபாடு ஏற்பட 100 சதவிகித காரணமாக அமைகிறது.
மேலும், மரபணு காரணமாக கண் பார்வைக் குறைபாடு ஏற்படும். பெற்ேறாரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் கண் பார்வைக் குறைபாடு இருந்து கண்ணாடி அணிந்திருந்தால் அவர்களின் குழந்தைக்கு 40 சதவிகித பார்வையில் பாதிப்பு ஏற்படும். இதனுடன் செல்போன் பார்ப்பதால் பிரச்னை மேலும் அதிகரிக்கும். இதைத் தவிர உணவில் ஒமேகா 3 குறைபாடு
இருந்தாலும் கண் பார்வையை பாதிக்கும். எட்டு வயதில் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆறு வயதிலேயே ஏற்படும்.
மரபணு காரணமாக கண் பார்வையில் குழந்தைக்கு பிரச்னை ஏற்படும் என்று நினைக்கும் பெற்றோர் சிறு வயது முதலே குழந்தைகளின் வாழ்க்கை முறையினை மாற்றி அமைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் செல்போன் பார்க்கும் நேரத்தை குறைத்து வெளியே விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கண் பிரச்னைக்கு கண்ணாடி அணிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், மயோப்பியாவினால், தீவிர பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு விழித்திரையில் ஓட்டை, விழித்திரை விலகல், க்ளோக்கோமா, நீரழுத்த பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், 60 வயதில் ஏற்படும் கண்புரை பிரச்னை 40 வயதிலேயே பாதிக்கலாம். தொலைதூரம் பார்வை தெளிவாக மட்டுமில்லாமல், கண் சார்ந்த மற்ற பிரச்னைகளும் இதனால் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றவர், கண் பார்வைக் குறைபாட்டினை எவ்வாறு பெற்றோர் அறிந்து கொள்ளலாம் என்று ஆலோசனை கூறினார்.
‘‘குழந்தைகள் மூன்று வயதிலேயே புத்தகங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். அந்த சமயத்தில் புத்தகத்தை சாதாரணமாக படிக்காமல், கண்களுக்கு அருகே வைத்து படிப்பார்கள். தூரத்தில் உள்ள எழுத்துக்களை படிக்கும் போது கண் இமைகளை சுருக்கிக் கொண்டு பார்ப்பார்கள். பள்ளியில் கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தவறாக எழுதுவார்கள். இதனால் அவர்களின் ஆளுமை மேம்பாட்டில் பிரச்னை ஏற்படும். மற்றவர்களிடம் பேசுவதை தவிர்ப்பார்கள். மனதாலும் பாதிக்கப்படுவார்கள். பெற்றோர் குழந்தைகளின் பார்வைத் திறனில் ஏதும் மாற்றம் கண்டறிந்தால், உடனடியாக கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கண் பார்வைக்கான பிரச்னைக்கு கண்ணாடி, லென்ஸ், லேசர் சிகிச்சை மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். தற்போது பார்வைத்திறன் மேலும் பாதிக்காமல் இருக்க நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. டைல்யூட் அட்ரோபின் ஐ டிராப்ஸ், கண்களில் செலுத்தப்படும் டிராப்ஸ். இதனை ஐந்து வயதில் குழந்தைகளுக்கு செலுத்தும் போது கிட்டப்பார்வை அதிகரிக்காமல் பாதுகாக்கும். மயோப்பியா கண்ணாடிகள், மயோப்பியா பிரச்னைக்கான சிறப்பு லென்ஸ் பொருத்தப்பட்ட கண்ணாடி.
நம்முடைய விழி உருண்டை வடிவம். சாதாரண லென்ஸ் தட்டை யாக இருக்கும். அதனால் கண்ணாடி அணிந்தாலும் பார்வைத்திறன் குறையுமே தவிர சரியாகாது. நம்முடைய விழியின் அமைப்பிற்கு ஏற்ப லென்ஸும் வளைந்திருக்கும் போது பார்வைத்திறன் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
ஆர்தோ கே, இது பார்க்க கான்டாக்ட் லென்ஸ் போல இருக்கும். இரவு தூங்கும் போது கண்களில் பொருத்திக் கொண்டால் நாளடைவில் பார்வைத்திறன் மேம்படும். இவை எல்லாம் பார்வைத்திறன் மேலும் பாதிக்காமல் இருக்க பாதுகாக்கக்கூடிய சிகிச்சை முறைகள் தான். 18 வயதிற்குப் பிறகு பார்வைத்திறனில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க லாசிக் லேசர் சிகிச்சையினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பார்வைத்திறன் முழுமையாக குணமாகும். இதில் பல அட்வான்ஸ்டு சிகிச்சை முறைகள் உள்ளன.
தற்போது ஜீன் தெரபி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயோப்பியா பாதிக்கக்கூடிய ஜீன்களை உடலில் செலுத்துவதன் மூலம் கண் பார்வை சீராகி கண்ணாடி அல்லது லென்ஸ் அணிய வேண்டிய அவசியமே இருக்காது. மயோப்பியா என்றால் தொலைவில் உள்ள விஷயங்கள் தெரியாது. செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறார்கள். இது மயோப்பியாவுடன் ஸ்பெரிக்கல் மற்றும் சிலெண்டிரிக்கல் பிரச்னையும் ஏற்படுத்தும். கரு விழியில் ஏற்படும் பிரச்னையை சிலெண்டிரிக்கல் என்று குறிப்பிடுவோம். குழந்தைகள் கண்களை அதிகமாக தேய்க்கும் போது கருவிழியின் அமைப்பு மாற வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
40 வயதிற்கு மேல், தூரப்பார்வை பிரச்னையும் ஏற்படும். அதாவது, அருகிலுள்ள எழுத்துக்களை படிக்க முடியாது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என இரண்டு பிரச்னையை பிராகிரசிவ் என்று குறிப்பிடுவோம். இரண்டுக்குமான லென்ஸ்களை ஒரே கண்ணாடியில் பொருத்திக் கொள்ளலாம். பிரச்னை எதுவாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்’’ என்றார் கண் மருத்துவர் ஷிபு வர்கே.
தொகுப்பு: நிஷா


