நன்றி குங்குமம் டாக்டர்
வெண்டைக்காய் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இதன் தனித்துவமான வழவழப்புத் தன்மை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
இதன் அறிவியல் பெயர்: ஏபெல்மோஸ்கஸ் எஸ்குலெண்டஸ் (Abelmoschus esculentus).
ஊட்டச்சத்து மதிப்பு - 100 கிராமுக்கு.
வெண்டைக்காயில் கலோரிகள் மிகக் குறைவு. ஆனால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் 3.2. கிராம் நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கவும் இதுவே முக்கியக் காரணமாகும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும், வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
கலோரி - 33 Kcal.
புரதம் - 1.9 கிராம்.
கார்போஹைட்ரேட் - 7.5 கிராம்.
நார்ச்சத்து - 3.2 கிராம்.
வைட்டமின் சி - 23 மில்லிகிராம்.
வைட்டமின் கே - 31.3 mcg.
வைட்டமின் ஏ - 36 mcg.
ஃபோலேட் - 60 mcg.
கால்சியம் - 82 மில்லிகிராம்.
பொட்டாசியம் - 299 மில்லிகிராம்.
மெக்னீசியம் - 57 மில்லிகிராம்.
இரும்புச்சத்து - 0.6 மில்லிகிராம்.
பாஸ்பரஸ் - 61 மில்லிகிராம்.
வெண்டைக்காய் வகைகள்
பச்சை வெண்டை
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பொதுவான வகை இது.
சிவப்பு வெண்டை
இதன் தோல் சிவப்பு நிறத்தில் இருக்கும். சமைக்கும்போது இது பச்சை நிறமாக மாறிவிடும். இதில்
ஆக்ஸிஜனேற்றிகள் சற்றே அதிகம்.
மலை வெண்டை (நாட்டு வெண்டை)
அளவில் சற்று பெரியதாகவும் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும் கருதப்படும் பாரம்பரிய ரகங்கள்.
ஆரோக்கிய நன்மைகள்
வெண்டைக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு
வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை மற்றும் நார்ச்சத்து, குடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வது தடுக்கப்பட்டு சீராக இருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
வெண்டைக்காயில் உள்ள கரையும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள பெக்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இதயநோய்கள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கின்றன.
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம்
வெண்டைக்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது வயிற்றுப்புண்(அல்சர்) உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.
எடை குறைப்பு
கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இதை சாப்பிட்டதும் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் அதிக உணவு உட்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.
எலும்பு பலம்
இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புத் தேய்மானப் பிரச்னைகளைத் தவிர்க்க உதவுகிறது.
வெண்டைக்காயின் பயன்கள்
சமையல் பயன்கள்: சாம்பார், பொரியல், காரக்குழம்பு, சூப், பச்சடி மற்றும் சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்.
வெண்டைக்காய் நீர்: இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை நீளவாக்கில் நறுக்கி, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடிப்பது சர்க்கரை அளவைக் கட்டுப்டுத்தப் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.
காபிக்கு மாற்று
வெண்டைக்காய் விதைகளை வறுத்துப் பொடிசெய்து காஃபின் இல்லாத காபியாகப் பயன்படுத்தும் வழக்கம் முந்தைய காலகட்டத்தில் (குறிப்பாக போர்க் காலங்களில்) இருந்துள்ளது.
அழகு பராமரிப்பு
வெண்டைக்காயைக் கொதிக்க வைத்து அந்த வழவழப்பான தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து கூந்தலை அலசினால் முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறும்.
சமீபத்திய ஆராய்ச்சிகள்
வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் குறித்து நவீன அறிவியலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கணைய பீட்டா செல்கள் மீட்பு
வெண்டைக்காய் சாறு, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சேதமடைவதைத் தடுப்பதோடு, அவற்றை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
இன்சுலின் உணர்திறன்
மூலக்கூறு அளவிலான ஆராய்ச்சிகளில் வெண்டைக்காய் மரபணுக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது.
உடல் பருமன் மற்றும் கொழுப்பு குறைப்பு
மருத்துவக் கட்டுப்பாட்டு ஆய்வுகளின் தொகுப்பாய்வு முடிவுகள், வெண்டைக்காயைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ), உடல் எடை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைக்கிறது.
சமையல் குறிப்புகள்
பலருக்கு வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை பிடிப்பதில்லை அதைக் குறைக்க சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
புளிப்புத் தன்மை சேர்த்தல்
வெண்டைக்காயை வதக்கும்போது, சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தக்காளி, புளித்தண்ணீர் அல்லது தயிர் சேர்த்தால் அதன் வழவழப்பு உடனடியாகக் குறையும்.
சரியான முறையில் நறுக்குதல்
காயை நீரில் கழுவிய பின், ஒரு சுத்தமான பருத்தித் துணியால் ஈரம் போகத் துடைத்துவிட்டு நறுக்கினால் வழவழப்பு அதிகமாக வராது.
முன்னதாகவே வதக்குதல்
குழம்பு அல்லது சாம்பாரில் சேர்க்கும் முன், வெண்டைக்காயை சிறிதளவு எண்ணெயில் தனியாக வதக்கிவிட்டுச் சேர்ப்பது நல்லது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை (பக்க விளைவுகள்)
வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமானது என்றாலும் சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள் இதை அளவோடு சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கற்கள்
வெண்டைக்காயில் ஆக்சலேட் சத்து அதிகமாக உள்ளது. சிறுநீரகக் கல் (குறிப்பாக கால்சியம் ஆக்சலேட் கற்கள்) பிரச்னை உள்ளவர்கள் இதை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாயு மற்றும் வயிறு வீக்கம்
இதில் ஃப்ரக்டாண் எனப்படும் ஒருவகை கார்போஹைட்ரேட் உள்ளது. குடல் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு இது வாயுத்தொல்லை அல்லது வயிறு வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
மூளை வளர்ச்சியும் வெண்டைக்காயும் ப்ரைன் ஹெல்த்: மித் அண்ட் ஃபேக்ட்
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும், மூளை வளரும் என்ற பொதுவான நம்பிக்கை
நம்மிடையே உள்ளது. இது நூறு சதவீதம் உண்மையா என்றால், கணக்கு வருவதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், இதில் உள்ள ஃபோலேட், ஜிங்க் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையின் செல்களுக்குப் பாதுகாப்பு அளித்து, நினைவாற்றலையும் சுறுசுறுப்பையும் மேம்படுத்த உதவுகின்றன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
வெண்டைக்காய் வெறுமனே ஒரு சாதாரண காய் மட்டுமல்ல, அது பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒரு சிறந்த செயல்பாட்டு உணவு என்பதை நவீன அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.
தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா


