Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நலம் தரும் நாட்டு காய்கறிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சத்து நிறைந்த கத்தரிக்காய்!

நம் வீட்டு சமையலறையில் குழம்பு, பொரியல், கூட்டு என பல வகைகளில் சுவை சேர்க்கும் கத்தரிக்காய், வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச் சத்துக்களையும் வழங்குகிறது. கத்தரிக்காயின் அறிவியல் பெயர் solanum melongena. இது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளடக்கிய நைட்ஷேட் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

கத்தரிக்காய் வகைகள்

கத்தரிக்காயில் ஊதா கத்தரி, குண்டு கத்தரி, வரி கத்தரி, வெள்ளை கத்தரி, நீள கத்தரி, பவானி கத்தரி, முள்ளு கத்தரி என 20க்கும் மேற்பட்ட கத்தரி வகைகள் உள்ளன. நிறம், அளவு மற்றும் வடிவத்தின் அடிப்படையில் கத்தரிக்காயில் உள்ளூர் ரகங்கள் முதல் சர்வதேச ரகங்கள் உள்ளன. ஊதா, அடர் நீலக் கத்தரிக்காய்: இதுதான் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் வகை. இதன் தோலில் ஆந்தோசயனின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. பச்சைக் கத்தரிக்காய்: இது சற்று இனிப்புச் சுவையுடன் இருக்கும். குழம்பு மற்றும் கூட்டிற்கு மிகவும் ஏற்றது.

வெள்ளைக் கத்தரிக்காய்

இது பார்ப்பதற்கு அச்சு அசலாக முட்டை போலவே இருக்கும். இதனால்தான் ஆங்கிலத்தில் கத்தரிக்காய்க்கு Eggplant என்ற பெயரும் உருவானது.

வரி கத்தரி மற்றும் முள் கத்தரிக்காய்

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக விளையும் முள் கத்தரி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியில் வரி கத்தரிக்காய் சுவைக்காக மிகவும் பிரசித்திபெற்றவை.

கிடைக்கும் காலம்

கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். இது ஒரு வெப்பமண்டலத் தாவரம் என்பதால் இந்தியா முழுவதும் ஆண்டு முழுவதும் எவ்விதத் தடையுமின்றி விளைவிக்கப்பட்டு சந்தைகளில் கிடைக்கிறது.

ஊட்டச்சத்து மதிப்பு (100 கிராம் அளவில்)

கத்தரிக்காய் மிகக் குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்ட காய்கறி ஆகும்.

கலோரிகள் - 24 -25 kcal

நார்ச்சத்து - 3 கிராம்

கார்போஹைட்ரேட் - 5.9. கிராம்

புரதம் - 1 கிராம்

பொட்டாசியம் - 188 - 222 மில்லிகிராம்

வைட்டமின் சி - 1.8 - 2,2, மில்லிகிராம்

வைட்டமின் கே - 2.9 - 3.5 mcg

ஃபோலேட் (வைட்டமின் பி9) - 16 -34 mcg

தினசரி தேவை

கத்தரிக்காயை தினமும் சுமார் 300 முதல் 400 கிராம் வரை பல்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுவான ஊட்டச்சத்துப் பரிந்துரை. அதில் 100 முதல் 150 கிராம் வரை கத்தரிக்காயை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்

எடை குறைப்பு: இதில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், தேவையற்ற பசியைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய நலம்: கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

மூளைசெல்கள் பாதுகாப்பு

அடர் நிறக் கத்தரிக்காயின் தோலில் உள்ள நாசுனின் எனும் ஆன்டி - ஆக்ஸிடன்ட் மூளை செல்களைச் சேதத்திலிருந்து பாதுகாத்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல்

இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. இது உணவிலிருந்து சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைப்பதால் டைப் - 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

சமீபத்திய ஆராய்ச்சிகள்

நவீன அறிவியலும் கத்தரிக்காயின் பல்வேறு மருத்துவப் பலன்களைத் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. மேலும் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

சிறுநீரகப் பாதுகாப்பு

அதிகப்படியான இனிப்பு உணவால் ஏற்படும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் (மெட்டபாலிக் சிண்ட்ரோம்) போது சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் பாதிப்புகளைக் கத்தரிக்காயின் சாறு திறம்படக் குறைப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சூரியக் கதிர்களிலிருந்து சருமப் பாதுகாப்பு

சமீபத்திய ஆய்வொன்றில் புளிக்கவைக்கப்பட்ட கத்தரிக்காய் தோலின் சாறு (fermented peel extract) மிகச் சிறந்த ஆன்டி - ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சூரியனின் கொடிய புற ஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகள்

எலும்பு ஆரோக்கியம்

கத்தரிக்காயில் உள்ள இரும்பு, கால்சியம் மற்றும் பினாலிக் சேர்மங்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன. இது வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மான நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

புற்றுநோய் தெரிப்பு பண்புகள்

இதில் குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி - ஆக்ஸிடன்ட் உள்ளது. இது செல்களில் ஏற்படும் டிஎன்ஏ பாதிப்புகளைத் தடுத்து, கட்டிகள் மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறந்த குடல் நலம்

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு சிறந்த உணவாக ப்ரீபயாடிக் செய்யப்படுகிறது. இது இரைப்பையில் செரிமான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டி, மலச்சிக்கலை எளிதில் தீர்க்கிறது.

ரத்த சோகையைத் தடுத்தல்

கத்தரிக்காயில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் சோர்வு, ரத்த சோகை நீங்குவதுடன், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது.கர்ப்பிணிகளுக்கு உகந்தது: கத்தரிக்காயில் நரம்பு வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலேட் கணிசமான அளவில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இதை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு

கத்தரிக்காய் இயற்கையாகவே கல்லீரலில் தங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பித்தநீர் உற்பத்தியைச் சீராக்கி, கொழுப்பு உணவுகள் எளிதில் செரிமானமாகப் பெரிதும் உதவுகிறது.

சருமம் மற்றும் முடி பராமரிப்பு

கத்தரிக்காயில் சுமார் 92 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இது உடலையும் சருமத்தையும் வறட்சியிலிருந்து பாதுகாத்து நீரேற்றமாக வைக்கிறது. இதிலுள்ள வைட்டமின்கள் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வதைத் தடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகின்றன. கத்தரிக்காயின் தோலில்தான் அதிகப்படியான ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, சமைக்கும்போது தோலை நீக்காமல் அப்படியே பயன்படுத்துவது முழுமையான பலன்களைத் தரும்.

தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா