நன்றி குங்குமம் டாக்டர்
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நிறையப்பேர் சந்திக்கும் ஒரு பிரச்னை பொடுகுப் பிரச்னைதான். இந்தப் பொடுகு பிரச்னை இருந்தாலே தலைமுடி அதிகமாக உதிர தொடங்கும். பொடுகு பிரச்னையை சரிசெய்ய பலரும் பல வழி முறைகளை கடைப்பிடிக்கின்றனர். அதில் பலரும் செய்யும் ஒரு தவறு, தலையில் எண்ணெய் வைப்பதுதான். பொடுகு இருக்கும் சமயத்தில் எண்ணெய் வைக்கும் போது, பொடுகு இன்னும் அதிகமாகத்தான் செய்யும். சரி, அப்படியென்றால் பொடுகுத் தொல்லைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
தலையில் பொடுகு அதிகம் இருந்தால், நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே சில ஹேர்பேக்குகளை தயார் செய்து போடுவதன் மூலம், பொடுகு கட்டுப்படுவது மட்டுமின்றி, உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு, அழற்சி போன்றவையும் சரியாகும்.
பொடுகுத் தொல்லையிலிருந்து தீர்வு தரும் ஹேர்மாஸ்க்குகள்
க்ரீன் டீ, புதினா எண்ணெய் மற்றும் வினிகர் ஹேர் மாஸ்க் - இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 1 கப் க்ரீன் டீயுடன், 2-3 துளிகள் புதினா எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி வெள்ளை வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் தலைமுடியை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி தலையில் ஊற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர பொடுகுத் தொல்லை கட்டுப்படும்.
செம்பருத்தி மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க் - இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து, அத்துடன் 10-12 செம்பருத்தி இலைகள் மற்றும் அரை கப் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
வாழைப்பழம், தேன், எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் - இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் - இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் படும்படி நன்கு தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
எலுமிச்சை, தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு: எலுமிச்சை சாறு, தயிர், மற்றும் பச்சை பயிறு மாவு சேர்த்து கலந்து தலையில் தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
குறிப்பு: பொடுகை கட்டுப்படுத்தும் ஸ்பெஷல் ஷாம்பூக்களைப் பயன்படுத்துவது நல்லது.
ஆரோக்கியமான உணவு: தினசரி சமச்சீரான ஆரோக்கியமான உணவை உட்கொள்வது பொடுகைக் குறைக்க உதவும்.
மன அழுத்தம் குறைத்தல்: மன அழுத்தத்தைக் குறைப்பது பொடுகைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
தொகுப்பு: ரிஷி


