நன்றி குங்குமம் டாக்டர்
சிறுதானிய வகைகளிலேயே உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், பல நன்மைகளில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்பது சாமை ஆகும். சிறுதானியங்களிலேயே இந்த தானியம் மிகச் சிறியதாக இருப்பதால் ஆங்கிலத்தில் இதை லிட்டில் மில்லட் (Little Millet) என்று அழைக்கின்றனர்.
பழங்குடியினரின் பலம்
ஆதி காலம் முதல் இந்தியாவின் பல பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் உணவுகளில் சாமை மிக முக்கிய உணவாக இன்றளவும் உள்ளது. அவர்கள் இதை குட்கி என்று அழைக்கின்றனர். அவர்களின் அபாரமான வலிமைக்கும், உடல் உழைப்பிற்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இதுவே முக்கியக் காரணமாக உள்ளது.
சாமையின் ஊட்டச்சத்து மதிப்புகள் (100 கிராம் அளவில்)
ஆற்றல் - 341 Kcal
நார்ப்பொருள் - 7.6 கிராம்
புரதச்சத்து - 7.7. கிராம்
கார்போஹைட்ரேட் - 67 கிராம்
இரும்புச்சத்து - 9.3 மி.கிராம்
கால்சியம் - 17 மி.கிராம்
மக்னீசியம் - 133 மி.கி
தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு.
பரிந்துரைக்கப்படும் அளவு: ஒருவர் ஒரு வேளைக்கு 50 முதல் 75 கிராம் வரை சாமை அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
எப்படி சாப்பிடுவது?
சாமையை வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் வரை உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும். சாமையை சாதமாக வடித்துச் சாப்பிடுவது மட்டுமின்றி, சாமை இட்லி, சாமை தோசை அல்லது சாமை உப்புமா போன்ற உணவுகளை தயார் செய்தும் சாப்பிடலாம்).
சாமையை உணவு தயாரிக்கும் முன் ஊறவைக்கும் நேரம்!
உருவத்தில் சிறியதாக இருந்தாலும் சாமையை சமைப்பதற்கு முன் குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்ற சிறுதானியங்களை விட சாமை மிக மென்மையானது. எனவே, ஊறவைத்த பின்பு இதை மிக எளிதாகவும் வேகமாகவும் சமைத்துவிட முடியும்.
கர்ப்பகாலத் திட்டமிடலுக்கும், எடை குறைப்பிற்கும் சாமை அரிசியை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான சில சிறப்புக் குறிப்புகள்...
முருங்கைக்கீரையுடன் அற்புதமான கூட்டணி!
கர்ப்பத்திற்குத் தயாராகும். பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து மிக மிக அவசியம் ஆகும். சாமை அரிசியுடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து சமைப்பது (உதாரணமாக, சாமை மாவுடன் முருங்கைக்கீரையைச் சேர்த்த அடை அல்லது சாமை மாவுடன் முருங்கைக் கீரை சேர்த்து காய்ச்சிய கஞ்சி) ஒரு மிகச்சிறந்த மருத்துவ உணவாகச் செயல்படும். இது கருப்பையைச் சுத்தப்படுத்தி, கருமுட்டையின் தரத்தை அதிகரிக்கும். எனவே, கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்கள் சாமையை உணவில் சேர்த்து வருவது நல்ல பலனை தரும்.
இரவு உணவிற்கு மிகச் சிறந்தது!
சிறுதானியங்களிலேயே சாமை மிக எளிதில் செரிமானமாகக் கூடியது. எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதை இரவு உணவாக சாமை இடியப்பம், சாமை தோசை அல்லது சாமை அரிசியுடன் காய்கறி சேர்த்து செய்த புலாவ், சாமை உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது இரவு முழுவதும் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்து, கொழுப்பைக் குறைக்க உதவும்.
மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதிக்கு!
மாதவிடாய் சுழற்சியின் முதல் 14 நாட்களில்(follicular Phase - அதாவது மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் கருமுட்டை வெடிக்கும் நாள் வரை 14 நாட்கள் உடலுக்கு தேவையான எனர்ஜி மற்றும் இரும்புச்சத்தை ஈடுகட்ட சாமை ஒரு சிறந்த தேர்வாகும். இது கருமுட்டை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
தயிர் சாதத்திற்குச் சிறந்த மாற்று!
மதிய வேளையில் வெள்ளை அரிசித் தயிர் சாதம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என நினைப்பவர்கள். சாமையில் தயிர்சாதம் செய்து சாப்பிடலாம். நன்கு குழைய வேகவைத்த சாமையில், மோர், சின்ன வெங்காயம், மாதுளை முத்துகள் மற்றும் வெள்ளரிக்காய் துருவல் சேர்த்துச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்துக்கும் உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும் மிகச் சிறந்தது.
சாமையின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்!
ஆற்றல் மற்றும் ரத்த விருத்தி
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டவும். ரத்த சோகையைத் தடுக்கவும் சாமையில் உள்ள இரும்புச்சத்து உதவுகிறது. அதுபோன்று இது கர்ப்பகாலத்திற்குத் தேவையான இரும்புச்சத்தை உடலில் முன்கூட்டியே சேமிக்கவும் உதவும்.
ஆரோக்கியமான கருமுட்டை
சாமையில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் மக்னீசியம், பெண் கருமுட்டையின் தரத்தையும் மேம்படுத்துவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அடிவயிற்று கொழுப்பைக் குறைக்கும்
சாமையில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து மெட்டபாலிசத்தை தூண்டி, குறிப்பாக அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்
சாமை கருப்பையை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் துத்தநாகம் ஹார்மோன் உற்பத்தியைச் சீராக்கி பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தப் பெரிதும் உதவுகிறது.
மலச்சிக்கலைத் தடுக்கும்
குடல் இயக்கத்தை மென்மையாக்கி செரிமானத்தை எளிதாக்கும். சமீபத்திய ஆராய்ச்சிகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி சமீபத்திய ஊட்டச்சத்து ஆராய்ச்சிகளில், சாமை அரிசியைத் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தவர்களுக்கு இடுப்பு சுற்றளவு, ரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைப்பு
சாமையில் உள்ள டானின்கள் மற்றும் பிளேவனாய்டுகள் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டுகளாகச் செயல்
படுகின்றன.
இவை உடலில் உள்ள செல்களைப் பாதுகாப்பதோடு, வயது முதிர்வால் கருமுட்டைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதாக இனப்பெருக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாமை உணவுப் பழக்கத்தில் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
தொகுப்பு: உணவியல் நிபுனர் சங்கீதா



