Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கர்ப்பகால நீரிழிவால் எதிர்காலத்தில் வரும் தாக்கங்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மட்டுமே வரக்கூடிய ஒரு வகையான நீரிழிவை நாம் கர்ப்பகால நீரிழிவு என்கிறோம். ஒரு பெண் கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்கள் அல்லது அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த நீரிழிவு கண்டறியப் படுகிறது.இன்சுலினின் அளவு மிக குறைவாக சுரப்பதால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாததால் இந்த வகையான நீரிழிவு வருகிறது. ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் கருவுற்று இருக்கும் தாயையும் அவருடைய சேயையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

மற்ற வகையான நீரிழிவு போல் அல்லாது கர்ப்பகால நீரழிவு குழந்தை பிறந்தவுடன் பலருக்கு காணாமல் போய்விடும். ஆனால் பிற்காலத்தில் மீண்டும் நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.

கர்ப்பகால நீரிழிவு வருவதற்கான காரணங்கள்

உடலில் இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படக் கூடிய நீரிழிவு என்றாலும், இது எதனால் ஏற்படுகிறது என்ற துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆயினும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் பரம்பரை தன்மையாக நீரிழிவு உள்ளவர்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு அதிகம் தென்படுகிறது என கூறலாம்.

அறிகுறிகள் மற்றும் நோய் கண்டறிதல்

பெண்கள் கருவுற்றிருக்கும்போது நீரிழிவின் அறிகுறிகள் மற்றும் நோய் கண்டறிதல் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிலருக்கு அறிகுறிகள் கவனிக்கப்படாமல் கூட போகலாம். ஏனெனில் கர்ப்பகாலத்தில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களும் நீரிழிவின் அறிகுறிகளும் ஒன்றாக பிரதிபலிப்பதே அதன் காரணமாகும். அதிகமான தாகம், பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், காரணமற்ற எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நோய் கண்டறிதல் பொதுவாக இருபத்திநான்கு முதல் இருபத்திஎட்டு வாரங்களில் செய்யப்படுகிறது. குளுக்கோஸ் டோலெரான்ஸ் டெஸ்ட் எனப்படும் (GTT) பரிசோதனை இதற்கு பயன்படுகிறது. இந்த பரிசோதனை மூலம் நீரிழிவு உள்ளதா அல்லது எந்த நிலையில் உள்ளது என துல்லியமாக கண்டறியலாம். இதனை முன்பே கண்டறிவதால் நீரிழிவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாம் தடுக்க முடியும்.

கர்ப்பகால நீரிழிவு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள்

கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை, கருவுற்றுயிருக்கும் தாயின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. பிற்காலத்தில் டைப்2 வகை நீரிழிவாக மாறவும் வாய்ப்புகள் அதிகமாகிறது. சுகப்பிரவசத்திற்கான வாய்ப்புகள் குறைந்து பிரசவ சிக்கல்களை அதிகரிக்கிறது. அதேசமயம் கருவில் இருக்கும் குழந்தைக்கு தலை பெருசாகவும் உடல் பருமனாகவும் குழந்தை பருவத்தில் நீரிழிவு ஏற்படவும் பிறக்கும் பொழுதே காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.அதோடு மட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்கு சுவாசக் கோளாறுகள், தாழ்வு சர்க்கரை, மஞ்சள்காமாலை பிறந்த குழந்தைக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது கர்ப்பகால நீரிழிவு பிற்கால ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது.

கர்ப்பகால நீரிழிவை சரியாக பராமரிக்காவிடில் குழந்தை மற்றும் தாய்க்கு பிற்காலத்தில் டைப்2 வகை நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கர்ப்பகால நீரிழிவு இருந்த பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாகவும் இருதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தாயின் நல்வாழ்வையும் வாழ்க்கை தரத்தையும் பாதிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது மிகஅவசியமான ஒன்றாகும்.கர்ப்பகால நீரிழிவு வந்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் உடல் பருமன் ஏற்படவும் டைப்2 வகை நீரிழிவு குழந்தை பருவத்திலேயே வரும் அபாயம் உள்ளது.

கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்தும் முறைகள் - உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள்

நீரிழிவை கட்டுப்படுத்த பன்முக அணுகு முறையை கடைபிடிப்பது அவசியம். உணவுக்கட்டுப்பாடு என வரும்போது சரியான உணவுமுறையை தேர்வு செய்வது மிகஅவசியம். முழுதானியங்கள், புரதங்கள் காய்கறிகளும் பழங்களும் சேர்க்க வேண்டும். சர்க்கரையை அதிகரிக்கக்கூடிய உணவுகளும் பானங்களும் தவிர்க்கவேண்டும். தவறாது உடற்பயிற்சி செய்வதும் சிறுசிறு உடல் செயல்பாடுகள் செய்வதன் மூலம் ரத்தசர்க்கரையை பெரியளவு குறைக்க முடிகிறது. சிலருக்கு மருந்து மாத்திரைகளும் இன்சுலின் ஊசியும் அவசியப்படுகிறது.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் மூலம் சுகப்பிரசவம் அடைந்து தாயும்சேயும் நலமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது. முதல் கர்ப்பத்தின்போது நீரிழிவு ஏற்பட்ட பெண்கள் பிற்காலத்தில் வரக்கூடிய கர்ப்பங்களை சரியாக திட்டமிடவேண்டும். சரியான உடல்எடை சரியான உணவுமுறை நீரிழிவு வராமல் தடுக்கும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகாசனங்கள் மூலமாக உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கமுடியும். தினசரி ரத்தசர்க்கரையை பரிசோதிப்பதன் மூலம் முன்கூட்டியே வரக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி மேற்கொள்வது, மருந்து மாத்திரை, இன்சுலின் எடுத்துக் கொள்வது இன்றியமையாத ஒன்று. சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ரத்தசர்க்கரையை உன்னிப்பாக கண்காணித்து முனைப்புடன் இருப்பது மிகமுக்கியம். நாளை உங்கள் நல்வாழ்வு உங்களுக்கு சாதகமாக அமையும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்