Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பித்தப்பை கற்களும் அதற்கான தீர்வுகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து செரிமானம் அடைய பித்த நீர் மிகவும் அவசியம். பித்த நீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 600 மி.லி. வரை சுரக்கிறது. இது பித்த நாளங்கள் வழியாக சிறு குடலைச் சென்றடையும். இதில் 40 முதல் 50 மி.லி. வரை பித்தப்பையில் சேமிக்கப்பட்டு கொழுப்புச்சத்து செரிமானம் அடைய உதவி செய்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டாலோ, சிக்கல் ஏற்பட்டாலோ பித்தப்பை கற்கள் உருவாகின்றன என்கிறார் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் லேப்ரோஸ்கோபி அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

இந்திய மக்கள் தொகையில் சுமார் 8-10 சதவீதம் பேருக்கு பித்தப்பையில் கற்கள் உள்ளன. இதில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அதற்கான அறிகுறிகள் தெரியும். பித்தப்பை கற்கள் ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமாக, 1:2 என்ற வகையில் உள்ளன. பொதுவாக 40 வயதுக்கு மேல் அதிகமாக காணப்படும்.

காரணங்கள்

பெண்களில் அடிக்கடி கருத்தடை மாத்திரை உபயோகிப்பவர்கள், நிறைய குழந்தை பெற்றவர்கள், குழந்தைப்பேறுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுப்பவர்கள், கர்ப்பக் காலத்தில் ஹார்மோன்கள்(ஈஸ்ட்ரோஜன்) அதிகமாவதாலும், பரம்பரையாகவும் மேலும் பித்தப்பை சரிவர சுருங்கி விரியாததாலும் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

உடல் பருமனாக இருப்பவர்கள், மிகக்குறுகிய காலத்தில் அதிக அளவு எடை குறைத்தவர்கள், அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவை (இறைச்சி, எண்ணெய்) உண்பவர்களுக்கு பித்தப்பையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி கொலஸ்ட்ரால் கற்கள் உண்டாகிறது.

அறிகுறிகள்

குமட்டல், வாந்தி, வாயுத்தொல்லை, செரிமான குறைபாடு, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும். இதன் காரணமாக பித்தப்பை அழற்சி, கணைய அழற்சி, மஞ்சள் காமாலை, பித்தநாள அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பித்தப்பை கற்களுக்கு சிறந்த சிகிச்சைமுறை என்ன?

அறுவைசிகிச்சையே சிறந்தது. இதனை லேப்ராஸ்கோபி முறையில் சிறு துளைகள் மூலமாக (5mm, 10mm) ரத்த இழப்பு இருக்காது. வலி இருக்காது. தழும்பு மிகச்சிறியது மருத்துவமனையில் ஓரிரண்டு நாட்கள் இருந்தால் மட்டும் போதும்.பித்தப்பையை அகற்றிய பின்பும் நாம் சாதாரணமாக எல்லா வகை உணவையும் உண்ண முடியுமா?

நாம் சாதாரணமாக எல்லா வகை உணவையும் (குறிப்பாக கொழுப்பு) உண்ண முடியும். ஏனெனில், கல்லீரலில் சுரக்கும் பித்தநீர் நேரடியாக குடலில் கலந்து செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பையை அகற்றினால், அழற்சியினால் ஏற்பட்ட வலி உடனடியாக போய்விடும். மேலும், செரிமானக் குறைபாடு, குமட்டல் மற்றும் உப்புசம் போன்றவை சில வாரங்களில் சரியாகும்.

பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கமுடியுமா?

வராமல் தடுக்கமுடியாது. ஆனால், கீழ்க்கண்ட உணவு வகையை எடுத்துக் கொண்டால் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.அதிக நார்ச்சத்து உள்ள உணவு (காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள்)துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சர்க்கரை அதிகளவு உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். Lecithin அதிகம் உள்ள உணவு (பால், முட்டை, மீன், சோயாபீன்ஸ், பட்டாணி, புரோக்கோலி,) நல்லது. உடல் பருமனை தவிர்க்க வேண்டும். தினமும் நடை மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

பித்தக் கற்களை மருந்தால் குணப்படுத்த முடியாதா?

பித்தப்பை கற்களை கரைக்க ursodiol மற்றும் chenodiol போன்ற பித்த அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. கற்களை கரைக்க இவற்றை அறுவைசிகிச்சைக்கு தகுதி இல்லாதவர்களுக்கும் (இருதய மற்றும் நுரையீரல் நோய்) மற்றும் நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பித்தப்பை கற்களால் புற்றுநோய் வருமா?

கற்கள் சுமார் 3 செ.மீ.க்கு மேல் இருந்தால் ஒரு சிலருக்கு (0.1%) பித்தப்பையில் புற்றுநோய் வரலாம்.

யார் யாருக்கெல்லாம் பித்தப்பையில் கற்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும்

*உடல் பருமனாக உள்ளவர்கள்

*இளம் வயதிலேயே (40 வயதுக்குள்) பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள்

*ரத்தக் கோளாறுகளால் (sickle cell Disease, Thalasemia) ஏற்படும் கற்கள் உள்ளவர்கள்.

*நீண்ட நாட்களாக சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு தேவைப்பட்டால் அகற்ற வேண்டும்.

*மேலும் procelin gallbladder (பித்தப்பையில் கால்சியம் படிதல்), cholesterolosis (பித்தப்பையில் கொல்ஸ்டிரால் அதிக அளவு படிதல்) உள்ளவர்கள் மற்றும் பித்தப்பையில் கட்டி polyp, 2cm) உள்ளவர்களுக்கு பித்தப்பையை அகற்றுவது மிகமிக முக்கியம் ஆகும்.

தொகுப்பு:இரைப்பை குடல், கல்லீரல் நிபுணர் ஆர்.கண்ணன்