Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இதயம் முதல் மூளை வரை...இயக்கத்தின் மூலம் ஆரோக்கியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலக பிசியோதெரபி நாள் - 2026 சிறப்புக் கட்டுரை செப்டம்பர் 8

“உடற்பயிற்சி செய்ய நேரமில்லை…”“இப்போது உடல்நிலை நன்றாகத்தானே இருக்கிறது… எனக்கு ஏன் உடற்பயிற்சி?” “வயதாகிவிட்டது… இனி என்ன உடற்பயிற்சி?”

இன்றைய அவசர வாழ்க்கை முறையில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. ஆனால் நம் உடலுக்கு இயக்கம் என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகும்.

இதயம் சீராகத் துடிக்கவும், ரத்த ஓட்டம் நன்றாக இருக்கவும், தசைகள் வலிமையாக இருக்கவும், மூட்டுகள் நன்றாக இயங்கவும், உடல் சமநிலையும் நடைத்திறனும் பாதுகாக்கப்படவும் உடல் இயக்கம் அவசியம்.குறிப்பாக இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுப்பதிலும், நோய் ஏற்பட்ட பிறகு அதன் பாதிப்புகளைச் சமாளிப்பதிலும், இழந்த உடல் செயல்பாடுகளை மீட்டெடுப்பதிலும் பிசியோதெரபி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைத்தான் 2026-ம் ஆண்டுக்கான உலக பிசியோதெரபி நாள் உலகம் முழுவதும் வலியுறுத்துகிறது.

இதயம் சொல்வதைக் கேட்போம்! உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக உடல் எடை, புகைபிடித்தல், உடல் இயக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் பழக்கம் போன்றவை இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்களுக்கான ஆபத்துக் காரணிகளாக இருக்கலாம்.இவற்றில் பலவற்றை வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதன் மூலம் கட்டுப்

படுத்த முடியும்.“நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நோய் வருவதற்கு முன்பே தடுப்பதே சிறந்தது.”

தொடர்ச்சியான உடல் இயக்கம், தனிநபரின் உடல்நிலைக்கேற்ற உடற்பயிற்சி, உடல் எடைக் கட்டுப்பாடு, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால நோய்களை முறையாகக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் பிசியோதெரபி நிபுணரின் பங்கு முக்கியமானது.

“குறைவாக உட்காருங்கள்… அதிகமாக இயங்குங்கள்!”

நவீன வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று நீண்ட நேரம் அசைவின்றி உட்கார்ந்திருப்பது.அலுவலகப் பணி, கணினிப் பயன்பாடு, கைபேசி, தொலைக்காட்சி, நீண்ட நேரப் பயணம் என நம்முடைய நாளின் பெரும்பகுதி உட்கார்ந்த நிலையிலேயே கழிகிறது.ஒரு நாளில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, மீதமுள்ள நேரம் முழுவதும் அசைவின்றி இருப்பதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாகாது.

எனவே நாளின் பல்வேறு நேரங்களில் எழுந்து சிறிது நேரம் நடப்பது, முடிந்த இடங்களில் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, நீண்ட நேரம் தொடர்ந்து உட்காராமல் இடையிடையே எழுந்து இயங்குவது, வீட்டுப் பணிகளில் ஈடுபடுவது போன்ற அன்றாட உடல் இயக்கங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உடலை இயக்குவது ஒரு தனிப்பட்ட உடற்பயிற்சி நேரம் மட்டுமல்ல; அது நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை.

பக்கவாதம் - ஒரு நொடி வாழ்க்கையை மாற்றிவிடும்!

பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ அல்லது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதாலோ உருவாகும் அவசர மருத்துவநிலை.முகத்தின் ஒரு பகுதி திடீரென சாய்வது, ஒரு கை அல்லது காலில் திடீர் பலவீனம் அல்லது உணர்வுக் குறைவு, பேச்சில் தடுமாற்றம், திடீர் பார்வைக் குறைபாடு, நடையில் தடுமாற்றம் அல்லது சமநிலை இழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றினால் அவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.

“நேரம் மிகவும் முக்கியம்!”பக்கவாதத்தின் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். ஆனால் அவசர மருத்துவ சிகிச்சையுடன் பயணம் முடிந்துவிடுவதில்லை. அதற்குப் பிறகுதான் பலருக்கு நீண்ட மறுவாழ்வுப் பயணம் தொடங்குகிறது.

பக்கவாதத்திற்குப் பிறகு பிசியோதெரபி ஏன்?

பக்கவாதத்திற்குப் பிறகு சிலருக்கு கை-கால் பலவீனம், தசைகளின் இயக்கத்தில் மாற்றம், சமநிலைக் குறைபாடு, உடல் இயக்க ஒருங்கிணைப்பில் சிரமம், நடைத் தடுமாற்றம், உடல் சகிப்புத்தன்மைக் குறைவு மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.இங்கு பிசியோதெரபியின் நோக்கம் வெறுமனே “கையை அசைக்கச் செய்வது” அல்லது “காலை நடக்கச் செய்வது” மட்டுமல்ல.

நோயாளியின் உடல் நிலை, இயக்கத் திறன், வலிமை, சமநிலை, நடை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, அவருக்கேற்ற தனிப்பட்ட மறுவாழ்வு சிகிச்சைத் திட்டம்

உருவாக்கப்படுகிறது.

*தசை வலிமைப் பயிற்சி

*சமநிலைப் பயிற்சி

*நடைப் பயிற்சி

*உடல் இயக்க ஒருங்கிணைப்புப் பயிற்சி

*உடல் நகர்வுப் பயிற்சி

*செயல்பாட்டுப் பயிற்சி

*உடல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் பயிற்சி

*உடல் நிலையைச் சீராக்கும் பயிற்சி

*படுத்த நிலையிலிருந்து உட்காருதல், உட்கார்ந்த நிலையிலிருந்து நிற்றல் போன்ற இடமாற்றப் பயிற்சிகள்

*வீட்டிலேயே தொடர்ந்து செய்யக்கூடிய பயிற்சித் திட்டம்

இவை அனைத்தும் நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.“நடப்பது மட்டும் வெற்றி அல்ல!” பக்கவாதத்திற்குப் பிறகு ஒருவர் எவ்வளவு தூரம் நடந்தார் என்பதைக் கொண்டு மட்டும் மறுவாழ்வின் வெற்றியை மதிப்பிட முடியாது.

படுக்கையிலிருந்து பாதுகாப்பாக எழுகிறாரா?

தனியாக உட்கார முடிகிறதா?

தானாக நிற்க முடிகிறதா?

கழிப்பறைக்குப் பாதுகாப்பாகச் செல்ல முடிகிறதா?

தனது உடைகளைத் தானே அணிய முடிகிறதா?

தனது குடும்பத்துடன் மீண்டும் இயல்பாகப் பழக முடிகிறதா?

சமூக வாழ்க்கையில் மீண்டும் பங்கேற்க முடிகிறதா?

என்பதில்தான் உண்மையான செயல்திறன் மீட்பு இருக்கிறது.

“சுயசார்புடன் வாழச் செய்வதே உண்மையான இலக்கு!”

குடும்பமும் மறுவாழ்வுக் குழுவின் ஒரு முக்கிய அங்கமே!

பக்கவாதத்திற்குப் பிறகு நோயாளியின் மறுவாழ்வில் பிசியோதெரபி நிபுணர் மட்டுமல்லாமல், மருத்துவர், தொழில்சார் சிகிச்சை நிபுணர், பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை நிபுணர், செவிலியர், உணவியல் நிபுணர், உளவியல் நிபுணர் மற்றும் குடும்பப் பராமரிப்பாளர் என பலரும் இணைந்து செயல்பட வேண்டிய சூழல்கள் உள்ளன.குடும்பத்தினருக்கு நோயாளியைப் பாதுகாப்பாக நகர்த்துவது, நடக்க உதவுவது, கீழே விழுவதைத் தடுப்பது, சரியான உடல் நிலையைப் பராமரிப்பது, வீட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது, வீட்டுச் சூழலை பாதுகாப்பாக மாற்றுவது போன்ற விஷயங்களில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.

நோயாளியின் மறுவாழ்வு பயணத்தில் குடும்பம் ஒரு பார்வையாளராக அல்ல; ஒரு பங்காளியாக இருக்க வேண்டும். பக்கவாதம் முடக்கிய கை… மகளின் திருமணத்திற்காக மீண்டும் உயர்ந்தது!

எங்கள் மறுவாழ்வுச் சேவைப் பணியில் சந்தித்த ஒரு பயனாளியை, அவரது தனியுரிமையைப் பாதுகாக்க, “முருகன்” என்ற பெயரில் குறிப்பிடலாம். தண்ணீர் கேன் போடும் பணியைச் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தவர். அவருடைய பணியில் பயன்படுத்தப்படும் ஒரு தண்ணீர் கேன் சுமார் 20 லிட்டர் கொள்ளளவு கொண்டது; அதாவது ஏறத்தாழ 20 கிலோ எடை.

அத்தகைய தண்ணீர் கேன்களைத் தூக்கிச் சென்று தனது குடும்பத்திற்காக உழைத்து வந்த முருகனை திடீரென பக்கவாதம் தாக்கியது. அவருடைய இடது கை மற்றும் இடது கால்

பாதிக்கப்பட்டன.நேற்று வரை தனது குடும்பத்திற்காக ஓடிய மனிதர்… திடீரென தனது உடலின் ஒரு பக்கத்தையே நம்ப முடியாத நிலைக்கு வந்தார்.

“இனி என்னால் வேலை செய்ய முடியுமா?” என்ற கவலையும் அவரைச் சூழ்ந்தது.

ஆனால் அவர் தளரவில்லை. உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றார். அதனைத் தொடர்ந்து முறையான பிசியோதெரபி மறுவாழ்வு சிகிச்சையையும் மேற்கொண்டார்.

தசை வலிமைப் பயிற்சி… சமநிலைப் பயிற்சி… நடைப் பயிற்சி… உடல் இயக்க ஒருங்கிணைப்புப் பயிற்சி… அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தேவையான பயிற்சிகள்… ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றம். ஒவ்வொரு முன்னேற்றமும் ஒரு புதிய நம்பிக்கை.

காலம் செல்லச் செல்ல, ஒரு காலத்தில் தண்ணீர் கேன் தூக்கிய அந்தக் கைகள் மீண்டும் தங்கள் பணியைச் செய்யத் தொடங்கின.இன்று முருகன் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பியுள்ளார்.

ஆனால் அவரது வெற்றியின் அழகான பகுதி அதைவிடப் பெரியது - அவரது மகளின் திருமணம்!ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை எப்படி பார்த்துப் பார்த்து, சீரும் சிறப்புமாக நடத்துவாரோ, அதேபோல் தனது மகளின் திருமணப் பொறுப்புகளை ஏற்று மகிழ்ச்சியுடன் செயல்படும் அளவுக்கு முருகன் தனது உடல் செயல்திறனை மீட்டெடுத்துள்ளார்.

பிசியோதெரபி அவருக்கு நடையை மட்டும் திருப்பிக் கொடுக்கவில்லை; ஒரு தந்தையாக தனது பொறுப்பை நிறைவேற்றும் நம்பிக்கையையும் திருப்பிக் கொடுத்தது.

தொகுப்பு: புண்ணியகோட்டி. எஸ் பிசியோதெரபி மருத்துவர்