நன்றி குங்குமம் டாக்டர்
தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு (Preventive Healthcare) என்பது பெரும்பாலும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் நோயைக் கண்டறிவதற்கான சோதனைகளோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்; ஆனால் தடுப்பு மருத்துவம் என்பது கிடைக்கும் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து கொள்வது அல்ல. எந்தப் பரிசோதனை பொருத்தமானது, அது எப்போது தேவைப்படுகிறது மற்றும் அதன் முடிவுகள் எதை உணர்த்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வதில்தான் அதன் உண்மையான மதிப்பு அடங்கியுள்ளது.
அளவுக்கு அதிகமாகப் பரிசோதனை செய்வதும், தேவையான அளவு கூட பரிசோதனை செய்யாமல் இருப்பதும் இரண்டுமே நமக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியவை; எனவே இரண்டிற்கும் இடையே மிகச் சரியான சமநிலையைக் கண்டறிவதே தடுப்பு சுகாதாரப் பராமரிப்பின் மிக முக்கியமான அம்சமாகும் என்கிறார் நிர்வாக இயக்குநர் மற்றும் கதிரியக்க நிபுணரான மருத்துவர் அருண் குமார் கோவிந்தராஜன்.
தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு என்பது அனைத்தையும் பரிசோதிப்பது அல்ல. முழுமையான உடல் பரிசோதனை (Comprehensive Health Check-up) என்றால் அதில் முடிந்தவரை அதிகப்படியான சோதனைகள் இருக்க வேண்டும் என்ற பொதுவான தவறான புரிதல் மக்களிடையே நிலவுகிறது. உண்மையில், ஒரு தடுப்புப் பரிசோதனை என்பது ஒரு நபரின் வயது, அவர்களது குடும்பத்தின் மருத்துவ வரலாறு, அன்றாட வாழ்க்கைமுறை, தற்போதைய உடல்நிலை மற்றும் பிற அபாயக்காரணிகள் (Risk Factors) ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.
நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பே ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளைக் கண்டறிவதே பரிசோதனையின் நோக்கமாகும். இருப்பினும், ஒவ்வொரு சோதனையும் எல்லோருக்கும் பொருந்தாது. ஒரு குறிப்பிட்ட ஆபத்து காரணி உள்ள ஒருவருக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு சோதனை, அந்த ஆபத்து இல்லாத ஒருவருக்கு எவ்வித பலனையும் தராது. எனவே, தடுப்பு மருத்துவம் என்பது அதிகப்படியான சோதனைகளைச் செய்வதில் அல்லாமல், தேவையான மற்றும் பொருத்தமான சோதனைகளைச் செய்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.
இரு பெரும் அபாயங்கள்
பரிசோதனைகளை அதிகளவில் செய்வதற்கும், போதிய சோதனைகளைச் செய்யாமல் இருப்பதற்கும் இடையே இருக்கும் சரியான நடுநிலையைக் கண்டறிவதில்தான் உண்மையான சவாலே உள்ளது. அளவுக்கு அதிகமாகப் பரிசோதனை செய்வது, சில நேரங்களில் ஒரு நபரின் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிக்காத சிறிய அல்லது எதேச்சையான முரண்பாடுகளைக் (Incidental abnormalities) கண்டறிய வழிவகுக்கும். இத்தகைய தேவையற்ற கண்டுபிடிப்புகள் தேவையற்ற பயம், மன உளைச்சல், மீண்டும் மீண்டும் செய்யப்படும் சோதனைகள் மற்றும் சில நேரங்களில் அவசியமற்ற சிகிச்சைகளுக்கும் வழிவகுத்துவிடும்.
மறுபுறம், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது, சில நோய்கள் வெளியே தெரியாமல் உடலுக்குள் தீவிரமடைய வழிவகுத்துவிடும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் பல ஆண்டுகளாக நம் உடலில் எந்தவித அறிகுறிகளையும் காட்டாமல் அமைதியாக இருக்கக்கூடும்; அதேபோல் சில வகையான புற்றுநோய்களையும் சரியான நேரத்தில் செய்யப்படும் பொருத்தமான சோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். எனவே, அறிகுறிகள் தோன்றும் வரை மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் காத்திருப்பது என்பது சிகிச்சைக்கு உகந்த முக்கியமான காலகட்டத்தை இழப்பதற்கு சமமாகும். ஆகவே, தேவையற்ற சோதனைகள் இல்லாமல் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதே தடுப்பு மருத்துவத்தின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
ஒரே மாதிரியான பரிசோதனைத் திட்டம் அனைவருக்கும் ஏன் பொருந்தாது?
தடுப்பு மருத்துவப் பரிசோதனை (Preventive Screening) என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடிய, பொதுவான, ஒரே மாதிரியான நடைமுறையாகக் கருதப்படக் கூடாது. ஒரே வயதுடைய இரண்டு நபர்களுக்கே கூட குடும்பப் பின்னணி, வாழ்க்கைமுறை, பணிச்சூழல் சார்ந்த பாதிப்புகள் (Occupational exposure), முந்தைய மருத்துவ வரலாறு அல்லது பிற ஆபத்துக் காரணிகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக முற்றிலும் மாறுபட்ட மருத்துவத் தேவைகள் இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நோயின் பாதிப்பு உள்ள தீவிர குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்குத் தேவைப்படும் பரிசோதனை முறையானது, அத்தகைய ஆபத்து இல்லாத ஒருவருக்குத் தேவைப்படுவதை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதேபோல், குறிப்பிட்ட வாழ்க்கை முறை அல்லது பணிச்சூழல் சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகும் நபர்களுக்குத் தனித்துவமான மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படலாம்.
இதனால்தான், அனைவருக்கும் ஒரே மாதிரியான வருடாந்திரப் பரிசோதனைத் தொகுப்புகளை (Annual Test Packages) வழங்குவதை விடுத்து, ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆபத்து காரணிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட பரிசோதனை (Personalised Screening) முறையை சார்ந்து தடுப்பு மருத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
பரிசோதனையின் முடிவுகளைப் புரிந்து கொள்வதும் முக்கியம்
நோயறியும் பரிசோதனையைச் செய்து கொள்வது என்பது ஒட்டுமொத்த செயல்முறையின் ஒருபகுதி மட்டுமே. அந்த முடிவுகளைச் சரியான மருத்துவச் சூழலில் (Clinical Context) புரிந்து கொள்வதும் அதே அளவு முக்கியமானதாகும். ஒரு உடல் பாதிப்பின் அளவைக் குறிப்பிடும் ஆய்வகத்தின் சாதாரண வரம்பிற்கு (Laboratory reference range) அதிகமான அளவில் ஒரு மதிப்பீடு இருப்பதோ அல்லது ஸ்கேன் பரிசோதனையில் எதிர்பாராத ஏதேனும் ஒரு தகவல் தென்படுவதோ தானாகவே ஒரு தீவிர நோயைக் குறிப்பதாக அர்த்தமாகிவிடாது.
மருத்துவ பரிசோதனை முடிவுகளை ஒரு நபரின் நோய் அறிகுறிகள், அவருடைய மருத்துவ வரலாறு மற்றும் ஆபத்துக் காரணிகளோடு இணைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும். எந்தவிதமான கூடுதல் விவரங்கள் இல்லாமல் அந்த பரிசோதனையின் முடிவை மட்டுமே பார்க்கும் போது, சில சமயங்களில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கலாம் அல்லது அவசியமில்லாத கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு வழிவகுக்கலாம். அதேபோல், பரிசோதனை முடிவுகள் சாதாரணமாக வந்துவிட்டது என்பதாலேயே உடலில் எல்லாவிதமான உடல்நல அபாயங்களும் முற்றிலுமாக நீங்கிவிட்டன என்று அர்த்தமாகிவிடாது.
அதனால் இந்த முறையான அணுகுமுறையானது, நோயாளிகளுக்குத் தவறான பாதுகாப்பற்ற நிம்மதியையோ அல்லது தேவையற்ற பீதியையோ தவிர்ப்பதோடு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிசோதனையையும் அதிக நோக்கமுள்ளதாகவும் அவர்களின் தேவைகளுக்குப் பொருத்தமானதாகவும் மாற்றுகிறது.
இங்குதான் மருத்துவ நிபுணத்துவத்தின் பங்கு இன்றியமையாததாகிறது. ஒரு பரிசோதனை முடிவு எதைக் குறிக்கிறது. கூடுதல் மருத்துவ மதிப்பீடுகள் அவசியமா என்பதையும், அதை எவ்வாறு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க மருத்துவர்களும் கதிரியக்க நிபுணர்களும் (Radiologists) உதவுகிறார்கள்.
இறுதியாக, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பின் தரம் என்பது எத்தனை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை வைத்து அளவிடப்படக் கூடாது. மாறாக, சரியான நபருக்கு, சரியான நேரத்தில், சரியான சோதனை செய்யப்பட்டு, அது முறையாகப் புரிந்துகொள்ளப்பட்டதா என்பதையே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதிக சோதனைகளைச் செய்வதல்ல தடுப்பு மருத்துவத்தின் இலக்கு. நோயறியும் பரிசோதனைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சரியான நேரத்தில், தெளிவான புரிதலுடன், அர்த்தமுள்ள மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதற்கு, அறிவார்ந்த முறையில் சோதனைகளை மேற்கொள்வதே சரியான அணுகுமுறையாகும் என்பதில் நினைவில் கொள்ளுங்கள். தடுப்பு மருத்துவப் பராமரிப்பின் மூலம் வரும் முன் காப்போம்.
தொகுப்பு: கதிரியக்க நிபுணர் அருண்குமார் கோவிந்தராஜன்


