நன்றி குங்குமம் தோழி
நலம் யோகம்
உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி...
நமது உடல் எலும்புகள், தசைகள், சதைகள், உறுப்புகளால் மட்டும் உருவானது மட்டுமல்ல... நமது உடல் பஞ்சபூதங்களின் கூட்டால் உருவானது. பஞ்சபூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படைத் தத்துவங்களை அடக்கியது.இந்த ஐந்து பூதங்களும் நம் உடலில் தங்களுக்குரிய பங்குடன் செயல்படுகின்றன. இவற்றின் சமநிலையும், ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள விகிதாச்சாரமும் நம் உடல் மற்றும் மனத்தின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஐந்து பூதங்களின் பிரதிநிதித்துவத்தை நம் கைகளில் உள்ள ஐந்து விரல்களிலும் யோக மரபு காண்கிறது. மோதிர விரல் - நிலம் (பிருத்வி), சுண்டு விரல் - நீர் (ஜலம்), கட்டை விரல் - நெருப்பு (அக்னி), ஆள்காட்டி விரல் - காற்று (வாயு) , நடு விரல் - ஆகாயம் (ஆகாசம்). முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஐந்து பூதங்களும் ஒவ்வொருவருடைய உடலிலும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவற்றின் சேர்க்கையும் விகிதமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஐந்து பூதங்களும் அனைவரிடமும் சம அளவில் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, நமக்குள் இயல்பாக இருக்கும் தன்மையை புரிந்து கொண்டு, அதன் சமநிலையைப் பேணுவதே இதில் முக்கியம்.
ஆயுர்வேதத்தின் பார்வையில், ஐந்து பூதங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகளே வாதம், பித்தம், கபம் போன்ற உடல் இயல்புகளை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு வாதம் என்பது காற்று மற்றும் ஆகாயத் தத்துவங்களின் ஆதிக்கத்துடனும், பித்தம் நெருப்பு மற்றும் நீர் தத்துவங்களுடனும், கபம் நீர் மற்றும் நிலத் தத்துவங்களுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. நம் விரல்களை குறிப்பிட்ட முறையில் இணைத்து உருவாக்கப்படும் முத்திரைகள், பஞ்சபூதத் தத்துவங்களுடன் பணியாற்றுவதற்கான ஒரு நுட்பமான வழியாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு பஞ்சபூதத்தையும், அதனுடன் தொடர்புடைய முத்திரைகளையும் விளக்கமாகப் பார்ப்போம்.
நிலத் தத்துவம் (உடலின் திடத்தன்மை)
நிலம் அல்லது பிருத்வி தத்துவம் என்றால் திடத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் கட்டமைப்பைக் குறிக்கிறது. நம் உடலில் திடப்பொருளாகக் காணப்படும் தோல், எலும்பு, தசை, முடி, நகம் மற்றும் உடலின் பல்வேறு திசுக்கள் நிலத் தத்துவத்துடன் தொடர்புடையவை. உடலில் நிலத் தத்துவத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது, உடல் கனமாகவும், பருமனாகவும், எடை அதிகமாகவும் இருக்கக்கூடும். அதேபோல், நிலத் தத்துவத்தின் தன்மை குறைவாக இருக்கும் போது உடல் மெலிந்ததாகவும், எடை குறைவாகவும் காணப்படலாம். ஒருவருடைய உடல் எடை என்பது பஞ்ச பூதங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நம் கையில் உள்ள மோதிர விரல் நிலத் தத்துவத்தை
குறிப்பிடுகிறது.
பிருத்வி முத்திரை
இந்த முத்திரை நிலத் தத்துவத்தை சமநிலைப் படுத்துவதற்கான ஒரு முத்திரையாகக் கருதப்படுகிறது. கட்டை விரலின் நுனியையும், மோதிர விரலின் நுனியையும் ஒன்றோடு ஒன்று மெதுவாகத் தொடச் செய்வதே பிருத்வி முத்திரை. மற்ற விரல்கள் இதில் இயல்பாக நீட்டப்பட்டிருக்கும். நெருப்புத் தத்துவம் அல்லது அக்னி தத்துவம், நம் உடலின் உடல் வெப்பம், செரிமானம் மற்றும் உடலின் மாற்றுச் செயல்பாடுகள் உதாரணத்திற்கு, உணவை செரிமானத்திற்கு உள்ளாக்கி ஆற்றலாகவும் கழிவுப் பொருளாகவும் மாற்றுவதுபோன்றவற்றின் மூலம் வெளிப்படுகிறது. இந்தத் தத்துவம் அதிகரிக்கும் போதும் அல்லது குறையும் போதும், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.
சூரிய முத்திரை
நிலத் தத்துவத்தை குறைக்க பயன்படுத்தப்படும் முத்திரையாக சூரிய முத்திரை குறிப்பிடப்படுகிறது. இதில் மோதிர விரலை உள்ளங்கையை நோக்கி மடக்கி, அதன்மேல் கட்டை விரலை வைத்து, மோதிர விரலின் நடுப்பகுதியில் மெதுவாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த முத்திரை அக்னித் தத்துவத்தைத் தூண்டி, நிலத் தத்துவத்தைக் குறைக்கும் முத்திரையாகும். உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளுடன் இது தொடர்புபடுத்தப்பட்டு, “Weight Loss Mudra” என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், உடல் எடை அல்லது உடல்நிலையை மாற்ற எந்தவொரு பஞ்சபூதத்தையும் தானாகக் குறைக்கவோ அதிகரிக்கவோ முயற்சி செய்தல் கூடாது. குறிப்பாக நீண்டகால உடல்நலப் பிரச்னைகள், அதிக அல்லது குறைந்த உடல் எடை போன்ற நிலைகள் இருந்தால், உங்கள் சித்த மருத்துவர் அல்லது யோகா தெரபிஸ்ட் ஆலோசனையுடன் முத்திரைகளை பயிற்சி செய்வதே பாதுகாப்பானது.
நீர்த் தத்துவம் (உடலின் திரவத்தன்மை)
நீர் என்பது திரவத்தன்மையைக் குறிக்கிறது. நமது உடலில் திரவ வடிவில் காணப்படும் பல்வேறு பொருட்கள் நீர்த்தத்துவத்துடன் தொடர்புடையது. நம் உடலில் காணப்படும் ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், கண்ணீர், நிணநீர் (lymph), Cerebrospinal Fluid (CSF) எனப்படும் மூளை-முதுகுத் தண்டுவட திரவம் போன்ற உடல் திரவங்களுடன் நீர்த் தத்துவம் தொடர்புடையது. அதேபோல், ஹார்மோன்கள் மற்றும் என்சைம்கள் போன்ற உடலில் செயல்படும் பல்வேறு திரவங்களும் இந்தத் தத்துவத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றன. நம் உடலில் திரவத்தன்மை, ஈரப்பதம் மற்றும் ஓட்டம் ஆகியவற்றை பராமரிப்பதில் நீர்த் தத்துவம் முக்கியமானதாய் கருதப்படுகிறது. நமது கையில் உள்ள சுண்டு விரல் நீர் தத்துவத்தை குறிக்கும்.
வருண முத்திரை
கட்டை விரலின் நுனியையும், சுண்டு விரலின் நுனியையும் ஒன்றோடு ஒன்று மெதுவாக இணைத்து வைத்திருப்பது வருண முத்திரை. மற்ற விரல்கள் இயல்பாக நீட்டப்பட்டிருக்கும். இந்த முத்திரை உடலில் உள்ள நீர்த் தத்துவத்தை சமநிலைப்படுத்தும். உடலின் திரவத்தன்மை, ரத்தம் மற்றும் உடல் திரவங்களின் சீரான ஓட்டம், தோலின் ஈரப்பதம் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை நீர்த் தத்துவம் பராமரிக்கிறது.
வாயுத் தத்துவம் - காற்று
காற்று என்பது வாயு நிலை (Gas state) கொண்டது. நம் உடலில் இந்தத் தத்துவம் முக்கியமாக சுவாசம், நரம்பு செயல்பாடு(Electrical impulse), உடலின் இயக்கம் மற்றும் எண்ணங்களின் வேகம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. நம் உடலில் சுவாசம் சீராக நடைபெறவும், உடலின் பல்வேறு இயக்கங்கள் நடைபெறுவதற்கும் வாயுத் தத்துவம்
முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வாயுத் தத்துவத்தின் சமநிலையின்மை மனதில் அமைதியின்மை, அதிகமான எண்ண ஓட்டம், பதற்றம் போன்ற உணர்வுகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. நம் கையில் உள்ள ஆள்காட்டி விரல் வாயுத் தத்துவத்தின் பிரதிநிதி.சின் முத்திரை - வாயுத் தத்துவத்தை சமநிலைப்படுத்த சுவாசம் சீராக இருந்தால் மனமும் சீராகும். வாயுத் தத்துவம் சமநிலையில் இருந்தால் உடலின் இயக்கமும் மனத்தின் ஓட்டமும் சீராகும். ஆள்காட்டி விரலின் நுனியையும், கட்டை விரலின் நுனியையும் ஒன்றோடு ஒன்று இணைத்து வைத்திருப்பது சின் முத்திரை. ‘சின்’ என்ற சொல் ‘சித்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்தது. எனவே, இந்த முத்திரை மனதை ஒருமுகப்படுத்தவும், எண்ண ஓட்டத்தை அமைதிப்படுத்தவும், தியானத்திற்கு உதவவும் பயன்படுத்தப்படுகிறது.
வாயு முத்திரை
வாயுவை சமநிலைப்படுத்த ஆள்காட்டி விரலை மடக்கி, அதன் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொடுமாறு வைத்து, அதன் மேல் கட்டை விரலால் மெதுவாக அழுத்தும்போது வாயு முத்திரை உருவாகிறது. வாயுத் தத்துவம் உடலில் வலி, அசௌகரியம்,வாயுத் தொல்லை போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. எனவே வாயு முத்திரை வாயுத் தொல்லையை குறைக்கவும், சிலவகை வலி அல்லது அசௌகரியத்திற்கு நிவாரணம் அளிக்கவும் உதவும். என்றாலும், தொடர்ந்து இருக்கும் வலி அல்லது உடல்நலப் பிரச்னைகளுக்கு முத்திரையை மட்டும் சிகிச்சையாய் கருதாமல், மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்.
ஆகாயத் தத்துவம் (வெளி மற்றும் விரிவு)
ஆகாயம் என்பது வெளி, இடம், விரிவு ஆகியவற்றை குறிக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு அணுவும் இயங்குவதற்குத் தேவையான இடத்தை வழங்குவது ஆகாயத் தத்துவத்தின் தன்மையாக பார்க்கப்படுகிறது. ஆகாயம் என்பது வெறும் வெளிப்புற விண்வெளி மட்டுமல்ல. நம் உடலுக்குள்ளும் ஒரு நுண்ணிய வெளி இருக்கிறது. இந்த வெளி உயிர்ச் சக்தியின் இயக்கத்திற்கும், மனத்தின் விரிவுக்கும், நம்முடைய உள்ளுணர்வுக்கும் தொடர்புடையது. பஞ்சபூதங்களில் ஆகாயத் தத்துவத்தை நடுவிரல் குறிக்கிறது.
ஆகாச முத்திரை
நடுவிரலின் நுனியையும், கட்டை விரலின் நுனியையும் ஒன்றோடு ஒன்று மெதுவாக இணைத்து வைத்திருப்பது ஆகாச முத்திரை எனப்படும். மற்ற விரல்கள் இயல்பாக நீட்டப்பட்டிருக்கும். இம்முத்திரையின் மூலமாக, ஆகாயத் தத்துவத்தை சமநிலைப்படுத்தி, மனதின் விரிவு, அமைதி, ஒருமுகப்படுத்துதல் மற்றும் உள்ளுணர்வு வளர்ச்சி ஆகியவை மேம்படுத்தப்படுகிறது.
நிலம் நமக்கு நிலைத்தன்மையை தரும்!
நீர் நமக்கு திரவத்தன்மையைத் தரும்.நெருப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். காற்று இயக்கத்தை உருவாக்கும். ஆகாயம் இவை அனைத்தும் இயங்குவதற்கான வெளியை வழங்கும். பஞ்சபூதங்களிலிருந்து வந்த உடல்… மீண்டும் பஞ்சபூதங்களுக்கே!
ஒருநாள் இந்த உடலைவிட்டு உயிர் நீங்குகிறது. யோகத் தத்துவத்தின் பார்வையில், உயிர் நீங்கிய பிறகு உடலில் இருந்த பஞ்சபூதங்களும் படிப்படியாகத் தங்களுடைய மூலத் தன்மைக்குத் திரும்புகின்றன. ஆகாயத் தத்துவம் உயிர்ச் சக்தியின் இயக்கத்திற்கான நுண்ணிய வெளியுடன் தொடர்புடையது. உயிர் நீங்கிய பிறகு, உடலின் உயிர்ச் செயல்பாடுகள் முடிவடை கின்றன. அதன்பின், உடலில் இருக்கும் ஒவ்வொரு பூதத்தின் தன்மையும் அதன் இயற்கையான மூலப்பொருளுடன் மீண்டும் இணைகிறது.
உடலில் இருக்கும் நீர்த்தன்மை இயற்கையின் நீர்ச் சுழற்சியில் கலந்து விடுகிறது. உடலின் திடப்பொருட்கள் காலப்போக்கில் மண்ணோடு கலந்து மண்ணாகின்றன. உடலின் வெப்பம் சுற்றுச்சூழலுடன் கலந்து விடுகிறது. உடலில் இருந்த காற்றுத் தன்மையும் இயற்கையின் காற்றோட்டத்துடன் இணைகிறது. எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
இந்த உடல் நமக்கு நிரந்தரமானது அல்ல. இயற்கையிலிருந்து பெற்ற இந்த உடலை, நமக்குக் கிடைக்கும் காலத்தையும் வாய்ப்புகளையும் அர்த்தமுள்ளதாக பயன்படுத்தி வாழ்ந்த பிறகு, மீண்டும் இயற்கைக்கே ஒப்படைக்கிறோம். இதையே ஆங்கிலத்தில் மிக அழகாக “Matter is neither created nor destroyed; it is transformed from one form to another” என்ற அறிவியல் கருத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
இயற்கையிலிருந்து வந்தோம்.
இயற்கையால் உருவாக்கப்பட்டோம்.
இயற்கையோடு வாழ்கிறோம்.
ஒருநாள் மீண்டும் இயற்கையோடு கலக்கிறோம்.
இதுவே பஞ்சபூதங்கள் நமக்குச் சொல்லும் அழகான வாழ்க்கைப் பாடம்.
(நிறைவு)
தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்


