Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஃபிட்னஸுக்கு யோசனைகள்!

நன்றி குங்குமம் தோழி

தினசரி பழக்க வழக்கங்களாக குளிப்பதையும், பல் துலக்கு வதையும் செய்கிறோமோ, அப்படித்தான் இன்று ‘ஃபிட்னஸ்’ என்பது தினசரி பழக்க வழக்கமாக மாறிவிட்டது.ஆனாலும், இவ்விஷயத்தில் எதனை செய்ய வேண்டும்? எதனையெல்லாம் தவிர்க்க வேண்டும்? இதில் உள்ள மோசடிகள் என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் நம்மிடம் தெளிவான பதில்கள் இல்லாமல்தான் இருக்கிறோம். இதனை தெரியப்படுத்தி, தெளிவுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இங்கே பத்து விஷயங்களை பட்டியலாகத் தந்திருக்கிறேன்.

இதனை அறிவதற்கு முன், முதலில் ஃபிட்னஸ் என்பது உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் முறை என மூன்றும் கலந்ததே என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம்.

* டல் எடை குறைப்பு என்றதுமே நம் கண்முன் வருவது விதவிதமான ஆரோக்கியம் சார்ந்த பொருட்களும், செயலிகளும்தான். தண்ணீர் போத்தல், கை கடிகாரம், உடல் எடையை குறைக்கும் பானங்கள், பவுடர்... ஒருபக்கம் என்றால், நாம் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம், எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும், எவ்வளவு கலோரிகள் இன்று எரிந்திருக்கிறது என தெரிந்துகொள்ள பல செயலிகள் மறுபக்கம். இவையெல்லாமே வணிக மோசடிதான். சரியான உடற்பயிற்சிகள், வாழ்வியல் முறை மற்றும் உணவு முறை இருந்தாலே போதுமானது. எனவே, இவையெல்லாம் நம்மை நுகர்வோராக மாற்றவே.

* கோவிட் தொற்றுக்கு முன் பிரபலமானது ‘எட்டு வடிவ நடை.’ இப்போது அனைத்துப் பூங்காக்களிலும் கட்டாயமாக இதைக் காணமுடிகிறது. இந்த வகை நடைப்பயிற்சியில் எந்த வகையான பலனும் இல்லை. மாறாக, நாம் நம் மூட்டுகளை அதிக அழுத்தத்திற்கே ஆளாக்குகிறோம். ஒருவர் செய்தால் அலைமோதிக்கொண்டு நாமும் அதனை செய்கிறோம். எனவே, இப்படிச் செய்வதை தவிர்த்து முறையாக இயன்முறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

* உடற்பயிற்சி, நடைப் பயிற்சி என எது செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பும் பின்பும் செய்ய வேண்டிய ‘வாம் அப்’ (Warm Up) மற்றும் ‘கூல் டவுன்’ (Cool Down) என்று இரு விஷயங்கள் இருக்கிறது. பயிற்சிக்கு முன் உடலை தயார் செய்வதும், பயிற்சி முடிந்ததும் உடல் தசைகளை தளர்க்கவும் இப்படி கட்டாயம் செய்ய வேண்டும். இதனை செய்வதினால் தசை காயங்களை நம்மால் தவிர்க்க முடிகிறது.

* நுண்ணிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின், மினரல் மற்றும் புரதச் சத்திற்காக சந்தையில் வரும் பவுடர்கள், மாத்திரைகள் இவை எல்லாம் உடல் எடை குறைப்பில் தேவையற்றது. உணவு வழியாகவே போதுமான புரதச் சத்தினை எடுத்துக் கொள்ளலாம். மேலும், வைட்டமின், மினரல்களை நாம் பொது மருத்துவரை அணுகி நம் ரத்தத்தில் அவை உண்மையிலேயே குறைந்து இருக்கிறதா என்பதனை ஆராய்ந்த பின்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நாமாகவே ஆன்லைன் தளங்களில் இருந்து நுகர்வதை தவிர்ப்பது நல்லது.

* மாதத்திற்கு ஒருமுறை அதே நாளில் உடல் எடையை சரி பார்த்தாலே போதும். ஒரு சிலர் உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே பார்ப்பது, தினமும் பார்ப்பது, வாரத்திற்கு ஒருமுறை பார்ப்பது, ஒருநாள் விட்டு ஒருநாள் பார்ப்பது என இவையெல்லாம் தேவையில்லாத மனப்பதற்றத்தைதான் உருவாக்கும். உடல் எடை தினமும் ஒரு கிலோ குறைந்தோ அல்லது அதிகரித்தோ இருக்கும். நாம் சாப்பிடும் உணவு, நம் கழிவு, நம் உடலில் உள்ள நீர், நம் மாதவிடாய் நேரம் எனப் பல காரணிகள் இதற்கு காரணமாக இருக்கிறது என்பதால், நாம் மாதத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் பார்த்தாலே போதுமானது.

* தூக்கம் இன்றியமையாத ஒன்று. நாம் குறைவாகத் தூங்கினால் அடுத்த நாள் நமக்கு அதிக இனிப்புகளை உண்ண வேண்டும் என்ற ஆர்வமும், அதிக உணவுகளை திரும்பத் திரும்ப இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உண்ண வேண்டும் என்ற உந்துதலும் அதிகரிக்கிறது. மேலும், நம் மனநிலையிலும் மாற்றங்கள் (Mood Swings) இருக்கிறது என்பதால், தேவையில்லாமல் நாம் குழப்பம், பதட்டம், கோபம் என நம் மனநிலையும் பாதிக்கிறது. எனவே, குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உறக்கம் என்பது கட்டாயம் தேவை.

* நாம் ஒவ்வொரு மாதமும் உடல் எடையை வெறும் எண்களால் மட்டும் கவனிக்காமல், அதனுள் நம் கொழுப்புச் சத்தின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதனை அறிந்து கொள்வது அவசியம். நம் சருமத்திற்குக் கீழே உள்ள கொழுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு ஒவ்வொரு மாதமும் குறைந்தாலோ அல்லது அதே அளவில் பராமரிக்கப்பட்டாலோ மட்டுமே நாம் செய்யும் உடற்பயிற்சிகளும், உணவு முறையும் சரியானது என்பது அர்த்தம். இதனை அறிந்துகொள்ள இயன்முறை மருத்துவரிடமோ, உணவியல் நிபுணரிடமோ, பொது மருத்துவரிடமோ இருக்கும் பிரத்யேக உடல் எடை மிஷின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

* நாம் ஒவ்வொரு மாதமும் தசை அடர்த்தியை (Muscle Density) உறுதிப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். நாம் செய்யும் உடற்பயிற்சிகள் தசை அடர்த்தியை அதிகரிக்கவோ அல்லது பராமரிக்கப்படவோ செய்ய வேண்டும். தசைகளின் அடர்த்தி

குறைந்தால் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் தவறு என்பது அர்த்தம்.

* காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் வெறும் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைக்காது. பழங்களை வெறும் வயிற்றில் உண்பதினால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சீக்கிரம் பசிக்கிறது. எனவே எடை குறைவதில்லை.

* உடற்பயிற்சிகள் என்பது மாத்திரைகளை போன்றது. எப்படி மாத்திரைகள் ஒவ்வொருவருக்கும் அளவுகளிலும், எண்ணிக்கையிலும், நோய்க்கும் மாறுபடுகிறதோ அதே போலத்தான் உடற்பயிற்சிகளும். உடற்பயிற்சி யாருக்கு தேவை, எந்த எண்ணிக்கையில் தேவை, எந்த முறையில் செய்ய வேண்டும் என்பது அனைத்தையும் இயன்முறை மருத்துவர் பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர்.

ஆரோக்கியமான இளம் பருவமே ஆரோக்கியமான வயோதிகப் பருவத்தை உருவாக்குகிறது என்பதால், நாம் உண்ணும் ஒவ்வோர் உணவுகளிலும், ஒவ்வொரு பழக்க வழக்கங்களிலும் நம் இளம் வயதில் இருக்கும் பாதிப்பு வயதானக் காலத்திலும் வரும் என்பதால், நாம் எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் கையாள்வது சிறந்த வழியாகும்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்