நன்றி குங்குமம் டாக்டர்
காலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டைவிட்டு வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத முதியவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்ய விரும்பாத குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்த உபகரணம் இந்த ஃபிட்னெஸ் பால்.பெரிய அளவில் இருக்கும் இப்பந்தின் மேலமர்ந்து சிறு சிறு எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். இந்தப் பந்தின் மீது அமர்ந்து உடற்பயிற்சி செய்வதினால் தசைப்பிடிப்போ மூட்டுவலியோ ஏற்பட வாய்ப்பு குறைவு. இந்தப்பந்தை வாங்குவதற்கு முன் ஒருவரின் உடல் வாகுக்கு ஏற்ற பந்தை தேர்வு செய்து, இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விற்பனையாளரின் ஆலோசனையைப் பெற்று பந்தின் மேல் அமர்ந்து சோதித்துப் பார்த்து பின்னர் வாங்குவது நல்லது.
இந்த உடற்பயிற்சி பந்து நான்கு அளவுகளிலும், பல வண்ண நிறங்களில் கிடைக்கிறது. இந்த பந்து தொடுவதற்கு மென்மையானது, சருமத்திற்கு ஏற்ற PVC மற்றும் ஹைபோஅலர்கெனி பொருள் ஆகியவற்றால் ஆனது, இந்த இலகுரக உடற்பயிற்சி பந்து வயிறு, கால்கள், பிட்டம், கைகள் மற்றும் முதுகுக்கு பயிற்சி அளிக்க ஏற்றது. இது பெரும்பாலும் காயம் ஏற்பட்டவர்களுக்கு மீட்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
யோகா செய்ய விரும்பாத குழந்தைகளுக்கு இந்த பந்தை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினால் ஆர்வம் கூடும். மேலும், அவதான குறைபாடு உள்ள குழந்தைகள், இப்பந்தினை உபயோகப்
படுத்தி எளிய பயிற்சிகள் செய்வதன்மூலம் நோயின் தீவிரம் குறைய வாய்ப்பு இருக்கிறது. வயதில் மூத்தவர்கள் இப்பந்தினை பயன்படுத்தி பயிற்சி செய்யும் பொழுது கை தசைகள் மற்றும் முதுகு தசைகளுக்கு பயிற்சி அளிக்க முடியும் மற்றும் க்ரஞ்சஸ் மற்றும் கால் பயிற்சிகள் போன்ற தரை பயிற்சிகளை செய்யலாம், இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே ஒரு முழுமையான வொர்க்அவுட்டை செய்த திருப்தி கிடைக்கும்.மன அழுத்தம் ஏற்ற இறக்கங்களுடன் இருப்பவர்கள். உடல் சோர்வாக உணரும்போது, இப்பந்தின் மேலமர்ந்து எளிய பயிற்சிகளை செய்யும்போது மனசு லேசானது போன்று உணரலாம். எனவே, மன அழுத்தத்தைப் போக்கவும் இந்த ஃபிட்னெஸ் பால் உதவுகிறது.
தொகுப்பு:- ரிஷி


