நன்றி குங்குமம் தோழி
காலை எழுந்ததிலிருந்து உடல் சோர்வாக இருப்பது, சின்ன வேலை செய்தாலே களைப்பு, படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சு வாங்குவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது… இதெல்லாம் பல பெண்கள் தங்களின் இயல்பான வாழ்க்கைச் சுமை என்று கடந்து விடுகிறார்கள். ஹீமோகுளோபின் அளவு இயல்பாக இருந்தாலும், உடலில் இரும்புச்சத்து சேமிப்பு குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரத்தசோகை பிரச்னை வெளிப்படுவதற்கு முன்பே உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஆரம்பித்துவிடும்.
முதலில் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் இரும்புச்சத்து குறையும். அதனைத் தொடர்ந்து ஹீமோகுளோபின் அளவும் குறைந்து ரத்தசோகை உருவாகும். அதனால், “ஹீமோகுளோபின் சரியாக இருக்கிறது… எனக்கு எந்தக் குறையும் இல்லை” என்று தொடர்ந்திருக்கும் சோர்வை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக அதற்கான ஆலோசனையை மருத்துவரிடம் பெறுவது அவசியம்.
ரத்தசோகை என்றால் என்ன?
நம் உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் அளவு இயல்பை விடக் குறைவாக இருப்பதே ரத்தசோகை. இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகைக்கு முக்கிய காரணம். ரத்தசோகை ஏற்பட்டால் அது இரும்புச்சத்து குறைபாட்டால் மட்டுமே ஏற்பட்டது என்று கூற முடியாது. வைட்டமின் பி12 அல்லது ஃபோலேட் குறைபாடு, நீண்டகால நோய்கள் மற்றும் அழற்சி, சில தொற்றுகள், மரபியல் ரத்தக் கோளாறுகள், அதிகப்படியான ரத்த இழப்பு போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
இந்தியப் பெண்களின் நிலை என்ன?
2019-21-ல் நடைபெற்ற தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில், 15 முதல் 49 வயதுடைய பெண்களில் இந்தியாவில் 57.2%, தமிழ்நாட்டில் 53.4% ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை, இந்திய அளவில் 52.2%, தமிழ்நாட்டில் 48.3% ரத்தசோகை பிரச்னையுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமும் ரத்தசோகை அதிகமாக இருப்பதை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. வெளிறிய தோல், சோர்வு, உணவு விருப்பம் குறைதல், வயதுக்கேற்ற வளர்ச்சியில் தாமதம், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்னை குழந்தைகளிடம் தென்பட்டால், ரத்தசோகை காரணமாக இருக்கலாம்.
இளம்பருவத்தினரிடம், படிப்பில் கவனம் குறைதல், விளையாடும்போது விரைவில் களைப்படைவது, தலைசுற்றல், சோர்வு போன்றவை காணலாம். குறிப்பாக மாதவிடாய் தொடங்கிய பிறகு அதிக ரத்தப்போக்கு உள்ள பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக ஏற்படும். நடுத்தர வயதுப் பெண்கள், தொடர்ந்து சோர்வாக இருப்பது, உடல் சக்தி குறைந்தது போன்ற உணர்வு, உடற்பயிற்சி செய்யும் போது விரைவில் களைப்படைவது, மூச்சுத்திணறல் பிரச்னைகளை சந்திக்கலாம். முதியவர்கள் சோர்வு, உடல் பலவீனம், நடப்பதில் அல்லது அன்றாட வேலைகளில் சிரமம் போன்றவற்றை சந்திப்பார்கள். வயதானவர்களுக்கு ரத்தசோகை மட்டுமில்லாமல் நீண்டகால நோய்களும் ஒரு காரணங்களாக அமைய வாய்ப்புள்ளது.
பரிசோதனைகள்?
ரத்தப் பரிசோதனை மூலம் ஹீமோகுளோபின் உள்ளிட்ட ரத்தத்தின் அளவினை கண்டறியலாம். ஹீமோகுளோபின் மட்டும் பரிசோதிப்பதால் ஆரம்பகட்ட இரும்புச்சத்து குறைபாட்டை சில நேரங்களில் கண்டறிய முடியாமல் போகலாம். ஃபெரிட்டின் பரிசோதனை உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரும்புச்சத்தின் அளவை மதிப்பிட உதவும் முக்கியமான பரிசோதனை. ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து, இரும்பை எடுத்துச் செல்லும் புரதம் மற்றும் உடல் இரும்புச்சத்தை எவ்வளவு பயன்படுத்துகிறது என்பதற்கான பரிசோதனைகளும் உள்ளன.
ஆண்டுதோறும் முழுமையான இரும்புச்சத்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றில்லை. அதே சமயம் வயது, உடல்நிலை, மாதவிடாய், கர்ப்பம், உணவுமுறை, இரும்புச்சத்து குறைபாடு குறித்து பரிசோதனை செய்யக்கூடிய இடைவெளி மாறுபடும். தொடர்ந்து அறிகுறிகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
உணவில் இரும்புச்சத்து?
இரும்புச்சத்து உள்ள உணவுகளை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.இறைச்சி, மீன், கடல் உணவுகள், கோழி, முட்டை போன்றவற்றில் கிடைக்கும் இரும்புச்சத்தினை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்கிறது.பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, ராஜ்மா, கீரைகள், எள், கொட்டைகள், விதைகள், முழுதானியங்களில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தாவர உணவுகளில் உள்ள இரும்புச்சத்தினை உடல் உறிஞ்சிக் கொள்ள வைட்டமின் சி அவசியம். இரும்புச்சத்து நிறைந்த உணவுடன் எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, தக்காளி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
எதைத் தவிர்க்க வேண்டும்?
இரும்புச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடும் நேரத்தில் தேநீர் அல்லது காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள சில வேதிப்பொருட்கள் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கலாம்.பருப்பு மற்றும் தானியங்களை முளைகட்டி பயன்படுத்தும் போது உடலுக்கு இரும்புச்சத்து நேரடியாக சேரும்.
கொண்டைக்கடலை, கீரை சுண்டல்
கொண்டைக்கடலை, கீரை, தக்காளி, எள், சிறிதளவு தேங்காய் மற்றும் தேவையான மசாலா சேர்த்து சுண்டல் தயாரித்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிடலாம். கொண்டைக்கடலை மற்றும் எள்ளில் இரும்புச்சத்து கிடைக்கிறது. கீரை கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குகிறது. தக்காளி மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க?
தினசரி இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். போதுமான புரதச்சத்து, வைட்டமின் சி நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு இருந்தால் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். குழந்தைகளுக்கும் இளம்பெண்களுக்கும் வயதுக்கேற்ற ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.ஹீமோகுளோபின் அளவு இயல்பாக இருக்கிறது என்பதால், உடலில் இரும்புச்சத்து சரியாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. உடலில் மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது அவசியம்.
தொகுப்பு : ஹாஃபிஜா பானு, ஊட்டச்சத்து நிபுணர் / நீரிழிவு கல்வியாளர்


