நன்றி குங்குமம் டாக்டர்
‘ஒரே ஒரு சிகரெட்... அதனால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?
இப்படி அவ்வப்போது மட்டும் புகைப்பவர்களுக்குத் தோன்றும். இது இயல்புதான். தேநீர் குடிக்கும்போது, சாப்பிட்ட பிறகு அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிடும்போது ஒரு சிகரெட் பிடிப்பது பெரிய உடல்நலப் பிரச்னையாகத் தெரியாமல் இருக்கலாம். உடனடியாக இருமல், மார்பில் அசௌகரியம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவையும் ஏற்படாமல் இருக்கலாம். ‘‘ஆனால், உடலுக்குள் அதற்கான எதிர்வினை மிக விரைவாகத் தொடங்கி விடுகிறது...’’ என்கிறார் இன்டர்வென்ஷனல் நுரையீரல் கன்சல்டன்டான மருத்துவர் சுரேஷ் சகாதேவன்.
‘‘சிகரெட் புகை நுரையீரலுக்குள் சென்றவுடன், நிகோடின், கார்பன் மோனாக்சைடு மற்றும் புகையிலைப் புகையில் உள்ள பல்வேறு வேதிப் பொருட்களுக்கு உடல் ஆளாகிறது. உடனடியாக எந்த மாற்றத்தையும் புகைப்பவர் உணராமல் இருக்கலாம். ஆனால், இதயம், ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை புகைத்தவுடன் உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்குகின்றன...’’ என்றபடி விரிவாக விளக்கத் தொடங்கினார் டாக்டர் சுரேஷ் சகாதேவன்.
சிகரெட் பிடித்த பிறகு இதயத்தில் என்ன நடக்கிறது?
ரத்தஓட்டத்தில் மிக வேகமாக நிகோடின் கலக்கிறது. இது உடலின் மனஅழுத்த எதிர்வினையை தூண்டக்கூடும். இதனால் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், ரத்த நாளங்கள் சுருங்கவும் செய்யலாம். இதன் விளைவாக, உடல் முழுவதும் ரத்தத்தைச் சுற்றி அனுப்ப இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கலாம். இந்த மாற்றங்கள் தற்காலிகமாக இருக்கலாம். ஆனால், இதயம் மற்றும் ரத்த நாளங்களை உள்ளடக்கிய இருதய - ரத்தநாள அமைப்பு (Cardiovascular system), சிகரெட் புகைக்கு கிட்டத்தட்ட உடனடியாகவே எதிர்வினையாற்றுகிறது என்பதை இது நினைவுபடுத்துகிறது.
ஒருவர் நீண்ட காலமாகப் புகைப்பவராக (Long-term smoker) மாறும் வரை, இந்த எதிர்வினைகள் ஏற்படுவதற்கு உடல் காத்திருக்க வேண்டியதில்லை.
நுரையீரலுக்குள் என்ன நடக்கிறது?
நுரையீரல் நேரடியாக சிகரெட் புகைக்கு ஆளாகிறது. இந்தப் புகையில் உள்ள எரிச்சலூட்டும் பொருட்கள், மூச்சுக்குழாய்களை பாதிப்பதுடன், இயல்பான சுவாசச் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும்.சிகரெட் பிடித்த பிறகு சிலருக்கு தொண்டையில் எரிச்சல் அல்லது இருமல் ஏற்படலாம். ஆனால், வேறு சிலருக்கு எந்தவித அசாதாரண உணர்வும் இல்லாமல் இருக்கலாம். இங்குதான் தவறான புரிதல் தொடங்குகிறது. எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பதால், சிகரெட் புகையால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அர்த்தமல்ல.
ஒருவர் உடனடியாக மூச்சுத்திணறல் அல்லது அசௌகரியத்தை உணராவிட்டாலும், நுரையீரல் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு ஆளாகியிருக்கலாம்.இந்தப் பாதிப்பு புகைப்பவருடன் மட்டும் நின்று விடுவதில்லை. அருகில் இருப்பவர்களும் இரண்டாம் நிலைப் புகையை சுவாசிக்கலாம். அதாவது, புகைப்பவரைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் மற்றும் பிறர் சுவாசிக்கும் காற்றையும் புகைப்பழக்கம் பாதிக்கக்கூடும்.
மறைந்திருக்கும் பாதிப்பு - கார்பன் மோனாக்சைடு
சிகரெட் புகையில் உள்ள மற்றொரு முக்கியமான பொருள் கார்பன் மோனாக்சைடு. இந்த கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜனை திறம்பட எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறனைக் குறைக்கிறது.
எனவே, சிகரெட் பிடித்த பிறகும் ஒருவர் முற்றிலும் இயல்பாக உணர்ந்தாலும், உடலில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படும் செயல்முறை பாதிக்கப்படலாம்.
அதனால்தான், புகைப்பழக்கத்தால் ஏற்படும் உடனடி விளைவுகளை ஒருவர் எப்படி உணர்கிறார் என்பதை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது. ‘ஒரு சிகரெட் பிடித்தேன், ஒன்றுமே ஆகவில்லை!’ என அவ்வப்போது மட்டும் புகைப்பது தீங்கு இல்லாதது என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ள பலர் இப்படிச் சொல்வார்கள். உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாததால், உடலில் எந்தவித உடலியல் எதிர்வினையும் ஏற்படவில்லை என்று அர்த்தமல்ல. சில மாற்றங்களை ஒருவர் உணராமல் இருக்கலாம்; புகைக்கு வெளிப்படும் நிலை முடிந்த பிறகு, அந்த மாற்றங்கள் சில இயல்பு நிலைக்குத் திரும்பலாம். ஆனால், பெரிய கவலை மீண்டும் மீண்டும் ஏற்படும் வெளிப்பாடுதான்.
ஒரு சிகரெட் மற்றொரு சிகரெட்டாக மாறலாம். அவ்வப்போது மட்டும் பிடிக்கும் சிகரெட், படிப்படியாக ஒரு வழக்கமான பழக்கமாக மாறலாம். தொடர்ந்து புகைப்பதால், இதயம், ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை நிகோடின், கார்பன் மோனாக்சைடு மற்றும் புகையிலைப் புகையில் உள்ள பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மீண்டும் மீண்டும் ஆளாகின்றன. காலப்போக்கில், இந்தத் தொடர்ச்சியான வெளிப்பாடு இருதய நோய்கள் மற்றும் சுவாச மண்டல நோய்கள் ஏற்படுவதற்கு பங்களிக்கக்கூடும்.ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட் மட்டும் பிடிப்பவர்கள், தங்களைப் புகை பிடிக்காதவர்களாக / புகைக்கு அடிமை ஆகாதவர்களாக நினைக்கலாம்.
அதிகமாகப் புகைப்பவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சிகரெட்டுகளைப் புகைப்பது, புகைக்கு வெளிப்படும் அளவைக் குறைக்கிறது. ஆனால், அதனால் புகைப்பழக்கம் தீங்கு இல்லாதது என்று நினைக்க வேண்டாம். அதிக அளவில் புகைப்பவர்களுக்கு மட்டுமே ஆபத்து என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பவர்களுக்கு, சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முழுமையாக நிறுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம். ஆனால், இறுதி இலக்கு புகைப்பழக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக இருக்க வேண்டும்.
அவ்வப்போது மட்டும் புகைப்பவர் என்ன செய்யவேண்டும்?
புகைப்பழக்கம் தினசரி பழக்கமாக மாறும் வரை காத்திருக்காமல், அதை உடனே நிறுத்த முடிவு செய்யுங்கள். நீங்கள் அவ்வப்போது மட்டும் புகைப்பவராக இருந்தாலும், இப்போதே நிறுத்துவது நல்லது. புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து, கடினமாக இருந்தால், ஒரு சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும். சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம். ஆனால், முழுமையாக நிறுத்துவதே இலக்கு.
நினைவில் கொள்ளவேண்டியது...
புகைப்பழக்கத்தின் விளைவுகள் பல ஆண்டுகள் புகைத்த பிறகுதான் தொடங்கும் என்பதல்ல. புகைக்கு உடல் வெளிப்படும் தருணத்திலேயே உடலின் எதிர்வினை தொடங்குகிறது.நீங்கள் ஒரு சிகரெட்டை இருமல் இல்லாமல் முடித்துவிடலாம். முற்றிலும் இயல்பாக உணர்ந்து, உங்கள் அன்றாட வேலைகளைத் தொடரலாம். ஆனால், அந்த நேரத்தில் உங்கள் இதயம், ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் ஏற்கனவே சிகரெட் புகைக்கு வெளிப்பட்டுவிட்டன.
எனவே, அடுத்த முறை யாராவது, ‘ஒரே ஒரு சிகரெட்தானே!’ என்று சொன்னால், ‘ஒண்ணே ஒண்ணு’ என்றாலும் அது ஆபத்துதான்... புகை பிடிப்பதற்கு அடிமை ஆவதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இதயம் மற்றும் நுரையீரலைப் பாதுகாப்பது, புகையிலைப் புகைக்கு வெளிப்படுவதைக் குறைப்பதில் தொடங்குகிறது - இறுதியில், புகைப்பழக்கத்தை முழுமையாக நிறுத்துவதே இலக்காக இருக்க வேண்டும்...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் டாக்டர் சுரேஷ் சகாதேவன்.
தொகுப்பு: நுரையீரல் மருத்துவர் சுரேஷ் சகாதேவன்


