நன்றி குங்குமம் டாக்டர்
முட்டை நல்ல தரமான புரதம், வைட்டமின் B12, D உள்ளிட்ட சத்துக்களை வழங்குகிறது. அதனால் தினமும் காலையில் ஒரு அவித்த முட்டை சாப்பிடுவது உடலுக்கு நன்மை செய்யும். முட்டையில் உள்ள உயர் தரமான புரோட்டின், தசைகளை பலப்படுத்தி வளர்ச்சிக்கு உதவும்.
அவித்த முட்டை சாப்பிடுவதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தரும். இதனால் தேவையற்ற நொறுக்குத்தீனி சாப்பிடுவது குறையலாம். முட்டையில் கோலின் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது நினைவுத்திறன் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும். முட்டையில் இருக்கும் வைட்டமின் A,D,E,B12 மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், பயோட்டின், வைட்டமின் E இருப்பதால் முடி உதிர்வை குறைத்து, தோலை மினுமினுப்பாக வைக்க உதவும். லூட்டின் (Lutein) மற்றும் ஜியாக்சாந்தின்(Zeaxanthin) சத்துக்கள் கண்களை பாதுகாத்து, பார்வைத் திறனை மேம்படுத்தும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
பொதுவாக ஒரு நாளைக்கு 1 முட்டை என்பது பெரும்பாலானவர்களுக்கு ஏற்ற அளவாகும். ஆனால் உங்கள் மொத்த உணவு முறை, வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து அளவு மாறலாம். குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது அதிக புரதம் தேவைப்படுபவர்கள், தங்களுடைய மொத்த உணவு முறையைப் பொறுத்து 2 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கருவை கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்; இதில் புரதம் அதிகம், கொலஸ்ட்ரால் இல்லை.அதிக கொலஸ்ட்ரால், இதய நோய் அல்லது நீரிழிவு இருப்பவர்கள் தினசரி எத்தனை மஞ்சள் கரு சாப்பிடுவது என்பதை மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?
காலை உணவாகவோ அல்லது மதிய உணவுடன் சேர்த்தோ சாப்பிடலாம்; குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முட்டையை அவித்து சாப்பிடுவது, எண்ணெயில் பொரிப்பதைவிட கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரியைத் தவிர்க்க உதவும். மேலும், அவித்த முட்டையை காய்கறிகள், கீரைகள், முழுதானிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது, வெறும் முட்டையை மட்டும் அதிகமாக சாப்பிடு வதைவிட சமச்சீர் உணவாக இருக்கும்.
தொகுப்பு: ரிஷி


