நன்றி குங்குமம் தோழி
கணவன்-மனைவி சண்டை என்பது இயல்பான ஒன்றுதான். இது வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல் எல்லோர் வீட்டிலும் நடப்பது தான். ஆனால், சண்டைக்குப் பிறகு சமாதானம்தான் பெரிய சிக்கல் என்று நீங்கள் நினைப்பீர்கள். சமாதானமும் எளிதாக செய்யலாம். அதற்கு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.அமைதி: கோபத்தில் இருக்கும் போது சமாதானம் செய்ய நினைப்பது தவறான செயல். கோபத்தில் இருக்கும் போது அவர்கள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். ஒருவர் கோபப்படும் போது எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள். அவர்களாகவே சமாதானமடைந்து அமைதி நிலைக்கு திரும்புவார்கள். அதுவரை பொறுமை காப்பதே சிறந்தது.
வார்த்தைகளில் கவனம்: எதற்கெடுத்தாலும் கோபப்படும் துணை அமைந்தால் அவர்களுடன் பேசும் போது வார்த்தை பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தை, அவர்களை மேலும் கோபத்திற்கு தூண்டலாம். கோபமாக இருக்கும்போது வார்த்தை பிரயோகிப்பில் கவனம் அவசியம். குணாதிசயங்களை சுய பரிசோதனை செய்யுங்கள்: உங்கள் மீது அல்லது நீங்கள் செய்யும் செயல்களில் எது உங்கள் துணைக்கு அதிக கோபத்தை தூண்டுகிறது என்பதை ஆராயுங்கள். அந்த செயலை தவிர்க்கப் பாருங்கள். தவறு இருப்பின் உங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்பது பல பிரச்னைகளுக்கு
வழிவகுக்கும்.
கோபத்தின் பின்னணியை ஆராயுங்கள்: நீங்கள் சரியானவற்றை செய்தாலும் கோபப்படுகிறார் அல்லது எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் எனில் அதை உளவியல் ரீதியில் அணுகுங்கள். ஒருவரின் கோபத்திற்குப்பின் ஆழமான வலி, சோகம், பயம் ஏதேனும் உள்ளதா என்று சிந்தியுங்கள். பிறகு அவர் அமைதி நிலையில் இருக்கும் போது உரையாடுங்கள். மனம் விட்டுப் பேசுவதால் கோபத்திற்கு தீர்வு கிடைக்கலாம்.
அமைதியாக இருக்கும் போது உரையாடுங்கள்: ‘கோபக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்கள். அப்படி உங்கள் துணை கோபத்தில் இருக்கும் போது அறிவு வேலை செய்யாது. எனவே, அவர் அமைதியாக இருக்கும் போது பகுத்தறிவுடன் சில விவாதங்களை மேற்கொள்வது கோபத்தை குறைக்க உதவும்.
- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.



