நன்றி குங்குமம் டாக்டர்
புற்றுநோய் என்ற வார்த்தையை கேட்டால் அனைவருக்கும் அபாயகரமான வலியுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய் என்றுதான் நினைவுக்கு வரும். ஆனால் 1970களில் இருந்து புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர் வாழும் விகிதம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஆரம்பகால நோய் அறிதல், உண்மையில் பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமான வளர்ச்சி அடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்படக் கூடியவையே.
பிரச்னை என்னவென்றால் பல சமயங்களில் மருத்துவரை அணுக தயக்கம் காட்டுவது. ஆரம்பகால நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்வது போன்றவற்றால் நோய் முற்றிய நிலையில் கண்டறிகிறோம். அதனால், எந்தவித அறிகுறிகளும் சில நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் அதனை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு கட்டத்தில் உடல் எடையை இழக்கின்றனர். எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால் அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் தொடங்கிய இடத்திலிருந்து பரவ ஆரம்பித்த பிறகு இது அடிக்கடி நிகழ்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள். புற்றுநோய் அல்லது அதன் சிகிச்சைகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் இது நிகழ்கிறது. பொதுவாக காய்ச்சல், ரத்த புற்றுநோய் அல்லது நிணநீர் குழாய் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் இதற்கான ஒரு அறிகுறி. புற்றுநோய் பரவும்போது இது முக்கியமான அறிகுறியாக இருக்கலாம்.சில பெருங்குடல் அல்லது வயிற்று புற்றுநோய்கள் வெளிப்படையாக தெரியாது. ஏதோ ஒரு நிலையில் ரத்த இழப்பை ஏற்படுத்தும், அதனால் உடல் சோர்வு ஏற்படலாம்.தோல் புற்றுநோய்களுடன் வேறு சில புற்றுநோய்களும் வெளிப்படையாக தெரியும். தோல் மாற்றங்களை ஏற்படுத்தும். சருமம் கருமையாதல் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் தோல் சிவத்தல் அதிகப்படியான முடி வளர்ச்சி இவை எல்லாம் தோன்றும்.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.மறுபுறம் சிறுநீர் கழிக்கும்போது வலி, சிறுநீரில் ரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். திடீரென எங்காவது மச்சங்கள் வளரத் தொடங்கினால் அல்லது வலி ஏற்படுத்தினால் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அது புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.அதேபோன்று உடலில் எங்காவது காயம் ஏற்பட்டு, அது நான்கு வாரங்களுக்கு மேல் குணமாகாமல் இருந்தால் சிறிய காயம்தானே என அலட்சியப்படுத்தக்கூடாது.
நீண்ட காலமாக வாயில் ஆறாமல் இருக்கும் புண் வாய்ப் புற்றுநோயாக இருக்கலாம். அதனால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள் தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோயுடன் ஆரம்பம் அது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும்போது ரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.மலத்தில் ரத்தம் தோன்றினால் அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் எச்சரிக்கையாக இருக்கலாம்.
கர்ப்பப்பையில் இருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும் சிறுநீரில் ரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரக புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். பல புற்றுநோய்கள் தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும். முக்கியமாக மார்பகங்கள் மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.தடிப்பு அல்லது கடினமாக்குதல் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையில் 0அறிகுறியாக இருக்கலாம்.
தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய் வயிறு அல்லது குரல்வளை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகள் புற்றுநோயின் ஆரம்பமாக இருக்கலாம். என்றாலும், புற்றுநோய் அல்லாமல் வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.
தொகுப்பு: - ஜெகாதா


