நன்றி குங்குமம் டாக்டர்
இயல்பான தோற்றத்துடனும், துடிப்பான நடிப்புடனும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, ராயன் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
தற்போது ஜி. டி. நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கும் வரலாற்று திரைப்படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உடல் எடையை கூட்டுவது குறைப்பதுமாக இருக்கும் துஷாரா சமீபத்தில் நான்கு மாதங்களில் 13 கிலோ எடையை குறைத்திருப்பதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். துஷாராவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
வொர்க்கவுட்ஸ்
தினசரி உடற்பயிற்சி மற்றும் ஜிம் வொர்க்கவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன். அதேசமயம், ஃபிட்னெஸ் என்றாலே உடல் எடையை குறைப்பது அல்லது மெலிந்த தோற்றத்தைப் பெறுவது மட்டுமே இல்லை. உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, சக்தி மற்றும் மனநலம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதே முழுமையான ஃபிட்னெஸ்.
ஒரு நடிகைக்கு வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் மொழியையும் செயல்பாட்டுத் திறனையும் மாற்ற வேண்டிய சூழல் இருக்கும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை மற்றும் உடலை இயக்கத்தில் வைத்திருப்பது முக்கியமாகும். அதைத்தான் எனது ஃபிட்னெஸ் ரகசியமாக வைத்திருக்கிறேன்.
பொதுவாக, ஃபிட்னஸ் பயணத்தில் ஒரே நாளில் பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பதைவிட, தொடர்ந்து செய்யக்கூடிய உடற்பயிற்சியைத் தேர்வு செய்வது நல்லது. உதாரணமாக, நடைப்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங், யோகா, நடனம், வலிமைப் பயிற்சிகள் போன்றவை நம்மை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
அந்தவகையில்தான், கடந்த நான்கு மாதங்களில் 69.2 கிலோவில் இருந்து 56.2 கிலோவாக எனது உடல் எடையை குறைத்துள்ளேன். மொத்தம் 13 கிலோ எடையை குறைத்த இந்தப் பயணம், எடையைக் குறைப்பது மட்டுமல்ல. சாக்குப்போக்குகளுக்குப் பதிலாக
ஒழுக்கத்தையும், சௌகரியத்துக்குப் பதிலாக தொடர்ச்சியான முயற்சியையும் தேர்வு செய்வது பற்றியது. ஒவ்வொரு நாளும் என்னை நம்புவதும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் எனக்கு உறுதுணையாக எனது பயிற்சியாளர், பயோஹேக்கர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் எனது குடும்பத்தினரும் உதவியாக இருந்தனர்.
டயட்
நான்கு மாதங்களில் 13 கிலோ உடல் எடையை என்னால் குறைக்க முடிந்தது என்றால், அதற்கு உடற்பயிற்சியுடன் எனது சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையும்தான் முக்கிய காரணம். கடல் உணவுகள் எனக்கு அலர்ஜி தருபவை என்பதால் அதை தவிர காய்கறிகள், பழங்கள், புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறேன். இதில் எனக்கு பிடித்த உணவு எதையும் நான் தவிர்க்கவில்லை ஸ்நாக்ஸ் வகைகள் உள்பட. அதேசமயம், அளவோடுதான் எல்லாவற்றையும் சாப்பிடுகிறேன். பொதுவாக நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்பது நமது தனிப்பட்ட உரிமை. அதுபோன்று மற்றவர்களின் உணவுத் தேர்வுகளையும் நாம் விமர்சிக்கக் கூடாது. முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிட்டாலே நாம் ஃபிட்டாக இருக்க முடியும்.
பியூட்டி
எனது சருமப் பராமரிப்பில் ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது, தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதுதான். எப்படி நாம் தினசரி பல் துலக்குகிறோமோ அது போல, வெயில் காலமாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் சருமப் பராமரிப்பில் சன்ஸ்கிரீனைத் தவிர்க்கக் கூடாது. மற்றபடி நல்லா சாப்பிட்டு, நல்லா தூங்கி எழுந்து, தினசரி தண்ணீர் குறைந்தது 2 லிட்டர் அளவு குடித்தாலே சருமம் பளபளப்பாகவும் நன்றாகவும் இருக்கும்.
தொகுப்பு:- ஸ்ரீ தேவிகுமரேசன்



