நன்றி குங்குமம் டாக்டர்
ஸ்கிரீன் அடிக்சன், டிஜிட்டல் அரஸ்ட், டிஜிட்டல் டீடாக்ஸ் இந்த வார்த்தைகளெல்லாம் நவீன யுகத்திற்கு புதிதல்ல. காரணம், ஒட்டுமொத்த நவீன சமூகமே டிஜிட்டலுக்குப் பின்னேதான் ஓடிக்கொண்டிருக்கிறது. கற்பது, சிந்திப்பது, வேலை செய்வது என மொத்த வாழ்வும் டிஜிட்டலை நோக்கியே இருப்பதில் எந்தளவு நன்மை இருக்கிறதோ, அதேயளவு தீமையும் இருக்கிறது. அதென்ன தீமை எனக் கேட்கிறீர்களா? அதுதான், ‘டோபமைன் ரஷ்’. டோபமைன் தெரியும். அதென்ன ‘டோபமைன் ரஷ்’ என்ற கேள்வியோடு,
டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லாவை சந்தித்தோம்.
டோபமைன் என்பது மூளையில் செயல்படும் ஒரு நரம்பியல் கடத்தி. அதாவது, உயர் ரசாயன வேதிப்பொருள். இது ஒரு இன்பம் தரும் வேதிப்பொருள். மனதிற்குப் பிடித்த ஒரு செயலை செய்யும்போது, மற்றவர்கள் நம்மை பாராட்டும்போது, பரிசு, ஊக்கம் கிடைக்கும்போது டோபமைன் எனப்படும் ரசாயனப்பொருள் மூளையில் சுரந்து நமக்கு மகிழ்ச்சி தரும். அதொரு, இன்ஸ்டண்ட் ஹேப்பினஸ். உடனடியான மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி கிடைப்பதால்தான் நாம் நமக்கு மகிழ்ச்சிதரும் விசயங்களை தொடர்ந்து செய்துவருகிறோம். ஏன்? மது, புகை பழக்கத்திற்கு கூட மகிழ்ச்சி தரக்கூடிய இந்த டோபமைன்தான் காரணம். இதே டோபமைன்தான் செல்போன் அடிக்சனுக்கும் காரணம் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை அதுதான் என்றவர், விரிவாக பேசத் தொடங்கினார்.
இந்த செல்போன் அடிக்சனுக்கு காரணம் டிஜிட்டல் டோபமைன் ரஷ்தான். நாம் அனைவருமே தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கிற்கு மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோமா என்றால் இல்லை என்பதுதான் பதில். சிலர், பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு அப்படியல்ல. அதாவது, சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ், ஷேர், பாலோவர்ஸ், சப்ஸ்கிரைப் கிடைக்க வேண்டுமென சிலர் சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்கள்.
அவர்களே ஸ்கிரீன் அடிக்ட், டிஜிட்டல் அரஸ்ட் போன்ற வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள்தான் டிஜிட்டல் டோபமைனிற்கு ஆளாகிறார்கள். அதிக லைக்ஸ், அதிக ஷேர், அதிக ஃபாலோஸ் மூலம் நாம் டிஜிட்டல் உலகில் கவனிக்கப்படுகிறோம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. அத்தகைய மகிழ்ச்சியைத் தருவதுதான் டிஜிட்டல் டோபமைன். அந்த டிஜிட்டல் டோபமைனால் மீண்டும் மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியடைவதும், அந்த மகிழ்ச்சியின் மூலம் ஸ்கிரீன் அடிக்ட் ஆவதும்தான் இதிலுள்ள பிரச்னைக்குரிய விசயம் என்றவர், மேலும் தொடர்ந்தார்.
சமூக வளைத்தளங்கள் மற்றும் மொபைல் ஆப்கள் டோபமைனை எவ்வாறு தூண்டுகிறது என்றால், நிலையில்லாத்தன்மை மூலம்தான். அதாவது, ஒரு பதிவை நாம் பொதுவெளியில் பதிவிடும்போது, எப்போது அந்த பதிவுக்கு ஊக்கமளிக்கிற கமெண்ட்ஸ்கள் வரும், எவ்வளவு லைக்ஸ் அதிகமாகும் என்பது நமக்கு தெரியாது. அதனால், லைக் அன்ட் ஷேர்ஸ் அதிகமாகும்போது, திடீரென பாலோவர்ஸ் அதிகமாகும்போது ஒரு நிலையில்லாதன்மை உருவாவதால், மூளை அந்த நிலைக்கு அதிகமாக அடிக்ட் ஆகிவிடும். அதேபோல, யூடியூப் சார்ட்ஸ் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கு.
எந்தவொரு நிபந்தனையும் இல்லாம, கணக்கு இல்லாம ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் இவைகளை பார்க்க முடிகிறது. இப்படி தொடர்ந்து பார்ப்பதுமே ஒருவகை போதைத்தன்மைதான். இந்த டிஜிட்டல் டோபமைனால், நிஜ வாழ்வில் அங்கீகாரம் தேடுவதை விட்டுவிட்டு, சோசியல் மீடியாக்களில் அங்கீகாரம் கிடைக்காதா என மனம் ஏங்கத் தொடங்கும். இதுதான், இந்த டிஜிட்டல் டோபமைனின் தன்மை.
இந்த திரை அடிமைத்தனம் போதைப்பொருளுக்கு நிகரான பிரச்னை. ஏனென்றால், மூளையின் செயல்பாட்டு வடிவத்திலே இது மாற்றத்தை உண்டு செய்கிறது. அடிக்கடி இந்த டிஜிட்டல் டோபமைன் உடலுக்குத் தேவை என்கிற ரஷ்ஷை கொண்டுவருகிறது. முக்கியமாக சிந்திக்கும் திறனை குறைக்கிறது.
உலக சுகாதார நிறுவனமே இண்டர்நெட் கேமிங் டிசாடர் என்பது ஒரு மனநல பிரச்னை என அங்கீகரிக்கும் அளவிகிற்கு இந்த திரை அடிமைத்தனம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற விசயங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களுமே அதிகரிக்கிறது. இதனால், மனநலம், பொருளாதாரம், உடல்நலம் என அனைத்துமே பாதிப்படைகிறது.
இந்த ஸ்கிரீன் அடிக்சனால் உண்டாகும் உடல்நலப் பிரச்னைகள் எனப்பார்த்தால், ஸ்கிரீன் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் எரிச்சல், பார்வை குறைபாடு, ஒரே இடத்தில் அமர்வதால் உடல் உழைப்பு குறைந்து உடல் பருமன் அடைவது, அதனால் உண்டாகும் நீரிழிவு, இரத்தக்கொதிப்பு உண்டாகிறது. இந்த பிரச்னை தொடர்ந்தால், இதயநோய் வரவும் வாய்ப்பு
உள்ளது.
மனநல பிரச்னை எனப்பார்த்தால், யாரிடமும் நேரடியாக பழக முடியாத சூழல், உறவினர், நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்பு குறைவு, பேச்சாற்றல் குறைவு. இதனால் உண்டாகும் தனிமை நிலை, நேருக்கு நேர் பேசுவதில் தயக்கம், கூட்டத்தில் பேசுவதில் தயக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை உண்டாகிறது.
மேலும், திரையில் பார்க்கப்படும் தகவல்கள் மிகவும் வேகமாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதாலும், நினைத்தவுடன் ஸ்கிரீனை மாற்றமுடியும் என்பதாலும் எந்தத் தகவலையுமே கவனமாக கவனிக்க மூளை பழக்கமாவதில்லை. இதனால், மூளை ஒரு விசயத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கும் திறனை இழக்கிறது. அதேபோல் ஒரு விசயத்தை கவனமாக கேட்கவேண்டும் என்ற தன்மையும் குறைகிறது. இதனால் மூளை ஒரே விசயத்தின் மீது போக்கஸ் செய்யாமல், அடுத்தடுத்த விசயங்களை எதிர்நோக்கிக்கொண்டே இருப்பதால், எந்த விசயத்திலும் கவனம் செலுத்தாமல் இருக்கிறது. இதனால் படிப்பு, வேலை, கிரியேட்டிவ் போன்ற விசயங்கள் பாதிப்படையும் வாய்ப்பு உண்டாகிறது.
குறிப்பாக இம்மாதிரியான பிரச்னைகள் குழந்தைகள் மற்றும் டீனேஜ் வயதினருக்குத்தான் நடக்கிறது. அதற்கு காரணம், குழந்தை மற்றும் டீனேஜ் வயதினருக்கு அந்தப் பருவத்தில்தான் சிந்தித்தல், கவனம் செலுத்துதல், கிரியேட்டிவாக யோசித்தல் போன்ற செயல்பாடுகளை செய்யும் மூளையின் பகுதி வளர்ச்சியடையும். இப்படி, மூளை வளரும் பருவத்தில் போன் மற்றும் ரீல்ஸ்க்கு அடிமையாகி, டிஜிட்டல் டோபமைனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு பழகினோமென்றால், நிஜ வாழ்வில் உண்டாகும் மகிழ்ச்சி குறையத்தொடங்கும்.
அதேபோல, அதிகமான ஸ்கிரீன் அடிக்ட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் கட்டாயம் ஏற்படும். ஏனென்றால், சமூக வலைத் தளங்களில் வாழ்வில் நடைபெறுகிற நல்ல விசயங்களைத்தான் பதிவு செய்யப்படுகிறது. டிஜிட்டல் வாழ்வில் மற்றவங்களோட நல்ல விசயங்கள மட்டுமே பார்ப்பதால், அவங்களுக்கே அவங்க ஒரு தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு உண்டு. அதாவது, நம்மளோட வாழ்வில் ஏன் இப்படியெல்லாம் நல்லது நடக்கலனு தோனும். FOMO (Fear of Missing Out) மற்றவர்கள் ஏதோ முக்கியமான விஷயத்தை அனுபவிக்கிறார்கள், நாம் அதைத் தவறவிட்டு விடுகிறோமோ என்ற பயம் உருவாகும்.
ஸ்கிரீன் அடிக்சனுக்கான அறிகுறிகள் என்னவென்றால் எப்போதும் கையில் போனோடு இருப்பது. அடிக்கடி ஸ்கிரீனை ஆன் செய்து பார்ப்பது, வேலை நேரத்தில் போன் பார்ப்பது, நண்பர்களோடு பேசும்போது போன் பார்ப்பது, தூங்காமல் போன் பார்ப்பது இவை எல்லாமே டிஜிட்டல் அரஸ்ட்ல இருக்கோம்னு அர்த்தம். அதாவது, டிஜிட்டல் டோபமைனால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு பழக்கப்பட்டோமென அர்த்தம்.
இதிலிருந்து வெளியேற போன் பயன்படுத்தும் நேரத்தை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, போன் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைப்பதால் அடிக்கடி போன் பார்ப்பதைத் தடுக்க முடியும். சமூக வலைத்தளங்களுக்குப் பதிலாக நண்பர்களுடன் நேரில் பேசுவது, புத்தகம் படிப்பது, மூச்சுப்பயிற்சி செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் போன் பயன்படுத்துவதைக் குறைத்து, அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதும் முக்கியமானது. படுக்கையறை மற்றும் சாப்பிடும் நேரங்களில் போனைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு போனை விளையாடக் கொடுக்காமல் சிலம்பம், நீச்சல், கராத்தே போன்ற புறச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது ஒரு கருவியே தவிர, அது நம் வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் போதையாக மாறிவிடக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்படுவதே இந்த டிஜிட்டல் வலையிலிருந்து நம்மைக் காக்கும் என திடமாகச் சொல்கிறார் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.
தொகுப்பு:- ச.விவேக்



