Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயக்கமா…கலக்கமா?

நன்றி குங்குமம் டாக்டர்

வெர்டிகோ ரெட் அலெர்ட்!

தலை சுற்றுகிறது, மயக்கமாக இருக்கிறது, கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன, உடம்பு ‘ஸ்டெடி’யாக இல்லாமல் ஆடுவது போல் உள்ளது, தரை கீழே போவதுபோல உள்ளது, கண்ணைத் திறந்தால் கட்டடமே சுழல்வதைப் போல உள்ளது - இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறியுடன் சுமார் 20% நோயாளிகள் அன்றாடம் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு. இந்த மயக்கம் என்பதும், வெர்டிகோ என்பதும் ஒன்றுதானா அல்லது வேறு வேறா என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிரார் நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர் ஜெ.பாஸ்கரன்.

வெர்டிகோ என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன?

சாதாரணமாக வரும் மயக்கம், கண்ணை இருட்டிக்கொண்டு வருதல் (Dizziness) போன்றவை வெர்டிகோ அல்ல. பசி மயக்கம் முதல், மன இறுக்கம் வரை மயக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், வெர்டிகோவை பொருத்தவரை, சுற்றி இருக்கும் கட்டடங்கள், பொருட்கள் எல்லாம் சுழல்வதைப் போலத் தோன்றும் ஒருமனநிலை. தலையோ, உடம்போ ஆடாதபோதும், அவை முன்னும் பின்னும் அசைவதைப் போன்ற பிரமை, ஓர் உணர்வுதான் வெர்டிகோ எனப்படுகிறது. அது ஒரு வியாதியின் அறிகுறிதானே தவிர, வெர்டிகோ என்பதே வியாதியல்ல. சில சமயங்களில் வெர்டிகோவுடன், வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

மேலும், ஒரு நபரின் காது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதாவது ஒரு அடைப்பு ஏற்படும்போது வெர்டிகோ பிரச்னை எழுகிறது. எந்த வயதிலும் வெர்டிகோ பிரச்னை ஏற்படலாம். எனினும், இந்தச் சிக்கல் முதியவர்களையே அதிக அளவில் தாக்குகிறது.

வெர்டிகோவின் வகைகள்

மூளைக்கு வெளியே ஏற்படும் வெர்டிகோ, மூளையில் (முகுளம் எனப்படும் ப்ரெயின்ஸ்டெம்-ல்) ஏற்படும் வெர்டிகோ என இரண்டு வகை வெர்டிகோ இருக்கின்றன. உட்செவியில் உள்ள ‘லேபிரிந்த்’ (Labyrinth) நமது சமநிலைக்கும், எட்டாவது நரம்பு நமது கேட்கும்திறனுக்கும் அவசியமானவை. இவை உட்செவியிலிருந்து, மூளையின் கீழ்ப் பகுதியான முகுளதின் மூலம், மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, உட்செவியிலோ அல்லது முகுளத்திலோ (சில சமயங்களில் சிறுமூளைபாதிப்பும்) அழற்சி, நோய்த் தொற்று, ரத்த ஓட்டக் குறைபாடு போன்றவை ஏற்படும்போது, ஒருவரது சமநிலையையும், கேட்கும் திறனையும் பாதிக்கக்கூடும். அதன் அறிகுறியாக வருவதுதான் வெர்டிகோ. அதேசமயம், மிகவும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது வெர்டிகோ. ஆனாலும், நமது மூளை, கண் பார்வை மற்றும் சில மாற்று இணைப்புகள் மூலம் தானாகவே கட்டுக்குள் வரக்கூடியதும் கூட வெர்டிகோ என்பதாலும், சரியான காரணத்தை அறிந்து அவற்றுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.

வெர்டிகோ ஏற்பட காரணம்

பொதுவாக 80% வெர்டிகோ, உட்செவியின் குறைபாடுகளாலும், ஏதேனும் நோய்க்காக உட்கொள்ளும் சில மருந்துகளினாலும் வரக்கூடியது. மற்றபடி 20% முகுளத்தின் ரத்த ஓட்டக் குறைபாடுகள், முகுளத்தை அழுத்தும் வகையில் ஏற்படும் கட்டிகள் போன்றவற்றால் வரக்கூடியவை. இவை தவிர மைக்ரெய்ன் என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலி , சிலவகையான வலிப்பு நோய்களாலும் வெர்டிகோ வரக்கூடும்.

மேலும், அதிகப்படியான தலை அசைவு, கழுத்தசைவு, படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தல், கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி தலையைப் பின்பக்கமாக சாய்த்தல் உதாரணமாக, கொடியில் துணிகளை உலர்த்துவது, அலமாரியின் மேல்தட்டிலிருந்து பொருட்களை எடுப்பது போன்றவற்றால் வெர்டிகோ வரக்கூடும். இவை வெர்டிகோவின் Triggers அதாவது, தூண்டும் காரணிகள் ஆகும்.

சிலருக்கு, படுத்த நிலையிலிருந்தோ அல்லது உட்கார்ந்த நிலையிலிருந்தோ எழுந்து நிற்கும்போது கூட வெர்டிகோ வரக்கூடும் இதனை போஸ்டுரல் வெர்டிகோ (Postural vertigo) என்கிறோம்.

மேலும், சில வகையான இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இதுபோன்ற மயக்கங்கள் ( வெர்டிகோ) வரக்கூடும். அதுபோன்று, அதிகமாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளுதல் (மீனியர்ஸ் நோய்), மன இறுக்கம், தூக்கமின்மை, சில உணவுப் பொருட்கள் , மது அருந்துதல், நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது, சிலருக்கு கப்பல், விமானப்பயணங்கள் போன்றவைகளாலும், வெர்டிகோ தூண்டப்படலாம்.

வெர்டிகோவிற்கான சிகிச்சை முறைகள்

வெர்டிகோ சாதாரண நிலையில் இருந்தால் அதற்கு பெரிதாக மருத்துவச் சிகிச்சைகள் தேவையில்லை. ஏனெனில், அதன் தாக்கம் சிறிது காலத்தில் தானாகவே சரியாகிவிடும். அதுவே, வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், சர்க்கரை அளவு, கொழுப்பு (கொலஸ்டிரால்) அளவு மற்றும் தைராய்ட் ஹார்மோன் அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்யப்படும். மேலும், காது, தொண்டை, மூக்கு சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ‘கலோரிக்’ டெஸ்ட், BERA என்கிற முகுளம் சார்ந்த மின் அலை டெஸ்ட், ஆடியோகிராம் மற்றும் உட்செவிக்கான ஸ்கேன் போன்றவையும் செய்யப்பட்டு காரணம் கண்டறியப்படும்.

ஒருவேளை, மூளை, முகுளம் போன்றவற்றில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அதன்காரணமாக வெர்டிகோ ஏற்பட்டிருந்தால், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்றவற்றின் மூலம் கண்டறியப்படும். இது, சில கட்டிகள் (C.P.angle tumours), ஸ்ட்ரோக், மல்டிபிள் ஸ்க்ளிரோசிஸ் போன்ற வியாதிகளைக் கண்டறியவும் உதவும். எனவே, வெர்டிகோ எந்த காரணத்தால் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

உடனடி நிவாரணத்திற்குச் சில மருந்துகள் (Antihistamines, benzodiazepines, antiemetics) மருத்துவஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையின்றி நீண்ட காலத்திற்கு இம்மருந்துகளை எடுத்துக்கொள்வது, பார்க்கின்சோனிசம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மிக்ககவனம் தேவை. சிலருக்கு, உட்செவி சம்பந்தமான அறுவைசிகிச்சையும் தேவைப்படலாம். மூளை சம்பந்தமான வெர்டிகோவிற்கு, அதன் காரணத்தை அறிந்து, அதற்கேற்றாற்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீண்ட கால வெர்டிகோவிற்கு, சில இயன்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும், உட்செவி புனரமைப்புப் பயிற்சிகளும் (Vestibular Rehabilitation Therapy) வெர்டிகோவிலிருந்து விடுதலை பெற உதவக்கூடும். இவையும் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, பொதுவான வெர்டிகோவை பொருத்தவரை தானாகவே சரியாகி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால், எந்தவகையான வெர்டிகோவாக இருந்தாலும் அதற்கு உரிய நவீன சிகிச்சைகள் உள்ளதால், வெர்டிகோ குறித்த அச்சமோ, மயக்கமோ, கலக்கமோ தேவையில்லை.

தொகுப்பு:- லயா