Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண் பரிசோதனை மூலம் சர்க்கரை நோயை அறியலாம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இதுவரை ரத்தப் பரிசோதனை மூலமாக மட்டுமே நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாற்றாக கண்ணின் விழித்திரை புகைப்படத்தை பயன்படுத்தி, ரத்தம் எடுக்காமலேயே நீரிழிவு நோயைக் கண்டறியும் புதிய ஏஐகண் ஸ்கேன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி. மோகன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் டயாபெடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF), மங்களூருவைச் சேர்ந்த ஏனபோயா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ரத்த பரிசோதனை மூலமாக இல்லாமல் ஏஐகண் ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் நீரிழிவு நோயைக் கண்டறியும் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம், இந்தியர்களிடம் ரத்தப் பரிசோதனை செய்யாமல், கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை மிகத் துல்லியமாகப் புகைப்படம் எடுப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கண்டறிய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விழித்திரை என்பது உடலில் அறுவைசிகிச்சையோ, உடலுக்குள் கருவிகளை செலுத்தாமலோ ரத்த நாளங்களை நேரடியாகக் காணக்கூடிய ஒரே பகுதி என்பதால், விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.இந்த ஆய்வின் முடிவுகள், கடந்த மாதம் 23ஆம் தேதி Diabetes Technology & Therapeutics என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன என்றார். மேலும், இது குறித்து இந்த ஆய்வில் பங்கு கொண்ட மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டவை:

ஆய்வின் முதன்மை ஆசிரியரும், ஏனபோயா பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவப் பேராசிரியருமான மருத்துவர் சௌஜன்யா கவுப், கூறியதாவது “கண்கள் உடலின் மற்ற பகுதிகளைப் பார்க்கும் ஒரு ஜன்னல் போன்றது. அந்த ஜன்னலில் தெரியும் மிகச் சிறிய மாற்றங்களைக் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகத் துல்லியமாக கண்டறிந்து, ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா இல்லையா என்பதை தெளிவாக சொல்ல முடியும்,” என்றார்.

இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், எமோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான மருத்துவர் சுதேஷ்னா சில்கர், “சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களின் விழித்திரைப் புகைப்படங்களை பயன்படுத்தி, ரத்த நாளங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏஐ மூலம் கண்டறிய பயிற்சி அளித்துள்ளோம். ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து 95 சதவீத துல்லியத்துடன் நீரிழிவு நோயை கண்டறிய முடிகிறது,” என தெரிவித்தார்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் மருத்துவ விழித்திரை மற்றும் கண்ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் மருத்துவர் ஆர். ராஜலட்சுமி கூறுகையில், “வழக்கமான கண் பரிசோதனையின் போது எடுக்கப்படும் விழித்திரைப் படங்களைத்தான் இந்த ஆய்வில் பயன்படுத்தினோம். சர்க்கரை நோய் முழுமையாக உருவாகும் முன்பே, கண் ரத்த நாளங்களில் நுணுக்கமான மாற்றங்கள் தோன்றத் தொடங்குவதை கண்டறிந்தோம்,” என்றார்.

இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் தலைவர் டாக்டர் வி. மோகன், “இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு தங்களுக்கு நோய் இருப்பதே தெரியாமல் உள்ளது. விழித்திரைப் புகைப்படங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிய முடிந்தால், பொதுமக்கள் பரிசோதனைக்கு இது ஒரு எளிய, பயனுள்ள வழியாக அமையும்,” என்றார்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ப்ரீ-டயாபெடீஸ் நிலையையும் கண்டறிய முடியும். இதனால், வாழ்க்கை முறையில் முன்கூட்டியே மாற்றங்களை செய்து, நீரிழிவு நோய் வருவதைத் தடுக்க முடியும். ஊசி குத்தாமலும், ரத்தம் எடுக்காமலும் சர்க்கரை நோயை கண்டறியும் இந்த புதிய ஏஐ கண் ஸ்கேன் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் பொதுமக்கள் மருத்துவத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு: சர்க்கரை நோய் மருத்துவர் வி.மோகன்