நன்றி குங்குமம் டாக்டர்
உடற்பயிற்சியை துவங்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு, அவரின் அறிவுரைகளுடன் உடற்பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பும் இருந்தால் எவ்வித சிக்கலும் இல்லாமல் உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.ஒவ்வொரு உடற்பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் சர்க்கரையின் அளவை ஏற்றவும் இறக்கவும் செய்யலாம். எனவே, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் நீரிழிவு நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை மற்றும் அழுத்தத்தின் அளவுகளைக் கண்காணித்துக்கொண்டால், உடலின் தன்மையை எளிதில் அறிந்துகொள்ள உதவும்.
முதல் வகை நீரிழிவு நோயாளிகள், சிறுநீர் மற்றும் ரத்தத்தில் “கீட்டோன்” அளவு அதிகமாக இருக்கும்போது உடற்பயிற்சியைத் தவிர்க்கவேண்டும். சாதாரண மனிதர்களின் உடலில், உடற்பயிற்சியின்போது சுரக்கும் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுவதுபோல் முதல்நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுவதில்லை.முதல் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசிமூலம் தசைக்குள் செலுத்தப்படுவதால், கல்லீரல் உற்பத்தி குறைவாகவே இருப்பதுடன், தசைகளினால் உட்கிரகித்து பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் அதிகரிக்கிறது. இதனாலேயே, இவர்களுக்கு உடற்பயிற்சியின்போது, ரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது. நரம்புத் தளர்ச்சி ஏதேனும் இருந்தால் இந்த நிலை மேலும் மோசமாகும். அவர்கள் மயக்கநிலைக்கு வருவது அவர்களுக்கே தெரியாமல் போய்விடும்.
இன்சுலின் அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு உடற்பயிற்சியின்போது, திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடுவதும் உண்டு. இதனால் அவர்கள் கார்போஹைடிரேட் அளவை சமன்படுத்துமளவிற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு, உடற்பயிற்சிக்குப் பின்னர், சர்க்கரை அளவு குறைவது பொதுவானது. இதற்கான முன்னெச்சரிக்கை எதுவும் தேவையில்லை.
உடற்பயிற்சி முடிந்து பல மணி நேரங்களுக்குப் பின்னரும் மிதமான தலைவலி அல்லது தலை சுற்றல், மயக்கம், வேகமான இதயத்துடிப்பு, முகவாய், கை, மேல்புற முதுகு வலி, குமட்டல், மூச்சு விடுவதில் சிரமம், திடீரென்று உடல் சோர்வு, வழக்கத்திற்கு மாறான மயக்கநிலை அல்லது தூக்கநிலை என இயல்புக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் தாமதிக்காமல், மருத்துவரை அணுக வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளின் ரத்தசர்க்கரை அளவு 300 மி.கிஃடெசி லிட்டருக்கும் அதிகமாக இருந்தால், உடலில் வேறு ஏதேனும் நோயும், சோர்வும் இருந்தால், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், கால்களில் சுருக்கென்று குத்தும் வலி இருந்தால், உணர்ச்சியற்ற அல்லது ‘மரத்துப்போதல்’ நிலை கால்கள் மற்றும் கைகளில் இருந்தால், மாத்திரைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
தொகுப்பு:- ப.வண்டார்குழலி, உணவியல் நிபுணர்


