நன்றி குங்குமம் தோழி
முதல் குழந்தை பிறந்து அடுத்தக் குழந்தைக்கு ஒரு தம்பதியர் தயாராகி, அதன் பின்னும் குறைந்தது இரண்டு முதல் மூன்று வருடங்கள் கருத்தரிக்கத் தாமதமாகிறது. இது இன்றைக்கு பொதுவான ஒரு விஷயமாக பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், உண்மையில் ஏன் இவ்வாறு தாமதமாகிறது? அதற்கான தடுப்பு வழிகள் என்ன? இவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது என்பது குறித்தும் அறிய வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தக்
கட்டுரை.
காரணங்கள்...
* கர்ப்ப காலத்தில் இருந்தே அதிகரிக்கும் உடற்பருமன்.
* ஹார்மோன்கள் சமச்சீரின்மை.
* ஊட்டச்சத்துக் குறைபாடு.
* ஆண்கள் மது அருந்துவது, அதிக புகை பிடிப்பது.
* பணி, குழந்தை என இரு சவால்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பதால் போதிய தூக்கம் இல்லாமல் இருப்பது.
விளையும் விளைவுகள்...
பி.சி.ஓ.டி., முறையற்ற மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை மற்றும் விந்தணுவின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவது, கொழுப்பு படிந்த கல்லீரல் (Fatty Liver), நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பது, ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகமாவது (Glucose Spike), அதிகரித்த ரத்தக் கொழுப்பின் அளவு, மன அழுத்தம், இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் (Cravings) போன்ற பல விளைவுகள் நிகழலாம். தாய்ப்பால் கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் இவை நிகழ வாய்ப்புள்ளது.
தடுக்கும் வழிமுறைகள்...
* போதிய நேரம் தூங்குவது.
* போதுமான நீர் அருந்துவது.
* ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் எடுத்துக் கொள்வது.
* உடற்பயிற்சிகளை தினமும் செய்து வருவது.
* குழந்தை பிறந்த ஆரம்பம் முதலே அமர்ந்த இடத்திலேயே இல்லாமல் அவ்வப்போது நடப்பது, சிறு சிறு வேலைகள் செய்வது.
* மது, புகைப்பழக்கத்தை நிறுத்துவது அல்லது குறைத்துக் கொள்வது.
* உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை குறைத்துக் கொள்வது.
* எடை குறைக்க வேண்டும் என நினைத்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் எடை குறைப்பதை விடுத்து, அருகிலுள்ள இயன்முறை மருத்துவரிடம் ஆலோசித்து முறையாக உடல் எடையை குறைப்பது.
* குழந்தை இருந்தாலும் நேரம் ஒதுக்கி தனக்கான வேலைகளில் (Me time) ஈடுபட்டு மன அமைதி அடைவது.
* முதல் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் தாய்ப்பால் கொடுத்து, அதன் பலனாக இயற்கையாகவே உடல் எடை குறைப்பது.
இயன்முறை மருத்துவத்தின் பங்கு...
சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என எதுவாக இருந்தாலும் குழந்தை பிறந்த பின்பு மூன்று மாதங்கள் கழித்து அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகி போதுமான உடற்பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம். தமக்குத் தேவையான உடற்பயிற்சிகள் என்ன, நம் உடல் எடை எந்த எண்ணிக்கையில் பராமரிக்கப்பட வேண்டும், அதேநேரம் குழந்தைக்கு போதுமான கொழுப்புச்சத்து நம் உடம்பில் இருக்கிறதா என்பதனை எல்லாம் ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு இயன்முறை மருத்துவர் உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர். இதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமலும், அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் நம்மால் இயங்க முடிகிறது.
‘நச்’ உண்மைகள்...
*குழந்தை பிறந்த பின்பு சோம்பலாக இல்லாமல் ‘கம்ஃபர்ட் ஸோனில்’ (Comfort Zone) இருந்து வெளிவந்து சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் ஈடுபட்டாலே போதும், நம் உடல் எடையை எளிதாய் பராமரிக்க முடியும்.
* தனக்கும் குழந்தைக்கும் சேர்த்து சத்தான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது அவசியம்.
* முறையான உடல் எடை குறைப்பினை செய்வது அவசியம்.
* தினசரி உடற்பயிற்சிகள் செய்து வருவது அவசியம்.
* உணவின் மீதும், பழக்க வழக்கங்கள் மீதும் கட்டுப்பாடு இருத்தல் அவசியம்.
மொத்தத்தில், எப்போதுமே ஆரோக்கியமான வாழ்வியலை நாம் விடாமல் கடைபிடிக்கும் போது இவ்வகையான பிரச்னைகளை எளிதில் தடுத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே, ஒவ்வொரு தம்பதியரும் முதல் குழந்தைக்குப் பிறகு அதிக ஓய்வு எடுப்பது, சுறுசுறுப்பினை குறைத்துக் கொள்வது, கட்டுப்பாடின்றி உணவுகள் உண்பது என இல்லாமல் ஆக்டிவாக இருந்து, உடலை நன்முறையில் பேணி, இரண்டாவது குழந்தையை தாமதமின்றி பெற்றெடுத்து மகிழ்வோம்.
தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்



