நன்றி குங்குமம் டாக்டர்
மனித உடலில் முழங்கால் மூட்டு என்பது உடல் எடையைத் தாங்கும் முக்கியமான மூட்டாகும். நடப்பது, ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அன்றாட செயல்பாடுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது அதிகரிக்கும்போது, தசைகளின் வலிமை குறைவதால் மூட்டில் பிரச்னையை ஏற்படுத்தி நாளடைவில் பலரது வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிடுகிறது.
இந்த நிலையை மாற்றியமைத்து முழங்கால் வலியை போக்குவதோடு முழங்காலின் இயல்பான இயக்கவியலை மீட்டெடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது அமைந்துள்ளது முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவர் வெற்றி குமார், ஒரு வருடத்திற்குள் எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் அமைப்பை பயன்படுத்தி 300-க்கும் மேற்பட்ட முழுமையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து தெற்காசியாவின் முதல் அறுவைசிகிச்சை நிபுணர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர், மூட்டுவலிக்கான காரணங்கள் என்ன.. மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின் நவீன சிகிச்சை முறைகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டது
மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் என்னனென்ன?…
மூட்டுவலி என்பது மிகவும் பொதுவானது. இன்றைய சூழலில் எலும்பியல் மருத்துவ மனைகளில் முதுகு வலிக்கு அடுத்ததாக மூட்டுகளில் வலி என்றுதான் பெரும்பாலான மக்கள் வருகிறார்கள். இதற்கான காரணம் வயதுதான். வயது அதிகரிக்கும்போது, தசைகளின் வலிமை குறைவதோடு, குறிப்பாக இடுப்பு மற்றும் உடலின் மையத் தசைகள் பலவீனமடைவதால், முழங்காலில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, மூட்டுகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு (cartilage) படிப்படியாக தேயத்
தொடங்குகிறது.
மேலும், உடல் பருமனும் முழங்கால் வலியை அதிகரிக்கும் முக்கிய காரணியாகும். உடல் எடை அதிகரிக்கும்போது, முழங்காலின் மீது கூடுதல் சுமை ஏற்பட்டு, மூட்டு தேய்மானம் வேகமாக நடைபெறுகிறது. மேலும், இளம் வயதில் ஏற்பட்ட விளையாட்டு காயங்கள், விபத்துகள் மற்றும் தவறான உட்காரும் பழக்கவழக்கங்களும் பின்னாளில் முழங்கால் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். மூட்டு வலியை பொருத்தவரை ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம், வயதாகும்போது மாதவிடாய் நின்ற நிலையில், எலும்புகளுக்கு பலம் தரும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால், எலும்புகள் பலம் இழந்து மென்மையாகிறது. இதனால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. அதுபோன்றுபெண்கள் பலரும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில்லை. உடற்பருமனும் அவர்களுக்கு மூட்டு வலி ஏற்பட காரணமாகிறது.
மூட்டுவலியை ஆர்த்ரைட்டிஸின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாமா? மூட்டுவலி ஏற்படும்போது எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
ஆஸ்டியோஆர்திரைட்டிஸ் (OA) என்பது மூட்டு தேய்மான நோய், முழங்கால் வலிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் அது மட்டுமே மூட்டுவலிக்கான காரணம் கிடையாது. பொதுவாக மூட்டுவலிக்கான காரணங்கள் என்றால், முழங்கால் மூட்டுகளில் உள்ள மூட்டு கிண்ணத்தில் எலும்பு வலிமை குறைந்து மென்மையாக இருக்கலாம். வீக்கம் இருக்கலாம். இதனாலும் மூட்டில் வலி ஏற்படலாம். ஆனால், இவை குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். அதனால் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்றால், மூட்டில் வலி ஏற்படுகிறது. அது 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்து இருக்கிறது. அதனால், தினசரி வேலைகளில் பாதிப்பு ஏற்படும்போது மருத்துவரை அணுகி என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையிலேயே மருத்துவரை அணுகிவிட்டால் பிரச்னை சிறியதாக இருக்கும்போதே சரி செய்து கொள்ளலாம். இதனால் மூட்டுப் பிரச்னை பெரிதாகாமல் தடுக்கவும் முடியும்.
தற்போது இளம் வயதினரும் மூட்டுவலியால் பாதிக்கப்படுகிறார்களே இது எதனால்?
முழங்கால் வலி என்பது இன்று வயதானவர்களிடம் மட்டுமல்லாமல், இளம் வயதினரிடமும் அதிகரித்து வரும் பொதுவான உடல்நலப் பிரச்னையாகத்தான் உள்ளது. இதற்கு காரணம், வாழ்க்கை முறை மாற்றங்கள், துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை. மேலும், இன்றைய சூழலில் பலரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள், இவர் காலை அலுவலகம் சென்றால் மீண்டும் மாலைதான் வீடு திரும்புகிறார்கள். இதனால், சூரிய ஒளியை இவர்கள் பார்ப்பதே கிடையாது. இதனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதும் மூட்டு வலிக்கு ஒரு காரணமாகிறது. மேலும், அலுவலகத்தில் நிறைய நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
மூட்டு மாற்று அறுவைசிகிச்சை எந்த நிலையில் பரிந்துரைக்கப்படுகிறது? மூட்டு மாற்று அறுவைசிகிச்சை என்பது என்ன?
முழங்கால் மூட்டில் கடுமையான சேதம் ஏற்பட்டு, நடக்க, அமர, வெளியில் செல்ல எல்லாவற்றுக்கும் சிரமம் ஏற்படும்போது உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் பலனளிக்காத நிலைகளில், அறுவைசிகிச்சை
பரிந்துரைக்கப்படுகிறது.
இதை மூட்டு மாற்று அறுவைசிகிச்சை என்று சொல்வதைவிட மூட்டு இம்பிளான்ட் என்று சொல்வதுதான் இன்றைய காலகட்டத்திற்கு சரியாக இருக்கும். முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை (Knee Replacement Surgery) என்பது முழு மூட்டையும் மாற்றுவது அல்ல; மாறாக, சேதமடைந்த பகுதிகளை மட்டும் அகற்றிவிட்டு மேலே ஒரு தொப்பியைப் போன்று செயற்கை மூட்டை பொருத்துவோம். இது உலோகம் மற்றும் சிறப்பு பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு மறுசீரமைக்கும் நவீன முறையாகும்.
தற்போது, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் மிகவும் மேம்பட்டுள்ளன. துல்லியமான செயற்கை மூட்டுகள் மற்றும் மேம்பட்ட மறுவாழ்வு சிகிச்சை முறைகள் காரணமாக, நோயாளிகள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிகிறது. இருப்பினும், அறுவைசிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வது, நீண்டகால வெற்றிக்கு உதவும்.
மூட்டுவலி பிரச்னையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன?
முழங்கால் வலியில் இருந்து தற்காத்துக் கொள்ள, வாழ்க்கைமுறை மாற்றங்கள்
மிகவும் முக்கியமானவை.
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, முழங்காலின் மீது ஏற்படும்
அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
தினமும் 3 முதல் 5 கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது, முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி, மூட்டுகளுக்கு நல்ல ஆதரவை வழங்குகிறது.
சிலர் உணவுமுறையே முழங்கால் வலிக்கு காரணம் என்றும், குறிப்பிட்ட உணவுகள் அதை குணப்படுத்தும் என்றும் நம்புகின்றனர். ஆனால், தற்போதைய மருத்துவ ஆதாரங்களின்படி, உணவுமுறை மட்டுமே இந்த நோயை ஏற்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது. இருப்பினும், உடல் எடையைக் கட்டுப்படுத்தும் சீரான உணவுப் பழக்கம் மிகவும் அவசியமாகும்.
முழங்கால் வலி என்பது வயது முதிர்ச்சியின் இயல்பான விளைவு மட்டுமல்ல. சரியான உடற்பயிற்சி, உடல் எடை கட்டுப்பாடு, ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சைகள் மூலம், பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையைத் தொடர முடியும். முழங்கால் வலியை அலட்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே கவனிப்பது, எதிர்காலத்தில் கடுமையான மூட்டு பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.
தொகுப்பு: - ஸ்ரீ தேவி குமரேசன்



