Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தர்ஷக் கெளடா ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சிங்கப்பெண்ணே தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷக் கெளடா. அவரது நடிப்பு திறமையோடு சேர்ந்து, கட்டுக்கோப்பான உடல் அமைப்பாலும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பு, அவரது ஒழுங்கான வொர்க்அவுட் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் விளைவாகும். இளைஞர்களை கவரும் ஃபிட்னெஸ் ஐகானாக இருக்கும் தர்ஷக்கின் ஃபிட்னஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்

எனது ஃபிட்னெஸ் பயணம் ஒரே நாளில் உருவானதல்ல. தொடர்ந்து கடின உழைப்பும் ஒழுங்கான வாழ்க்கை முறையும்தான் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.தினசரி உடற்பயிற்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஜிம் பயிற்சிகளுடன் கார்டியோ, வெயிட் டிரெயினிங், புஷ்அப்ஸ் மற்றும் புல்அப்ஸ், கோர் ஸ்ட்ரெங்க்த் பயிற்சிகள், ஸ்ட்ரெச்சிங் போன்ற பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்கிறேன். குறிப்பாக உடல் தசைகள் சமநிலையாக வளர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது பயிற்சிகளை தொடங்குவதற்கு முன், காலையில் எழுந்ததும் சிறிது நேர ஓட்டப்பயிற்சி மற்றும் லைட் வார்ம்அப் மூலம் உடலை தயார் செய்த பிறகே தீவிர பயிற்சிகளை மேற்கொள்வேன். குறிப்பாக கை, தோள் மற்றும் மார்பு தசைகளுக்கான பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை ஃபிட்னெஸ் என்பது வெறும் உடல் அழகுக்காக மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் அவசியம் ஆகும். இதனால்தான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சியை நான் ஒருபோதும் தவிர்ப்பதில்லை.

உணவுக் கட்டுப்பாடு

வொர்க்அவுட் மட்டும் போதாது; சரியான உணவுப் பழக்கமும் ஃபிட்னெஸில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், அதிக எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகள், குளிர்பானங்களை நான் தவிர்த்துவிடுவேன். மற்றபடி, புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் போதிய அளவு தண்ணீர் ஆகியவற்றை அவர் உணவில் சேர்த்துக் கொள்கிறேன். உடலுக்குத் தேவையான சத்துக்களை சரியான அளவில் எடுத்துக்கொள்வதே நல்ல ஆரோக்கியத்தின் ரகசியம் ஆகும்.

எனது உணவுப் பட்டியலில் பொதுவாக இடம்பெறும் விஷயங்கள் இவைதான்:

* புரதச்சத்து நிறைந்த முட்டை மற்றும் சிக்கன்

* காய்கறிகள் மற்றும் பழங்கள்

* ஓட்ஸ் மற்றும் முழுதானிய உணவுகள்

* நட்ஸ்கள் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ்

* போதிய அளவு தண்ணீர்

இவை உடலுக்குத் தேவையான சக்தியையும் தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றன. அதுபோன்று சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளையும் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறேன். மேலும், நேரத்திற்கு உணவருந்துவதையும் கடைபிடித்து வருகிறேன். உணவே மருந்து என்று சொல்வார்கள். அதுபோல, ஆரோக்கியமான உணவு பழக்கம் வாழ்க்கையை மாற்றும் என்பதை நான் மிகவும் நம்புகிறேன்.

மன ஆரோக்கியம்

இன்றைய தலைமுறையில் பலர் வேகமான வாழ்க்கை முறையால் ஆரோக்கியத்தை புறக்கணித்து வருகின்றனர். என்னைப் பொருத்தவரை உடல் ஆரோக்கியத்துடன் மன அமைதியும் முக்கியம் ஆகும். அதற்கு, போதிய தூக்கம், நேர்மறை சிந்தனை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவது மிகவும் நல்லது. ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் நல்ல ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்கிறார்.

சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் இவர், “உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடு” என்கிறார்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்