Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. அவளுக்கு அடிக்கடி அம்மைநோய் வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு? - தேவேந்திரவேலன், ஆரணி.

சாதாரணமாக நோய்த்தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. வைரஸ் கிருமிகள் மூலமாகப் பரவும் நோய்கள் சிலவற்றால் சருமத்தில் சிவந்த தடிப்பு, கொப்பளம் ஏற்படலாம் அல்லது சருமம் சிவப்பு நிறத்தில் மாறலாம். பொதுவாக அம்மை வெயில் காலத்தில்தான் அதிகம் பரவும். வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் கொப்பளங்கள், வேனல் கட்டிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அம்மைநோய்க்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மறுபடியும் அம்மை நோய் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வெயில் காலத்தில் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் கொப்பளங்கள் வந்தாலே அது அம்மை என முடிவெடுத்துவிடக் கூடாது. சருமப் பிரச்னையின் காரணமாகவும் சிவந்த திட்டுகளும், முகத்தில் கொப்பளங்களும் வரக்கூடும். மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் போதும். அம்மை என்று நினைத்து நீங்களாக சிகிச்சையில் இறங்க வேண்டாம்.

என் மனைவிக்கு 40 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அரசு ஊழியர். அவள் தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறாள். கேட்டால், தூக்கம் வரவில்லை என்கிறாள். இதற்குக் காரணம் என்ன? - ராஜநாராயணன், தேன்கனிக்கோட்டை.

மன அழுத்தத்தால், இப்படியான தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். நல்ல உறக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதால், இந்தப் பிரச்னையை தட்டிக் கழிக்க வேண்டாம். தூக்கத்துக்கான வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றச் சொல்லுங்கள். உதாரணமாக தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். தூக்கத்துக்கான நேரத்தை நெறிப்படுத்த வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடவேண்டியது அவசியம். இரவு உணவை, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே முடித்துக்கொள்ளவும். படுக்கையில் மொபைல், லேப்டாப், மூக்குக்கண்ணாடி போன்றவை இல்லாமலிருப்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை தூரமாக வைத்துவிடவும்.

தூங்கும்போது, ஒருபக்கமாகச் சாய்ந்து படுக்காமல், முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி மல்லாக்கப் படுப்பது நல்லது. 40 வயது பெண் என்பதால், அவர் தற்போது மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடும். மெனோபாஸ் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக, இந்தக் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புகள் குறையத் தொடங்கும்.

உடலுக்குத் தூக்கத்தை கொடுக்கும் அடிப்படை ஹார்மோன்களான இவை குறைவதால்கூட தூக்கமின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

என் அம்மாவுக்கு வயது 60. அவருடைய கை மற்றும் கால் பகுதிகள் திடீரென சில்லிட்டுப் போகின்றன. அண்மைக்காலமாக, தலைசுற்றுவதாகவும் சொல்கிறார். குறிப்பாக, தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார். ஒருவேளை சர்க்கரைநோயாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தது. எதனால் இப்படி ஏற்படுகிறது? - ரத்தின மூர்த்தி, மேல்மறையூர்.

இது போன்ற நிலையை `கோல்ட் ஃப்ளாஷ்’ (Cold Flash) என்று கூறுவோம். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், இப்படி ஏற்படும். உங்கள் அம்மா, அதீதக் கோபம் அல்லது அதீத சோகம் என எதற்கெடுத்தாலும் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுபவர் என்றால், அவற்றைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள். தினமும் மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். அடிக்கடி இப்படி `கோல்ட் ஃப்ளாஷ்’ ஏற்படுகிறதென்றால், நரம்பு சார்ந்த ஏதேனும் கோளாறு இருக்கலாம்.

எனவே, அது தொடர்பான மருத்துவரை அணுகுங்கள். தலைச்சுற்றல் பிரச்னைக்கும் இதுவே காரணம். தலைச்சுற்றல் சில நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தாலோ, ஏற்கெனவே ஒற்றைத்தலைவலி பிரச்னை இருந்தாலோ, தலைச்சுற்றலின்போது பேச்சு வராமல் இருப்பது அல்லது கண்கள் இருட்டுவது போன்றவை ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்கவும்.

குதிகால் வலிக்குத் தீர்வு என்ன?- கே.எஸ்.ராஜாராமன், திருமலையூர்

குதிகால் பகுதியில் உள்ள இரண்டு எலும்புகள் இணையும் பகுதியில் ஏற்படும் உராய்வினால், இந்த வலி ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த எலும்புகள் உராய்வதால், அந்த இடத்தில் புதிதாக எலும்பு தோன்றும். உங்களுக்கு போடப்பட்ட ஊசி சிறிது காலத்திற்கு உங்களின் வலியை குறைக்கும். மாறாக வலியை சுத்தமாக நீக்க இரண்டு அல்லது மூன்று ஊசி போட வேண்டியதிருக்கும்.

மறுபடியும் வலி வராமல் தடுக்க

*காலை மற்றும் இரவு நேரங்களில் பாதங்களை சுடுதண்ணீரில் சிறிது நேரம் வைக்கலாம்.

*உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.

*வெறுங்காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

*காலுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும்.

*உடற்பயிற்சி அவசியம் (குதிகால்களையும், கால் விரல்களையும் மாற்றி மாற்றி செய்வது நல்லது).

*புதிதாக எலும்பு வளர்ந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாள்கள் வரையில் பிரீயட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு?

- கே.அமுதா, கோவை.

முதலில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்து பீரியட்ஸ் சரியாக வராததன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் இரண்டு மாதங்கள் வரையில் பிரீயட்ஸ் வராமல் இருக்கலாம். அதற்கு மேல் வரவில்லை எனில், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உடனடியாக மாத்திரை உட்கொண்டு பிரீயட்ஸ் வரவைத்துவிட வேண்டும்.

நான்கு, ஐந்து மாதங்கள் வரையெல்லாம் காத்திருக்கக் கூடாது. பதினைந்து நாட்கள் வரையில் பிரீயட்ஸ் வருகிறதெனில், மருத்துவரை அணுகி ரத்தப்போக்கை நிறுத்த மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதீத ரத்தப் போக்கினாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.உடனடியாக உங்கள் கைனகாலஜி மருத்துவரை நாடி அவசியமான பரிசோதனைகள் செய்துகொண்டு சிசிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது.

தொகுப்பு: -மருத்துவப் பேராசிரியர் முத்தையா