Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குழந்தைகளின் புத்தகப்பை சுமை:

நன்றி குங்குமம் டாக்டர்

பெற்றோர் கவனத்திற்கு!

ஒவ்வொரு நாளும் காலையில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்ள வீடுகளில் நடக்கும் வழக்கமான உரையாடல்கள் இதுவாகத்தான் இருக்கும், “புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டாயா?” “சாப்பாட்டு டப்பா எடுத்தாயா?”“தண்ணீர் பாட்டில் எடுத்தாயா என்பது போன்றுதான் இருக்கும்.

ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி ஒன்று உள்ளது. அது, உங்கள் குழந்தையின் பள்ளிப் பையை எப்போதாவது எடைபோட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்புகிறார் முதுகுத்தண்டு மற்றும் ஸ்கோலியோசிஸ் அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவர் சசிதரன் இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

பெரும்பாலான பெற்றோருக்குத் தங்கள் குழந்தையின் எடை, உயரம், காலணி அளவு மற்றும் சீருடை அளவு தெரியும். ஆனால் பள்ளிக்கு செல்லும் நமது குழந்தை தனது முதுகில் எவ்வளவு எடையைச் சுமக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பள்ளிப்பையின் எடை ஒரு முக்கிய கவலையாக மாறிவரும் இந்த நேரத்தில், வீட்டில் செய்யும் ஒரு எளிய பரிசோதனை பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையை முதலில் எடைபோடுங்கள், பின்னர் பொருட்கள் நிரம்பிய அவர்களது பள்ளிப் பையை எடைபோடுங்கள். அந்த முடிவு உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம்.

10% பரிசோதனை

இந்திய அரசின் 2020 பள்ளிப் பைக் கொள்கைப்படி, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பள்ளிப் பையின் எடை அவர்களின் உடல் எடையில் 10% ஆக மட்டுமே இருக்க வேண்டும். மேலும், மழலையர் பள்ளி குழந்தைகளுக்குப் பள்ளிப் பை இருக்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தையின் எடை 25 கிலோ என்றால், அதில் 10% என்பது 2.5 கிலோ ஆகும். இப்போது பொருட்கள் நிரம்பிய உங்கள் குழந்தையின் பள்ளிப் பையை எடை அளவிடும் இயந்திரத்தில் வையுங்கள்.

பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சாப்பாட்டு டப்பா, தண்ணீர் பாட்டில், பென்சில் பாக்ஸ், வரைபடப் பொருட்கள், விளையாட்டு உடைகள் மற்றும் ஒர்க் ஷீட்கள் என அனைத்தும் சேர்ந்து எடையை எளிதாகக் கூட்டிவிடும். சில நேரங்களில், பார்ப்பதற்குச் சிறியதாகத் தெரியும் பை கூட 4 கிலோ அல்லது அதற்கும் மேல் எடையிருக்கலாம்.

70 கிலோ எடையுள்ள ஒரு பெரியவர் தினமும் 14 கிலோ எடையைத் தன் முதுகில் சுமப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அது வசதியாக இருக்கும் என்று நாம் நினைப்போமா? கண்டிப்பாக இல்லை. அப்படி இருக்கையில், வளரும் ஒரு குழந்தை மட்டும் இதற்கு ‘‘பழகிக்கொள்ள வேண்டும்” என்று நாம் எதிர்பார்க்க வேண்டும்?

அதே நேரத்தில், ஒரு முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணராக ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: பள்ளிப்பை ஒரு குழந்தையின் முதுகுத்தண்டைச் சேதப்படுத்திவிடாது. அதனால், பெற்றோர் இதுபற்றித் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். அதேசமயம், இன்றைய குழந்தைகளின் சாதாரண ஒரு நாளைப்பற்றி யோசித்துப் பாருங்கள்.

அவர்கள் காலையில் எழுந்து கார் அல்லது பள்ளி வேனில் ஏறுகிறார்கள். பயணத்தின்போது உட்கார்ந்திருக்கிறார்கள், வகுப்பில் உட்கார்ந்திருக்கிறார்கள், படிக்கும்போது உட்கார்ந்திருக்கிறார்கள், வீடு திரும்பி வீட்டுப்பாடம் அல்லது டியூஷனுக்காக மீண்டும் உட்கார்ந்திருக்கிறார்கள். அதன்பிறகு டிவி, மொபைல் அல்லது கம்ப்யூட்டர் திரைக்கு முன்னால் அதிக நேரம் அமர்ந்தபடியே செலவிடுகிறார்கள்.

முக்கியமான கேள்வி இதுதான்: அவர்கள் உண்மையில் ஓடியாடி விளையாட எவ்வளவு நேரம் செலவிட்டார்கள்?

ஓடுவது எங்கே? சைக்கிள் ஓட்டுவது எங்கே? மரம் ஏறுவது எங்கே? மைதானத்தில் விளையாடுவது எங்கே? ஒரு காலத்தில் குழந்தைகள் இயல்பாகவே விளையாடிய அந்த எளிமையான, எந்தக் கட்டுப்பாடும் இல்லாத விளையாட்டுகள் எல்லாம் எங்கே போனது?

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தினமும் சராசரியாகக் குறைந்தது 60 நிமிடங்களாவது மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். மேலும், வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். எனவே, ஒரு குழந்தையின் முதுகுத்தண்டைப் பற்றிப் பேசும்போது, நாம் பள்ளிப் பையின் எடையை மட்டுமே பார்க்கக் கூடாது. நாம் கேட்க வேண்டிய இன்னொரு கேள்வியும் உள்ளது:

பையைச் சுமக்கும் அளவுக்குக் குழந்தை உடல்ரீதியாக வலுவாக இருக்கிறதா?

ஓடி, விளையாடி, குதித்து, நல்ல தசை பலத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு குழந்தையின் உடல் திறனும், நாளின் பெரும்பகுதியை உட்கார்ந்தபடியே கழிக்கும் ஒரு குழந்தையின் உடல் திறனும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.ஒருவேளை நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, ”என் குழந்தையின் பள்ளிப்பை மிகவும் கனமாக உள்ளதா?” என்பது மட்டுமல்ல, ”என் குழந்தையின் நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே முடங்கிவிடுகிறதா?” என்பதும் தான்.

கனமான பை எப்போதும் பார்ப்பதற்கு கனமாகத் தெரிவதில்லை. அதனால், உங்கள் குழந்தையைப் பையை மாட்டிக்கொண்டு சாதாரணமாக நடக்கச் சொல்லுங்கள். அவர்களைப்

பக்கவாட்டிலிருந்து கவனியுங்கள்.அவர்கள் முன்னோக்கி வளைந்து நடக்கிறார்களா? பையின் தோள்பட்டை வார் நழுவுகிறதா? பையின் இரண்டு வார்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்களா? அவர்களின் தோள்பட்டைகள் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறதா? பையை மாட்டிக்கொள்ளும்போது குழந்தை சிரமப்படுகிறதா? பையினால் முதுகு வலிக்கிறது என்று சொல்கிறார்களா? பையை எப்போதும் ஒரு பக்க தோளில் மட்டும் மாட்டிக் கொள்ளும் பழக்கம் அவர்களுக்கு உள்ளதா? மேற்கண்ட இந்த எளிய விஷயங்கள் நமக்கு பல உண்மைகளை உணர்த்தும்.

ஒரு நல்ல பள்ளிப் பை என்பது எடை குறைவானதாக இருக்க வேண்டும். அதில் மென்மையான, தேவைக்கேற்ப அளவை மாற்றிக் கொள்ளக்கூடிய இரண்டு வார்கள் இருக்க வேண்டும். அது பையின் எடையை இரண்டு தோள்களிலும் சரிசமமாகப் பிரித்து வசதியாகச் சுமக்க உதவ வேண்டும்.

ஆனால் நான் பெற்றோர்களுக்குச் சொல்லும் மற்றொரு எளிய விதி உள்ளது:

சிறந்த பள்ளிப் பை என்பது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைக்குத் தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு செல்வதுதான் சிறந்த பையாகும். அதுபோன்று வாரத்திற்கு ஒரு முறை, பள்ளிப் பையில் உள்ள அனைத்தையும் வெளியே எடுங்கள்.அதில் மூன்று பழைய நோட்டுப் புத்தகங்கள், நேற்றைய ஒர்க் ஷீட்கள், ஒரு கூடுதல் தண்ணீர் பாட்டில், மறக்கப்பட்டுப் போன சாப்பாட்டு டப்பா, இனி தேவைப்படாத புத்தகங்கள் மற்றும் ஒரு வகுப்பறைக்கே பென்சில் கொடுக்கக் கூடிய அளவுக்கு பெரிய பென்சில் பாக்ஸ் ஆகியவற்றை நீங்கள் கண்டுபிடிக்கலாம். அதன்பிறகு உங்கள் குழந்தையிடம் கேளுங்கள்.

கவனிக்க வேண்டியவை

குழந்தைக்கு முதுகு வலிக்கிறது என்று சொல்லும்போது, பெற்றோர் பதறவும் கூடாது, அதே சமயம் குழந்தையின் புகாரை அலட்சியப்படுத்தவும் கூடாது.நீண்ட பள்ளி நாளுக்குப் பிறகு குழந்தைகள் சோர்வடையலாம். எப்போதாவது தோள்பட்டை வலிக்கிறது என்று அவர்கள் சொல்வதால், அவர்களுக்கு முதுகுத்தண்டு பிரச்னை இருக்கிறது என்று அர்த்தமல்ல. இருப்பினும், தொடர்ந்து அல்லது அடிக்கடி ஏற்படும் வலியை ”வளரும் பருவத்தில் வரும் வலிதானே” என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு குழந்தை அடிக்கடி முதுகு அல்லது கழுத்து வலிப்பதாகக் கூறினால், குறிப்பாக அந்த வலி அவர்களின் பள்ளிப் படிப்பு, விளையாட்டு அல்லது தூக்கத்தைப் பாதித்தால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.அத்துடன் உடல் பலவீனம், மரத்துப்போதல், நடப்பதில் சிரமம், காய்ச்சல், காரணமில்லாமல் எடை குறைதல் அல்லது வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளுடன் வலி இருந்தால், மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் முக்கியம்.

“நாளைக்கு இதையெல்லாம் நீ நிஜமாகவே எடுத்துச் செல்ல வேண்டுமா?”

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 5 நிமிடங்களை இதற்காக ஒதுக்குங்கள். ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் இது பள்ளிப்பையின் எடையைக் குறைத்துவிடும். மிக முக்கியமாக, இந்தப் பொறுப்பைக் குழந்தைகளிடமே ஒப்படையுங்கள். எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைத் திட்டமிடக் கற்றுக்கொள்வது ஒரு சிறந்த வாழ்க்கை முறையாகும்.

டிராலி பைகள் பயன்படுத்தலாமா?

பல பெற்றோர் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு, பை கனமாக இருப்பதால், டிராலி பையை (சக்கரம் வைத்த பை) பயன்படுத்தலாமா என்று. ஆனால் சக்கரங்கள் இருப்பதால் மட்டுமே ஒரு பள்ளிப் பை சிறந்ததாக மாறிவிடாது.தட்டையான தரையில் டிராலி பையை இழுத்துச் செல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தை படிக்கட்டுகளில் ஏறும்போது என்ன நடக்கும்? மேடு பள்ளமான இடம், கூட்டமான நடைபாதை அல்லது பையைத் தூக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது குழந்தை என்ன செய்யும்?

இந்திய அரசின் பள்ளிப்பைக் கொள்கையும், பள்ளிகளில் சக்கரங்கள் கொண்ட பைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது. இதற்கு, பையின் எடை குறைவானதாக இருப்பதே சிறந்த தீர்வாகும்.

பெற்றோருக்கான முக்கியமான செய்தி இதுதான்

குழந்தைக்கு என்ன பிரச்னை என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள், அதே சமயம் அவர்கள் தொடர்ந்து வலிப்பதாகச் சொன்னால் அதை அலட்சியமும் செய்யாதீர்கள்.

நாளை காலை, உங்கள் குழந்தை பள்ளிக்குக் கிளம்பும் முன், குழந்தையை எடைபோடுங்கள்; பிறகு முழுமையாகப் பொருட்கள் நிரப்பப்பட்ட பள்ளிப் பையையும் எடைபோடுங்கள். பையின் எடை குழந்தையின் உடல் எடையில் 10% அளவில் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். இரண்டு தோள்பட்டை வார்களையும் சரிபார்த்து, குழந்தை பையை வசதியாகச் சுமக்கிறதா என்பதை

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்றைய தினத்திற்குத் தேவையில்லாத பொருட்களைப் பையிலிருந்து எடுத்துவிடுங்கள்.பையைச் சுமந்துகொண்டு நடக்கும்போது உங்கள் குழந்தையின் உடல் அமைப்பைக் (posture) கவனியுங்கள்.

அதுபோன்று குழந்தை தினமும் ஓடியாடி எவ்வளவு நேரம் விளையாடுகிறது என்பதை கவனியுங்கள்.குழந்தைகளின் முதுகுத்தண்டைப் பாதுகாப்பது என்பது அவர்கள் சுமக்கும் எடையைக் குறைப்பது மட்டுமல்ல. அவர்கள் உடலுக்குப் போதுமான அசைவு இருக்கிறதா (physical activity) என்பதை உறுதி செய்வதும் கூட.

நம் குழந்தைகளைப் படிப்பில் கெட்டிக்காரர்களாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தும் நாம், சில நேரங்களில் அவர்களை உடல்ரீதியாக வலுவாக்க மறந்துவிடுகிறோம். எனவே, குழந்தையின் பள்ளிப்பையின் எடையில் இனியாவது கவனம் செலுத்துங்கள். மேலும் குழந்தைகளை ஓடியாடி, குதித்து, மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் வலுவான தசைகளையும் ஆரோக்கியமான எலும்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு - ஸ்ரீ தேவிகுமரேசன்