Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குழந்தைகளின் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘குழந்தைகளின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சி மூன்று வயது முதல் ஒன்பது வயது வரை மிகச் சிறப்பாக இருக்கும். அந்த நேரத்தில் வழங்கப்படும் பயிற்சி அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்’’ என்கிறார் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சியாளரான அகிலாண்டேஸ்வரி. வடசென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் இதற்கென ‘ஹாப்பி கிட்ஸ்’ பயிற்சி மையத்தினை நிர்வகித்து வரும் இவர், அங்கு சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சியினை அளித்து வருகிறார். ஸ்கில் டிரைனிங் பயிற்சி கொடுத்து சாதனையாளராக பல குழந்தைகளை மாற்றி வருகிறார். குழந்தைகளுக்கான ஆரம்பகட்ட பிரச்னைகள் முதல் அவர்களது கல்வி மற்றும் பயிற்சி முறைகள் குறித்து பகிர்ந்தார்.

உங்களை பற்றி...

சிறுவயது முதலே எனக்கு கற்பித்தலில் ஆர்வம் இருந்தது. நான் M.Com , M.Ed முடித்திருக்கிறேன். பிஎட் படிப்பில் ஸ்பெஷல் எஜுகேஷன் படித்தேன். அதில் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான கற்பித்தல் பயிற்சியினை மேற்கொண்டேன். மேலும், ஆட்டிஸம் குறைபாடுக்கான பயிற்சி முறைகளும் எடுத்தேன். அதன் பிறகு ஸ்கில் டிரைனிங் ப்ரோக்ராம் பற்றி அறிந்து கொண்டேன்.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவது, கவனக்குவியலை ஒருங்கிணைப்பது மற்றும் அவர்களின் தனித்திறமையினை மேம்படுத்துவது என அனைத்தும் தெரிந்து கொண்டேன். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது மட்டுமில்லாமல், அவர்களின் அசாதாரணமான பிரச்னையான செல்ஃபோன் பயன்பாட்டினை தவிர்த்து சாதனையாளராக மாற்றுவதே எனது முக்கிய பணியாக மாறிவிட்டது. இதற்கென பயிற்சி மையத்தினை அமைத்து குழந்தைகளுக்கு பயிற்சிகளை அளிக்கிறேன்.

பெண் தொழில்முனைவோர்...

ஆர்வமுள்ள பெண்களுக்கு இதற்கான பயிற்சிகளை அளித்து அவர்களையும் பயிற்சியாளராக மாற்றி வருகிறோம். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்தப் பயிற்சியினை முறையாக கற்றுக் கொண்டு தற்போது வேலை வாய்ப்பினை பெற்று வருவதோடு, சொந்தமாக பயிற்சி மையம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர் பயிற்சி முடித்த பெண்களும் இங்கு பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு எங்களின் மழலையர் பள்ளியில் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகிறோம்.

குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி...

குழந்தை பிறந்ததும் அதன் ஒவ்வொரு படி நிலையில் அவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என கவனிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பல பிரச்னைகளை சரி செய்து விடலாம். சிறிய ரக குறைபாடுகளை கற்பித்தலின் மூலமாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதிக குறைபாடுகள் இருந்தால் அதற்கென பிரத்யேக மையங்கள் உள்ளன. அங்கு ஆலோசனை பெற உதவுகிறோம். குழந்தைகளின் பிரச்னைகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் அதனை கையாள்வது சுலபம். இரண்டு வயது குழந்தைக்கு பேச்சுத்திறன், நடத்தை குறித்த வேறுபாடுகள் மற்றும் ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்றவற்றை மருத்துவரின் அறிவுரைக்குப் பிறகு நாங்களே கையாள்கிறோம். இதற்கான தனிப்பட்ட பயிற்சி எடுத்த ஆசிரியர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

ஸ்கில் டிரைனிங்...

கற்றலை மேம்படுத்த, கவனச்சிதறலை குறைக்க, கற்றல் குறைபாடுகளை களைய, அவர்களிடம் இருக்கும் பல்திறன்களை வெளிக்கொண்டு வர தனிப்பட்ட பயிற்சிகளை அளிக்கிறோம். அதில் ஒன்றுதான் மூளை நரம்புகளை தூண்டும் பயிற்சி. இது ஒரு வகையான மனப்பயிற்சி. குழந்தை வளரும் போது அவர்களின் மூளை செல்களும் வளரும். அப்போது பயிற்சி அளித்தால் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக மாறும். மூன்று முதல் பனிரெண்டு வயது வரை இப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதன் மூலம் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படும். மேலும், சாதனை செய்ய விரும்பும் குழந்தைகளை ஊக்குவிக்கிறோம். மலேசியாவில் க்யூப்ஸ் மூலமாக மலேசியா மற்றும் இந்திய கொடிகளை வடிவமைத்து எங்க குழந்தைகள் சாதனை செய்தார்கள்.

இன்றைய குழந்தைகளின் தலையாய பிரச்னை செல்போன். அதன் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதுதான் எங்களின் டாஸ்க். குழந்தைகளுக்கு சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்ய சொல்லலாம். தோட்ட வேலையில் ஈடுபாடு இருந்தால் அதை கற்றுத் தரலாம். புதிய விஷயங்களை அவர்களை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கலாம். அதிகம் செல்போன் பயன்பாடு அவர்களின் நினைவாற்றலை குறைக்க செய்யும். குழந்தைகளின் விருப்பத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான பயிற்சியினை அளித்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்கிறார் சிறப்பு பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்