Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தை நலம்

நன்றி குங்குமம் டாக்டர்

கவனம் தேவை!

குழந்தைகள் நம் கண்களை போன்றவர்கள் அவர்களை கண் இமைக்காமல் பாதுகாத்து வளர்க்கும்போதும் சில தருணங்களில் எதிர்பாராதவிதமாக அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. எனவே, பெற்றோர்கள் மிக மிக கவனமாக குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும். பெற்றோர் அதிகம் அறிந்திராத சில ஆபத்துக் காரணிகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி.

1 முதல் 3 வயதிலான குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். அந்தவகையில், சின்னது சின்ன அளவிலான பொருட்கள், வட்ட வடிவிலான பொருட்கள், வீட்டில் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்கள், நாணயங்கள், சில வகையான உணவுப் பொருட்கள் ஆகியவை குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. இதுபோன்ற பொருட்களை விழுங்கும்போது தவறுதலாக மூச்சுக் குழாயினுள் சென்று அடைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

இந்த வயதில் குழந்தைகளுக்கு பொருட்களை வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தப்பருவத்தில் அவர்களுக்கு விழுங்கும் தன்மையும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. இதனால் அவர்கள் வாயில் இருக்கும் பொருள் தவறுதலாக மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால் நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு வகைகளில் ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை பற்றி அறிந்து கொள்வது குழந்தைகளின் உயிரைக் காப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கு கவனத்துடன் கொடுக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் பற்றி பார்ப்போம்.

*சின்னச் சின்ன வட்டவடிவமானஉணவுகள்

*வேர்க்கடலை

*பொட்டுக்கடலை

*நட்ஸ் வகைகள்

*தேங்காய் துண்டுகள்

*சிக்கன் துண்டுகள்

*மீன் முட்கள்

குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பொருட்களை அவர்கள் பாதுகாப்பாக உண்ணும் விதமாக மாவுப் பதத்தில் தயாரித்து கொடுப்பது நலம் பயக்கும்.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டியவை

*பட்டன்

*பேட்டரி

*காந்தப் பொருட்கள்

விளையாட்டுப் பொருட்களில் கூர்மையான பகுதி உடையவை.

சிறிய அளவிலான வட்ட வடிவிலான விளையாட்டுப் பொருட்கள்

*பலூன்கள்

*நாணயங்கள்

ஆகியவை ஆபத்தை விளைவிக்கக்கூடியதால் அவற்றை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய விஷயங்கள்

*மருந்து, மாத்திரைகள்

*மண்ணெண்ணெய்

*சுடுதண்ணீர்

*வடித்த கஞ்சி

*தண்ணீர் தொட்டிகள்

இதுபோன்ற குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை குழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு தள்ளி வைப்பதும் அவசியமாகும்.

அறிகுறிகள்

குழந்தைகளின் மூச்சுக்குழாயில் பொருட்கள் சிக்கினால் அவர்களுக்கு அதிகப்படியான இருமல், வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்படலாம்.ஒரு சில சமயங்களில் குழந்தை ஏதாவது சிறிய பொருளை விழுங்கிய ஓரிரு நாட்கள் கழித்துக் கூட உடல் உபாதைகள் தோன்றலாம். குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டாலோ, மூச்சுக் குழாயில் பொருட்கள் சிக்கிக் கொண்டாலோ தாங்களாக கை வைத்தியம் செய்து கொண்டிருக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பெற்றோருக்கு இதுபோன்ற ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். பெற்றோரின் விழிப்புணர்வும் கண்காணிப்புமே குழந்தைகளை காக்க சிறந்த வழியாகும். தொலைக்காட்சி, வலைதளம், செய்தித்தாள் ஆகியவற்றில் இதுபற்றிய விழிப்புணர்வு செய்திகள் அவ்வப்போது வெளியிட வேண்டும். இதனால் சமூகத்தில் விழிப்புணர்வு அதிகம் உண்டாகும். இது குழந்தைகளின் நலனுக்கு ஏற்றதாகும்.

மருத்துவமனைகளில் இதுகுறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கான மருத்துவ மனைகளில் கட்டாயம் விழிப்புணர்வு வாசகங்கள், பலகைகள் வைக்க வேண்டும். மருத்துவர்கள் பெற்றோரிடம் விழிப்புணர்வு மற்றும் இந்த விபத்துகளை தடுக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்த வேண்டும்.

பொம்மைகள் தயாரிக்கும்போது குழந்தைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுத்தாத வண்ணம் தயாரிக்க வேண்டும்.சிறிய பாகங்கள் உள்ள விளையாட்டுப் பொருட்களாக இருந்தால், அதைவைத்து குழந்தை விளையாடும்போது விழுங்கிவிட வாய்ப்பு அதிகம். இதனால், குழந்தைக்கு புரை ஏறும் வாய்ப்பு (choking hazard) உள்ளது. எனவே, அதுபோன்ற விளையாட்டு பொருட்களில் எச்சரிக்கை வாசகத்தோடு விற்பனை செய்ய வேண்டும்.

விளையாட்டுப் பொருட்களின் அட்டையின் மேல் எந்த வயதுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருள் என்பதை கட்டாயம் அச்சிட வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுத்து குழந்தைகள் நலனை காக்கும்.

தொகுப்பு: குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி