Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சக்கரே... ஏன் சக்கரே...இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

சர்ச்சைக்குரியதா சர்க்கரைவள்ளிக் கிழங்கு..?

‘‘சுகர் இருந்தா கிழங்கு சாப் பிடக்கூடாது... குறிப்பா சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடவே கூடாது” என நாம் ஒதுக்கும் ஒன்றை, ‘‘நோய், நொடி இன்றி ஆரோக்கியமாய், அதுவும் நூறு வருஷம் வாழ சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுங்க’’ என்கின்றனர் ஜப்பானியர்கள். உண்மையிலேயே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சர்ச்சைக்குரியதா? இல்லையா? வாங்க இன்றைய இயற்கை 360° பயணத்தில் தெரிந்துகொள்வோம்... ஷக்கர் கண்ட், கண்ட், பட்டேட்டா, கமோட், குமேரா, வத்தாளை கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தாவரப்பெயர் Ipomea batatas. தோன்றியது தென் அமெரிக்காவில் ஈக்வெடார் பகுதி. இதிலுள்ள ‘batata’ லத்தீன்-அமெரிக்க மொழியில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பெயர் என்பதுடன், இதிலிருந்து பெறப்பட்டதே, ‘Potato’ என்ற சொல் என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

வெள்ளை... மஞ்சள்... அடர் மஞ்சள்... ஆரஞ்சு... ஊதா நிறங்களில் தென்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பெயரில் மட்டும் சுவையில்லை. இதன் ஆரோக்கியத்திலும் இனிப்புச் சுவை நிறைந்தே இருக்கெனும் ஊட்டவியல் நிபுணர்கள் அதனை வரிசையாய் பட்டியலிடுகின்றனர்.ஒவ்வொரு நூறு கிராமிலும் 90 கிலோ கலோரி இருப்பதால், உலகின் ஐந்தாவது பிரதான உணவாய், வளர்ந்து வரும் நாடுகளின் பட்டினிக்கால உணவாய் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருக்கிறது. 100 கிராம் கிழங்கில் 20 கிராம் மாவுச்சத்து, 2 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 75 சதவிகித நீர்த்தன்மையுடன், வைட்டமின் A, B2, B6, B9, C, E மற்றும் பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், செலீனியம், மெக்னீசியம், ஃபாஸ்பரஸ், செம்பு உள்ளிட்ட அத்தியாவசிய கனிமச் சத்துகளுடன், கொழுப்புத்தன்மை இல்லாதது இதன் தனிச் சிறப்பு.

Phytonutrients எனப்படும் இதன் தாவரச்சத்தில், ஆன்த்தோ-சயனின், ஃபளேவனாயிட், ஃபீனாலிக் அமிலம், கோலின் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை குறிப்பாக ஆரஞ்சு, ஊதா நிற கிழங்குகளில் சற்று கூடுதலாகவும் காணப்படும். மிர்செடின், குவர்செடின், கெம்ஃப்ரால், லூட்டியோலின், குளோரோ ஜெனிக் அமிலம் உள்ளிட்ட சிறப்புத் தாவரச்சத்துகள், இக்கிழங்கின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகம் காணப்படும் ‘Complex carbohydrates’ என்கிற எளிதில் செரிமானம் ஆகாத மாவுச்சத்து, அதன் ‘Low Glycemic Index’ தன்மைக்கு காரணம் என்பதனாலேயே, நாம் நினைப்பது போலன்றி சர்க்கரை நோய்க்கான முக்கிய உணவாய் பரிந்துரைக்கப்படுகிறது.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துவதால், உடற்பருமன், அதிக கொலஸ்ட்ரால், கணையம், கல்லீரல், குடல் நோய்களுக்கும், பெருங்குடல் அழற்சி நோய், மலச்சிக்கல், மூல நோய்களை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.ஒரேயொரு சர்க்கரைவள்ளிக்கிழங்கில் இருக்கும் கரோட்டீன் நம் அன்றாட வைட்டமின் A தேவையை 200 சதவிகிதமும் பூர்த்திசெய்வதால், நமது சரும ஆரோக்கியத்தைக் கூட்டி, எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமை சேர்க்கின்றன.

இதன் கனிமச்சத்துகளும் வைட்டமின்களும் 25 சதவிகிதம் நமது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதுடன், இதில் செறிந்து காணப்படும் தாவரச்சத்துகள் சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை நோய்களையும், கண் நோய், சரும நோய், Emphysema போன்ற நாள்பட்ட நுரையீரல் நோய்களையும், வயோதிகத்தில் வரும் மூளைத்தேய்வு நோய்கள் வராமல் தடுக்கவும், அதன் தீவிரத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன.

கிழங்கில் இருந்து பெறப்படும் நொதிகள், குடல் பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளான லாக்னோ-பெசிலிஸ், பிஃபிடோ-பாக்டீரீயம் உள்ளிட்ட தீங்கில்லா நுண்ணுயிரிகளை (commensal microbiome) அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தைக் காப்பதுடன், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய்களைத் தவிர்க்க

உதவுவதாய் சொல்லப்படுகிறது.

ஆக்சாலிக் அமிலம் கிழங்கில் அதிகம் இருக்கின்ற காரணத்தால், பித்தப்பை, சிறுநீரகக் கற்கள், கௌட் நோய் இருப்பவர்கள் இதனை உண்பதைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேசமயம், “மிகினும் குறையினும் நோய்செய்யும்” எனும் வள்ளுவன் கூற்றுப்படி, அதிகப்படியான கிழங்கை உட்கொள்ளுதல் செரிமானமின்மை மற்றும் வயிற்றுப்போக்கை உறுதி செய்யும்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் பயன்பாட்டில் உள்ள இந்த இனிப்புக் கிழங்கு, ஆதி மனிதனின் உணவுகளில் ஒன்றாய் இருந்ததை பெரு நாட்டின் குகைகள் பறைசாற்றுகின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492ல் ஐரோப்பாவிற்குப் பிறகு உலகெங்கும் கொண்டு சேர்த்த காய்களில் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் ஒன்று.விவசாயிகளின் நண்பன் எனப்படும் இந்தக் கிழங்கு, ஏறத்தாழ 110 நாடுகளில் பயிரிடப்படுவதுடன், சீனா, மாளாவி, தான்ஸானியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உலக அளவில் அதிக விளைச்சலை மேற்கொண்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநிலங்களில் இந்தக் கிழங்கு அதிகம் விளைகிறது. குறுகிய காலத்தில் எளிதாக விளையும் தன்மை கொண்ட இதனை, வெப்ப மண்டல நாடுகள் விதைகள் மூலமும், கொடிகள் மூலமாகவும் பயிரிடுகின்றனர்.

தங்களது உணவு வகைகளில் 80 சதவிகிதத்திற்கும் மேலாக சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்க்கும் ஒகினவர்கள் ‘பர்பிள் பவர்-ஹவுஸ்’ என்றும் ‘வாழ்நாளை நீட்டிக்கும் மந்திர சக்தி’ என்றும் கொண்டாடுகின்றனர். அமெரிக்கர்களின் நன்றி நவிலல் நிகழ்வில் இந்தக் கிழங்கிற்கு கட்டாய இடமுண்டு. அமெரிக்காவின் அலபாமா, லூசியானா, நார்த் கரோலினா மாகாணங்களில் மாநிலக் காயாக கொண்டாடப்படுகிறது. ஹவாய் நாட்டில் ஆரஞ்சு, ஊதா நிற சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் பயன்பாட்டில் இருக்க, ஜப்பானியர்களின் உணவாய் ஊதா நிறக் கிழங்கு திகழ்கிறது.

ஆரோக்கியம் சார்ந்து இத்தனை சிறப்புகள் இந்தக் கிழங்கில் இருந்தாலும் ஏழைகளுக்கும் விரதம் மேறகொள்பவர்களுக்கும் ஏற்ற எளிய உணவாகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கு பார்க்கப்படுகிறது என்பதே உண்மை. வேரில் விளைகிற கிழங்கு மட்டுமன்றி, இதன் இலைகளும், தளிர்களும், தண்டுகளும் மனிதர்களின் உணவாகவும் கால்நடைகளின் தீவனமாகவும் பயனளிக்கின்றன.

வீட்டின் அறை வெப்பத்தில் 2 வாரங்களுக்கு கெடாமல் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நாம் வேகவைத்து தோல் நீக்கி உட்கொள்வது போல, வடநாட்டில் ரொட்டி, சப்பாத்தி மாவுகளில் தோல் நீக்கி கலந்து உட்கொள்கின்றனர்.

சீனா, கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் குளிர்காலச் சிற்றுண்டியாகவும், தெருவோர உணவாகவும் பிரபலமடைந்து இருப்பதுடன், சிப்ஸ், ஃப்ரை, கேக், காஸிரோல், மாஷ்ட் பொட்டேட்டோ, ஸ்மூத்தி என்றெல்லாம் பல்வேறு ரூபங்களை எடுத்திருக்கிறது.கிழங்கைத் தேர்வு செய்து வாங்கும்போது, கரும் புள்ளிகள் இல்லாத, வழுவழுப்பான சிறிய கிழங்குகளாகத் தேர்வு செய்து வாங்குவதே நல்லது. பெரிய கிழங்குகளில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.நமது வாழ்வியலில் பெரும் இணக்கத்துக்குரிய இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஒவ்வொரு நாளும் மறவாமல் உணவில் சேர்த்து ‘சக்கரே... ஏன் சக்கரே...’ என மகிழ்ந்துண்டு பயனுறுவோம்.

(இயற்கைப் பயணம் நீளும்!)

டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்