நன்றி குங்குமம் தோழி
நமது உடலுக்கு உணவு சக்தியை கொடுத்தாலும், பாதம் நம்மை பூமியில் நிலைநிறுத்தும் அஸ்திவாரம். உணவைச் சாப்பிடுவதால், உடல் ஆற்றலோடு இயங்குகிறது. அந்த ஆற்றல் நம்மைத் தரையோடு உறுதியாகப் பிணைக்க பாதங்கள் உதவுகின்றன.முகத்தில் உள்ள சருமத்தை விட உள்ளங்காலில் உள்ள தோல் சுமார் 32 மடங்கு கெட்டியானது. நமது மொத்த உடல் எடையையும் தாங்கக்கூடியது. ஆனால், இன்று பல பெண்கள் குதிகால் வெடிப்பு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். பாத வெடிப்பு ஏற்படாமல் இருக்க நாம் அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்கிறார் சரும நிபுணரான டாக்டர் ரவீந்திரன்.
குதிகால் வெடிப்பு ஏன் வருகிறது?
செருப்பே போடாமல் மண்ணிலும் கல்லிலும் விளையாடும் குழந்தைகளுக்கு பள்ளிச் செல்லும் வரை குதிகால் வெடிப்பு வருவதே இல்லை. காரணம், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் சாக்ஸ், ஷூ அணிவதால் அவர்களுக்கு பாத வெடிப்பு வருவதில்லை. ஆனால், வீட்டில் இருந்து கொண்டு வேலை செய்யும் பெண்கள் குதிகால் வெடிப்பினால் அவதிப்படுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணங்கள்:
1.சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
2.உள்ளங்காலுக்குக் கடினமான, காரத்தன்மை(Alkaline) அதிகமுள்ள சோப்பை போட்டுத் தேய்ப்பது.
3.குளிக்கும் போது உள்ளங்காலை கல்லில் தேய்ப்பது.
4.உள்ளங்காலை நார் அல்லது ஸ்க்ரப்பர் (Scrubber) கொண்டு தேய்ப்பது.
5.கடினமான வேதிப்பொருட்கள்
அதிகம் உள்ள, துவைக்கும் சோப்பு நுரையினாலும் உள்ளங்காலில் வெடிப்பு வரலாம்.
தோலின் முக்கியத்துவம்
வீட்டின் காம்பவுண்ட் சுவரைப் போன்று சருமம் நம்முடைய உடலின் ஒரு பாதுகாப்பு அரண். வெளியிலிருந்து வரும் தூசி, கிருமிகள் வீட்டிற்குள் செல்லாமல் காம்பவுண்ட் சுவர் எவ்வாறு தடுக்கிறதோ, அதேபோல் வெளிப்புறக் கிருமிகள் நமது உடலுக்குள் செல்லாமல் சருமம் நம்மை பாதுகாக்கிறது. காம்பவுண்ட் சுவரில் சிறிய ஓட்டை இருந்தால் அதன் மூலம் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வந்து ஆபத்தை உண்டாக்கிவிடும். அதுபோலத்தான், பாதத்தில் வெடிப்பு இருந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கோ, வயதானவர்களுக்கோ கிருமித்தொற்று ஏற்படலாம். இதனால் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஆபத்தான சூழ்நிலை கூட வரலாம்.
பாத வெடிப்பு வராமல் தடுப்பது எப்படி?
தண்ணீர் அருந்துதல்: நமது உடல் எடை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தண்ணீர் அருந்த வேண்டும். 20 கிலோ உடல் எடைக்கு
1 லிட்டர் தண்ணீர் அவசியம். உதாரணமாக, 80 கிலோ எடையுள்ள ஒருவர் மாலை 6:00 மணிக்குள் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், தோலில் ஈரப்பதம் இருக்காது. நீர் இல்லாமல் நிலம் வறண்டு வெடிப்பது போல், உள்ளங்கால் தோலும் வெடிக்க ஆரம்பிக்கும்.
சோப்பின் பயன்பாடு: குழந்தைகளுக்கு உபயோகிக்கும் பேபி சோப் போடும் வரை அவர்களுக்கு குதிகால் வெடிப்பு வருவதில்லை. நாமும் ஏன் அதை உபயோகிக்கக் கூடாது? குதிகால் வெடிப்புக்காக ₹200 முதல் ₹500 வரை கொடுத்து விலை உயர்ந்த கிரீம் வாங்கிப் பூசுவதை விட, பத்து அல்லது இருபது ரூபாய் கூடுதலாகச் செலவு செய்து குழந்தைகள் உபயோகிக்கும் மென்மையான சோப்பையே நாமும் உபயோகிக்கலாம்.
பராமரிப்பு முறை
உள்ளங்காலுக்கு குளியல் சோப்பையோ, துவைக்கும் சோப்பையோ போட்டுத் தேய்க்கக் கூடாது. கல்லில் தேய்க்கக் கூடாது.வெடிப்பு இருந்தால், தற்காலிகமாகக் குறைந்த வீரியமுள்ள களிம்பைத் தடவி அதை ஆற வைக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர, சுரண்டி வெடிப்பைப் பெரிதாக்கக் கூடாது.வெடிப்பு உள்ளவர்கள் ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு, சுமார் 20 நிமிடங்கள் உள்ளங்கால்களை ஊற வைக்கலாம். அப்பொழுது வெடிப்பில் உள்ள மண், அழுக்கு மற்றும் கிருமிகள் வெளியே வந்துவிடும். அதன் பிறகு வெடிப்புக்கான களிம்புகளை தடவலாம்.
துணி துவைக்கும் போது சோப் பவுடர் அல்லது லிக்விட் ஊற்றி துணிகளை ஊற வைத்தால், சிறிது நேரம் கழித்து அப்படியே அவற்றை துவைத்து அலசிப் பிழிய வேண்டும். மீண்டும் மீண்டும் துணிகளை சோப் போட்டுத் தேய்ப்பதும், அதிக நுரையை உருவாக்குவதும் முற்றிலும் தேவையற்றது. சோப்பில் உள்ள காரத்தன்மை மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்கள், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை முற்றிலுமாக உறிஞ்சிவிடும்.
அதிகப்படியான நுரையும் சோப்பு நீரும் கால்களில் படும்போது, அது பாதங்களில் உள்ள மென்மையான தோலை அரித்து, வறட்சியை ஏற்படுத்தித் தோலை உரிக்கத் தொடங்கும். எனவே, ஊறவைத்த துணிகளை தெளிவான தண்ணீரில் நன்கு அலசிப் போட்டாலே போதுமானது. இது துணிக்கும் நல்லது, உங்கள் பாதங்களுக்கும் பாதுகாப்பானது. இந்த முறைகளை பின்பற்றினால் நிச்சயமாக பாத வெடிப்பு ஏற்படாது.
தொகுப்பு: சரும நிபுணரான டாக்டர் ரவீந்திரன்


