நன்றி குங்குமம் தோழி
இயற்கை 360°
எந்தவொரு செயலிலும் சொல்லிலும் முந்திக் கொண்டு செயல்படுபவர்களை, பேசுபவர்களை “எப்பப்பாரு முந்திரிக் கொட்டையாட்டம் முந்திட்டு வந்துடறான்?” என்றுதானே நாம் அழைப்போம்.இயற்கையிலேயே பழத்தின் முன்பு முந்தி நிற்கும் இயல்பு கொண்ட முந்திரி, தனது பிற நற்குணங்களிலும் முந்தியே நிற்கிறது என்கிறது இயற்கை..! எப்படி என இயற்கை 360°யில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!
காஜூ, காஜஸ், காஜூயெரோ, அகாஜு, கோதாம்பி, ஜீடி பப்பு, கேஷுவந்தி, பரங்கி அந்தி, அந்திப்பருப்பு, ஹில்ஜி பாதாம், லென்கா பீஜா என பல்வேறு மொழிகளில் பலவிதமாக அழைக்கப்படும் Cashew எனும் முந்திரியின் தாவரப்பெயர் Anacardium occidentale.தோன்றிய இடம் தென் அமெரிக்காவில் குறிப்பாக பிரேசில். உண்மையில், Cashew, காஜூ (Caju) எனும் போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்து பெறப்பட்டது. காஜூ என்றால் பழம் என்று பொருள்படும். அதேபோல, தூபி இந்தியன் மொழியில் அகாஜூ என்றால் விதை என்று பொருள்படும்.
அடர்ந்து, உயர்ந்து வளரும் வெப்ப மண்டலத் தாவரமான முந்திரி மரங்களில், காய்த்து நிற்கும் சிவப்பு நிற முந்திரிப் பழங்களின் முன்பாக, கடினமான ஓடுகளுடன் முந்தி நிற்கும் முந்திரிக் கொட்டைகளே, உலகில் அதிகம் விரும்பி உண்ணப்படும் உலர் கொட்டைகளாகும். முந்திரிப் பழம் என்று நாம் அழைப்பது உண்மையான பழம் அல்ல. பூவின் காம்பு என்பதுடன், பழத்தின் முன்னே முந்தி நிற்கிற கொட்டைதான் பழம் என்பது இயற்கையின் அதிசயப் படைப்புகளில் ஒன்றல்லவா?!வாங்குவதற்கு விலை கூடுதலாக, அதேசமயம் உண்பதற்கு மிகவும் சுவையாக உள்ள முந்திரிக்கொட்டை, உடலுக்கு மிக அதிக நன்மைகளையே தருகிறது.
100 கிராம் வறுக்காத பச்சை முந்திரியில், 30% கார்போஹைட்ரேட், 44% கொழுப்பு, 18% புரதச்சத்து, 5% நீர்த்தன்மை நிறைந்துள்ளது. இவையனைத்தும், கிட்டத்தட்ட 533 கலோரிகளை அள்ளித்தருகின்றன. இதன் காரணமாக, ‘Power House of Energy’ என அழைக்கப்படும் முந்திரியில், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் புரதங்கள் தவிர, வைட்டமின் B1, தையமின், B2, ரிபோஃபிளேவின், B6, பயோடின், B9, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் C, E, K ஆகியனவும், உடலுக்குத் தேவையான அதி முக்கியத் தாதுக்களான பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், செலீனியம், இரும்புச்சத்து, பாஸ்ஃபரஸ் சோடியம் ஆகியனவும் நிறைந்துள்ளன.
மேலும், ப்ரோ ஆன்த்தோ சயனிடின்கள், கேட்டச்சின்கள் மற்றும் எபி-கேட்டச்சின்கள், ஃபைட்டோ ஸ்டிரால்கள், லூட்டீன்கள், அனகார்டிக் அமிலம், ஜியாசாந்தின் போன்ற தாவரச் சத்துகளும் இதில் அதிகம் காணப்படுகின்றன.முந்திரியின் சிறப்பே அதன் கொழுப்பு அமிலங்கள்தான். முந்திரியில் அதிகம் காணப்படும் ஒலிக் அமிலம் மற்றும் பால்மிட்டாயிக் அமிலம், நிறைவு பெறாத கொழுப்பு அமில வகைகளாகும்.
கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்ட இவை, அதிக கொலஸ்ட்ராலை கொண்டுவரும் இதய அடைப்பு நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன.அதிகக் கலோரிகள் மற்றும் அத்தியாவசிய சத்துகள் இதில் இருப்பதால் உடல் வளர்ச்சி, எலும்பு வலிமை, தசை இறுக்கம், ரத்த உற்பத்தி, கல்லீரல் மற்றும் குடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் பெரிதும் உதவும்.
முந்திரியில் உள்ள ப்ரோ ஆன்த்தோ சயனிடின்கள், துத்தநாகம் மற்றும் செலினியம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும், உணவு செரிமானத்திற்கும் உதவுகின்றன. மேலும், தசை இறுக்கம், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்க உதவும் முந்திரி, வயோதிகத்தில் வருகிற மூளைத்தேய்வு நோய் மற்றும் எலும்புப்புரை நோய்களுக்கு அருமருந்தாகிறது.கண் மற்றும் சரும நலனையும், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும் முந்திரி, புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது. கூடுதலாக, ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்கி, விந்து அல்லது கருமுட்டை உற்பத்தியை கூட்டி கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கிறது. குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கிய உணவாகவும் முந்திரி விளங்குகிறது.
விதைகள் மட்டுமன்றி, முந்திரிப் பழத்திலும் புரதச்சத்து, பீட்டா-கரோட்டீன்கள், அதிகளவிலான வைட்டமின் C, டானின்கள் மற்றும் நார்ச்சத்துகள் காணப்படுகிறது. புளிப்பும் துவர்ப்பும் மிதமான இனிப்பும் கலந்த பிரத்யேக சுவை கொண்ட பழத்தை, பொதுவாக நாம் உண்பதில்லை என்றாலும், உலகின் பிற நாடுகளில் இது பயன்பாட்டில் இருக்கிறது.அளவுக்கு அதிகமாக முந்திரியை உட்கொண்டால் கலோரிகள் மற்றும் எடை கூடுதல் என்பதுடன், அதன் டைரமைன் மற்றும் ஃபினைல் இத்தைல்-அமைன் உள்ளிட்ட அமினோ அமிலங்கள், செரிமானமின்மை மற்றும் தலைவலியை உண்டாக்கக்கூடும்.
முந்திரி ஓடு மற்றும் பழங்களில் அதிகமாகவும், கொட்டைகளில் சிறிதளவும் உள்ள அனகார்டிக் அமிலம், ஒருசிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சமயத்தில் மூச்சுத்திணறல் மற்றும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் உண்டாக்கக்கூடும்.10-15 முந்திரி என்பது ஒருநாளில் நமக்கான அளவாகும். நம்மிடையே, பொங்கல், பாயசம், இனிப்புப் பண்டங்கள், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட் என அனைத்திலும் முந்திநிற்கும் முந்திரிப் பருப்பை, நேரடியாகவோ அல்லது வறுத்தோ உட்கொள்ளலாம்.
பிரேசில் நாட்டில் இனிப்பும் புளிப்புமாக இருக்கும் முந்திரிப் பழச்சாறு விரும்பிப் பருகப்படுகிறது. முந்திரியிலிருந்து பெறப்படும் கேஷ்யூ பட்டர் மற்றும் தாவர எண்ணெய், மேற்கத்திய நாடுகளில் மிகப் பிரபலம்.பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸ் நாட்டினர்தான், பிரேசிலிலிருந்து கோவாவிற்கு முந்திரியைக் கொண்டு சேர்த்தனர். கோவாவிலிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என மேற்கு எல்லைகளில் பரவி, தமிழகம், ஆந்திரா, ஒடிசா என விரிவடைந்து, இன்று இந்தியா உலக அளவில் முந்திரி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது என்றாலும், கோவா வகை பெரிய முந்திரிக்கொட்டைகளே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், விரும்பி உண்ணப்படும் வகையாக உள்ளது.ஓடுகளிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுக்க தற்போது நவீனக் கருவிகள் உள்ள போதிலும், அன்றைய பிரத்யேக அடுப்புகளும் இன்றும் உபயோகத்தில் உள்ளன. பிரித்தெடுக்கப்பட்ட முந்திரிக்கொட்டைகளை, ஈரப்பதனின்றி சேமித்து வைத்தால், மாதங்கள் அல்லது வருடங்கள் வரைகூட முந்திரியை பயன்படுத்த முடியும்.
ஒரு முந்திரி மரத்தின் வயது அறுபது வருடங்கள். மரம் நடப்பட்ட மூன்று வருடங்களில் விளைச்சலைத் தரும் என்றாலும், சமயத்தில் எட்டு ஆண்டுகள்கூட எடுக்கலாம். ‘‘முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம்” என்பது கிராமத்தில் உள்ள ஒரு சொலவடை. அது, முந்திரி ஈட்டித்தரும் வருமானம் மட்டுமல்ல... முந்தித்தரும் ஆரோக்கியமும் சேர்த்துதான்.ஆம். உண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரியில், உடலுக்குத் தேவையான ஆரோக்கியமும் வாழ்விற்குத் தேவையான செல்வமும் நிறைந்தே காணப்படுகிறது. இப்படி, எல்லாவற்றிலும் இயல்பிலேயே முந்தி நிற்கிறது முந்திரி என்பதே உண்மை..!!
(இயற்கைப் பயணம் நீளும்...)
தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்


