நன்றி குங்குமம் டாக்டர்
தாய்-சேய் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு பல வெற்றிகளை அடைந்திருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் முறையான ஊட்டச்சத்தை வழங்குவதென்பது இன்னமும் ஒரு பொது சுகாதார சவாலாகவே உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான மிக எளிமையான வழிகளில் ஒன்று தாய்ப்பால் புகட்டுவதாகும். எனவேதான் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது என்கிறார் குழந்தை நல மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஹரிஷ், இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயது ஆகும் வரையிலான முதல் 1,000 நாட்கள், ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதற்குமான ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான காலகட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உடல் மற்றும் மூளையின் துரித வளர்ச்சி இக்காலகட்டத்தில் தான் ஏற்படுகிறது; ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் மிக எளிமையானது தாய்ப்பால்.
தாய்ப்பால் புகட்டுவது பொதுவாக ஒரு தனிப்பட்ட தேர்வாகக் கருதப்பட்டாலும், அதன் தாக்கம் குடும்பத்தையும் தாண்டி விரிவடைகிறது. ஏனெனில் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், தாய்மார்களின் உடல்நலத்தையும் மேம்படுத்துவதோடு, மருத்துவச் செலவுகளையும் குறைக்கிறது. இதன்மூலம், இது சமுதாயத்தின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த முதலீடாக மாறுகிறது.
தாய்ப்பாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபாடிகள் என குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசியமான அனைத்துச் சத்துகளும் சரியான விகிதத்தில் நிறைந்துள்ளன. இவை மாற்றுப் பால் (ஃபார்முலா) உணவுகளில் கிடைப்பதில்லை. குழந்தையின் உடல் தேவைகளில்ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தாய்ப்பாலின் தன்மையும் மாறுகிறது. மேலும், தாய் அல்லது குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்போது கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது வழங்குகிறது.
குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களில், அதன் நோயெதிர்ப்பு அமைப்பு வளர்ச்சியடைகிறது. அப்போது, வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகள், காது தொற்று மற்றும் பல பொதுவான நோய்களிலிருந்து தாய்ப்பால் குழந்தைகளைப் பாதுகாக்கிறது. பிரத்யேகமாக தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு, அவர்கள் வளரும்போது உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், ஒவ்வாமை மற்றும் குழந்தைப்பருவ புற்றுநோய்கள் வருவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்றும், அதன் பிறகு இரண்டு வயது வரையிலும், தேவைப்பட்டால் அதற்குப் பின்னரும் இணை உணவுகளுடன் சேர்த்துத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளது.
தாய்ப்பால் புகட்டுவதன் நன்மைகள் ஓரளவிற்குத் தெரிந்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து பிரத்யேகமாகக் கொடுப்பது சற்று சவாலானதாகவே உள்ளது. சென்னை போன்ற நகரங்களில், தாய்மார்கள் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருப்பதாலும், தாய்ப்பால் புகட்டுவதற்குத் தேவையான போதிய குடும்ப ஆதரவு இல்லாததாலும் இந்த நிலை ஏற்படுகிறது.
உடல்நலப் பயன்கள் மட்டுமல்லாமல், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் பெரிதும் உதவுகிறது. மனித மூளையின் வளர்ச்சியில் 80%-க்கும் மேல் வாழ்வின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே நிகழ்கிறது. சரியான மூளை வளர்ச்சிக்குத் தேவையான DHA போன்ற கூறுகள் தாய்ப்பாலில் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் பரிமாற்றங்கள், தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை உருவாக்குவதோடு, குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சித் திறன்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
மேலும், இதனால் தாய்மார்களுக்கும் பல நன்மைகள் உள்ளன. பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையை அதன் இயல்பு நிலைக்குச் சுருங்கச் செய்வதாலும், பிரசவத்திற்குப் பிந்தைய உதிரப்போக்கைத் தடுப்பதாலும், தாய்மார்கள் பிரசவத்திலிருந்து விரைவாக மீண்டுவரத் தாய்ப்பால் புகட்டுவது உதவுகிறது. நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான அபாயம்குறைகிறது. தாய்ப்பால் புகட்டுவது குழந்தையுடனான பிணைப்பை ஏற்படுத்துவதால், தாயின் உணர்வுபூர்வமான நல்வாழ்விற்கும் உதவுகிறது. இருப்பினும், மனநல பாதிப்புகள் உள்ள தாய்மார்கள் அதற்கான முறையான
சிகிச்சையைப் பெற வேண்டும்.
இத்தனை நன்மைகள் இருந்தபோதிலும், தாய்ப்பால் கொடுப்பது சில நேரங்களில் கடினமானதாக இருக்கலாம். பால் கொடுக்கும் போது ஏற்படும் வலி, குழந்தை மார்பகத்தைச் சரியாகப் பற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள், பால் சுரக்கும் அளவு குறித்த கவலைகள், குறைப்பிரசவம், தாயின் உடல்நலக் குறைவு, மீண்டும் வேலைக்குச் செல்வது போன்ற காரணங்களால் தாய்மார்கள் தாங்கள் திட்டமிட்டதை விட முன்னதாகவே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த நேரிடுகிறது. மேலும், குடும்பத்தினரிடமிருந்தும் சமூக ஊடகங்களிலிருந்தும் முரண்பாடான கருத்துக்களும் வரலாம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாய்ப்பால் ஆலோசகர்களின் தொழில்முறையான ஆலோசனைகள், தாய்மார்கள் இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்கப் பெரிதும் உதவும்.
அதே சமயம், தங்கள் உடல்நலப் பிரச்னைகள் அல்லது தவிர்க்க முடியாத பிற காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களும் உள்ளனர். அத்தகைய குடும்பங்களுக்கு எவ்வித எதிர்மறை எண்ணங்களும் விமர்சனங்களுமின்றி, முறையான மருத்துவ வழிகாட்டுதல்களும் மாற்று வழிகளும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான மற்றும் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதே முதன்மையான மற்றும் முக்கியமான நோக்கமாகும்.
தாய் மற்றும் குழந்தைகளின் சுகாதார நிலையில் தமிழ்நாடு ஏற்கெனவே பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இருப்பினும், தாய்ப்பால் புகட்டும் நடைமுறைகளை மேம்படுத்துவது, குழந்தைகளின் ஆரோக்கியத்தை இன்னும் சிறப்பாகக் கட்டியெழுப்ப ஒரு சிறந்த வழியாக அமையும். ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் தாய்ப்பால் புகட்டுவதைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் மருத்துவ நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பணி வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும். தாய்மார்களுக்கு தேவையான போதிய அறிவு, ஊக்கம் மற்றும் ஆதரவு கிடைத்தால், தாய்ப்பால் புகட்டுதல் மூலமாகத் தாய்க்கும் குழந்தைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் சிறப்புகளும் கிடைக்கும்.
தொகுப்பு:- குழந்தைகள் நல மருத்துவர் ஹரிஷ்



