நன்றி குங்குமம் டாக்டர்
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரிசையில் கவனம் பெற்று வருபவர் பவ்யா திரிகா. ‘கதிர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, ‘ஜோ’ ‘இடி மின்னல் காதல்’, ‘ஜின் தி பெட்’, ‘பன் பட்டர் ஜாம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல அடையாளம் கிடைத்தது. சமீபத்தில் இவர் நடித்துள்ள சிக்னல் அட் 11.30 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. திரையில் ஒரு நடிகையின் நடிப்பு மட்டுமின்றி, அவரது தோற்றம், உடல்மொழி, சுறுசுறுப்பு ஆகியவையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் பவ்யா திரிகாவின் இயல்பான தோற்றமும் துடிப்பான திரை இருப்பும் அவருக்கு தனி கவனத்தைப் பெற்றுத் தருகின்றன. பவ்யா திரிகாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
வொர்க்கவுட்ஸ்: பொதுவாக, நடிகைகளுக்கு படப்பிடிப்பு நேரம் அவ்வப்போது மாறுபடுவதால், நீண்ட நேரம் வேலை செய்வது, பயணம் செய்வது, வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் தோற்றத்தை மாற்றுவது போன்ற சவால்களும் இருக்கின்றன. அதிலும், நான் சூட்டிங் இல்லாத சமயங்களில் டயட் கடைபிடிப்பதில்லை எனவே, தினசரி வொர்க்கவுட்டை கட்டாயமாக கடைபிடித்து வருகிறேன்.
அந்தவகையில், கார்டியோ பயிற்சிகள் (Cardio): உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கவும், சுறுசுறுப்புடன் இருக்கவும் தினமும் எளிய கார்டியோ பயிற்சிகள்.
யோகா மற்றும் தியானம் (Yoga & Meditation): படப்பிடிப்பு அழுத்தங்களைக் குறைத்து, மன அமைதியைப் பெற தவறாமல் யோகாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது,
ஸ்ட்ரெச்சிங் (Stretching): நீண்ட நேரம் நின்றுகொண்டு நடிக்கும்போது ஏற்படும் உடல் சோர்வைத் தடுக்க முறையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்வது.
மேலும், ஜிம் செல்ல முடியாத பிஸியான நாட்களில், படப்பிடிப்பு தளத்திலேயே எளிய நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
டயட்: நான் முன்பு சொன்னது போன்று, சூட்டிங் இல்லாத சமயங்களில் டயட் கடைப்பிடிப்பதில்லை. ஏனென்றால், நான் ஒரு ஃபுட்டி. இனிப்புகள் மிகவும் பிடிக்கும். ஸ்வீட் பாக்ஸை பார்த்தாலே நான் டெம்ட் ஆகிவிடுவேன். அவ்வளவு பிடிக்கும். ஆனால், திரைத்துறைக்கு வந்தபிறகு, இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்தினேன். இப்போதெல்லாம் ரொம்பவும் ஆசையாக இருந்தால் ஒன்றோ, இரண்டோ சாப்பிடுகிறேன் அவ்வளவுதான். அதேசமயம், ஏதாவது படம் கமிட் ஆகிவிட்டேன் என்றால், அதற்கு ஏற்றவாறு உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பேன். ஏனென்றால், நான் நன்றாக சாப்பிடுவதால், உடனே உடல் எடை கூடிவிடும். அதனால், தினசரி ஒர்க்கவுட்டை
கட்டாயமாக கடைபிடிக்கிறேன். அந்தவகையில், காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான வெந்நீரில், எலுமிச்சை சாறு கலந்து குடிப்பேன். அடுத்த நாள் க்ரீன் டி எடுத்துக் கொள்வேன். அதற்கடுத்த நாள் லவங்க டீ குடிப்பேன். இது தவிர்த்து, ஊட்டச்சத்துக்காக தினசரி கட்டாயமாக காலையில், ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ் எடுத்துக் கொள்வேன். அதுபோன்று, மதிய உணவில் காய்கறிகள் நிறையவும், சாதம் மிக மிக குறைவாகவும் எடுத்துக் கொள்வேன். அதுபோன்று, ஜங்க் உணவுகளை கட்டாயமாக தவிர்த்துவிடுகிறேன். இதுதவிர, பெரும்பாலும் ஆரோக்கியமான, எண்ணெய் குறைவான வீட்டு உணவுகளையே அதிகம் எடுத்துக் கொள்கிறேன். அதுபோன்று சருமப் பொலிவிற்கும், உடல் சோர்வை நீக்கவும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால், குறைந்தது தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடித்துவிடுவேன்.
பியூட்டி டிப்ஸ்: காலையில் எழுந்ததும் முகம் கழுவியதும், கிளன்ஸர் போட்டு முகம் கழுவி விட்டு ஏதாவது ஒரு க்ரீம் போட்டுக் கொள்வேன். அது போன்று இரவு படுக்க போகும் முன்பு முகத்தை நன்றாக கழுவிவிட்டு, விட்டமின் ஈ கப்சூலை நான் பயன்படுத்தும் முகக் க்ரீமுடன் கலந்து முகத்தில் தடவிக் கொள்வேன். அது முகத்திற்கு நல்ல பளபளப்பை கொடுக்கும். இது தவிர, பெரும்பாலும் எனது ஸ்கின்கேருக்கு, இயற்கையான பொருள்களையே பயன்படுத்துவேன்.
உதாரணமாக, கண்ணுக்கு பயன்படுத்தும் காஜலை நானே வீட்டில் செய்து கொள்வேன். சிறிதளவு பாதாமை எடுத்து நெய்யில் கருக வறுத்து அதை பொடித்து வைத்துக் கொண்டு கண்ணுக்கு இட்டுக் கொள்வேன். அதுபோன்று வெளியே, சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும், சன்ஸ்கிரீன் கட்டாயமாக பயன்படுத்துவேன். மாய்ஸுரைஸர் போட்டுக் கொள்வேன். அதுபோன்று ஆலுவேரா ஜெல் பயன்படுத்துவேன். இப்படி சரும பாதுகாப்புக்கு தேவையானதை செய்து கொள்வேன்.
தொகுப்பு:- ஸ்ரீ தேவி குமரேசன்


